Published:Updated:

விழுந்து கிடக்கும் டெல்டா... நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்த கரங்கள்! #GajaCyclone

விடாத மழையிலும் மக்களுக்கு உணவு தயாரித்து கொடுத்த இவர்களைப் போன்றவர்களால்தான் கொஞ்சமேனும் டெல்டா மக்களுக்கு ஆறுதலளிக்க முடிகிறது.

விழுந்து கிடக்கும் டெல்டா... நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்த கரங்கள்! #GajaCyclone
விழுந்து கிடக்கும் டெல்டா... நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்த கரங்கள்! #GajaCyclone

ட்டு மொத்த டெல்டா மக்களும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அடுத்த வேளை தன்னுடைய பிள்ளைகளுக்கு உணவு இருக்காது என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். விடிந்தால் வீடு இருக்காது. கண் விழித்தால் மரம் இருக்காது என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்க முடியாதொன்றை நிகழ்த்துவதுதானே இயற்கையின் நியதி?

புயல் தாக்கிய இரண்டாவது நாள் 17-ம் தேதி திருத்துறைப்பூண்டி அருகில் ஆற்றங்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். சாலை முழுக்க மரங்கள் விழுந்து கிடந்தன. அங்கிருந்த வீடுகள் எல்லாமே புயலில் கூரைகளை இழந்தும், சுவர்களுக்குள் இடிந்தும் கிடந்தன. அங்கிருந்த ஒரு பெண்ணும் அவரது மகளும் மழையில் நனைந்த அரிசியை வெளியில் வைத்துக் காய வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது வீட்டை உள்நுழைந்துப் பார்த்து விட்டு அவர்களின் வீட்டையும் அவர்களையும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் புகைப்படம் எடுக்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு 10-ம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ``எங்க அப்பா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நெறய பேர்கிட்ட கடன் வாங்கித்தான் வேலைக்கு வெளி நாடு போயிருக்காரு, நீங்க போட்டோ எடுத்து அத எங்க அப்பா பார்க்க நேர்ந்தால் உடனே திரும்பி வந்துடுவார், நாங்க சமாளிச்சிக்கிறோம் போட்டோ எடுக்காதீங்க” என்றார். இப்படித்தான் பல பேருடைய வாழ்க்கையைப் புயல் திருப்பிப் போட்டுவிட்டு போயிருக்கிறது. அழுது கொண்டே பேசிய அவர்களின் அடுத்த நாள்களைப் பற்றி என்னால் யோசிக்கவே முடியவில்லை. நிகழ்காலம் எதிர்காலம் பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் தொலைத்து நின்ற மக்களைத் தமிழகம் கைகொடுத்து மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது. எப்படி?

21-ம் தேதி மாலை 6 மணிக்கு சேதுபாவா சத்திரம் பக்கத்தில் இருக்கிற கார்குடாவில் செயல்படும் புயல் நிவாரண மையத்துக்குச் சென்றிருந்தேன். ஆண்கள் பெண்கள் என 500 பேருக்கும் மேலாக இருந்தார்கள். நிவாரணப் பொருள்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்குதான்னு கேட்டதற்கு ``நாளைக்குக் காலையில் இங்க இருக்க யாருக்கும் சாப்பாடு இல்லை என்கிற தகவல் கிடைத்தது. சாப்பாடு இல்லனாலும் பரவால்ல, பிள்ளைகளுக்குப் பால் மட்டும் வாங்கிக் குடுங்க எனக் கோரிக்கை வைத்தார்கள். தன்னார்வத் தொண்டர்கள் பலருக்கும் தகவலைச் சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். அடுத்த பத்து நிமிடங்களில் பட்டுக் கோட்டையில் பால் பண்ணை வைத்திருக்கிற ஒருவரின் எண்ணை நண்பர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பகிர்ந்திருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு ``சார் நாளைக்குக் கார்குடா முகாமுக்கு 30 லிட்டர் பால் தேவைப்படுகிறது" என்று சொன்னதும், ``சார் எனக்குச் சொந்தமா பால் பண்ணையெல்லாம் இல்ல, நானும் சாதாரண ஆள்தான், புயல் அடித்த அடுத்த நாள் எங்கயும் எந்தப் பொருளும் கிடைக்கல, அதனால நானே என் காசப் போட்டுப் பால் வாங்கி, குழந்தைகள் இருக்க வீட்டுக்குக் குடுத்துட்டு இருந்தேன். கைல இருக்க காசெல்லாம் முடிஞ்சிருச்சு. ஆனாலும் அந்த முகாமுக்கு நான் 30 கால் லிட்டர் பால் பாக்கெட் தரேன். என்னால அங்க கொண்டு வந்து தர முடியுமான்னு தெரியல. காலைல 7 மணிக்கு யாரையாவது வந்து வாங்கிக்கச் சொல்லுங்க" என்கிறார். அவருடைய எண்ணையும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்தேன்.

இதற்கிடையில் அடுத்த நாள் காலையில் முகாமில் இருக்கிற யாருக்கும் உணவில்லை என்கிற தகவல் எல்லாத் தளங்களிலும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. தகவல் அறிந்த பலரும் உதவ முன்வந்தார்கள். எப்படியும் உதவி கிடைத்துவிடும் என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவந்தேன். இரவு 9 மணிக்கு முகாமிலிருந்து அழைத்த கிராமத்தின் தலைவர் ``தம்பி காலையில் சாப்பாடு ஒருத்தர் கொண்டு வந்து தரேன்னு சொல்லிருக்காரு என்கிறார். அடுத்த நாள் காலை 7 மணிக்குப் பட்டுக்கோட்டையிலிருந்து 30 பாக்கெட் பால் பாக்கெட்டுகளை முகம் தெரியாத யாரோ ஒரு நண்பர் கார்குடா முகாமுக்குக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போயிருந்தார். காலை 8 மணி அளவில் தொண்டியிலிருந்து இரண்டு அண்டாக்களில் உணவு கார்குடா முகாமுக்கு வந்து சேர்ந்தது. அதில் ஒரு அண்டாவை அங்கிருந்த சுமோ காரில் ஏற்றிக் கொண்டு கிராமத் தலைவர் வேறொரு சாலையில் சென்றார். அவரைப் பின் தொடர்ந்து சென்றதில் கார்குடாவிலிருந்து 10 கிலோ மீட்டர்கள் தள்ளி ஊருக்குள் இருந்த மறக்காவலசை கிராமத்தில் செயல்படும் முகாமுக்கு வந்து சேர்ந்தது. நான் பின் தொடர்ந்து வருவதை அறிந்து கொண்ட கிராமத் தலைவர் ``சார் நாங்க ரோட்டுக்குப் பக்கத்துல இருக்கதால எல்லா நிவாரணப் பொருள்களும் எங்களுக்கு கிடைக்குது. ஆனா இங்க இருக்க முகாமுக்கு இதுவரை எந்தப் பொருள்களும் வந்து சேரல, அதான் எங்களுக்கு கிடைக்கிறதுல பாதி பொருள்களை இந்தக் கிராம மக்களுக்குக் கொடுத்து உதவி பண்ணுறோம்” என்கிறார். தூக்கி எறியப்படும் நேரங்களில்தான் சிறகு விரிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பார்கள். மக்கள் இப்படித்தான் டெல்டா மாவட்டங்களை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுக்க நிவாரணப் பொருள்களை குழுக்களாகவும், தனி மனிதர்களாகவும் சேகரித்துப் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களின் சாலைகள் எங்கும் நிவாரணப் பொருள்களைச் சுமந்து செல்லும் வாகனங்களைப் பார்க்க முடிந்தது. சிலர் டெல்டா மாவட்டங்களில் மையங்கள் அமைத்து நிவாரணப் பொருள்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். திருத்துறைப்பூண்டியில் `லவ் குரு' ராஜவேல் நாகராஜ் அவர்களும், தஞ்சையில் இனியன் ஆன்மன் இருவரும் முத்துப்பேட்டையில் சபரிநிவாஷ் என்பவரும், கும்பகோணத்தில் வசந்த் குமார் என்பவரும் பொருள்களை பெற்றுப் பல பகுதிகளுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் ஆன்மன் என்பவர் கேரளா வெள்ளத்தின் போது கல்பேட்டாவில் மையம் அமைத்து தமிழகத்திலிருந்து கேரளா மக்களுக்கு நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துப்பேட்டையைச் சேர்ந்த சபரிநிவாஷ் என்கிறவர் புயல் பாதித்த அடுத்தநாள் வெளிநாட்டிலிருந்து உடனடியாக முத்துப்பேட்டைக்கு வந்துள்ளார். தன்னுடைய வீட்டிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருளையும், பல ஆயிரம் பேருக்கு உணவு சமைத்தும் கொடுத்து உதவி செய்திருக்கிறார்.

இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒவ்வொரு நாளும், ``1000 பேருக்கு உணவு தயாராக இருக்கிறது, தகவலை எல்லோருக்கும் சேருங்கள்" எனப் பதிவிட்டுக்கொண்டே இருந்தார். விடாத மழையிலும் மக்களுக்கு உணவு தயாரித்து கொடுத்த இவர்களைப் போன்றவர்களால்தான் கொஞ்சமேனும் டெல்டா மக்களுக்கு ஆறுதலளிக்க முடிந்தது. இவருக்கு உறுதுணையாகத் தேவையான பொருள்களையும் உதவிகளையும் துபாயில் இருக்கிற புவன் என்பவர் ஒருங்கிணைத்துக் கொடுத்திருக்கிறார். ராஜவேல் தன்னுடைய இல்லத்தை மையமாக வைத்து உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரது ஊர் இளைஞர்கள் பலரும் பொருள்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து பலரும் தங்களின் உடல் உழைப்பையும் பண உதவிகளையும் முகம் தெரியாத மக்களுக்காகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் நிவாரணப் பொருள்களைச் சேகரித்து தினம் நூறு வாகனங்கள் டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. எல்லாப் பேரிடர்களை போலவே இந்தப் பேரிடரிலும் சமூக வலைதளங்கள் பல வகையிலும் உதவியாக இருந்தன. எங்கே என்ன தேவை என்கிற தகவல் பகிரப்பட்ட அடுத்த நொடியே உதவி செய்ய காத்திருந்த எல்லோருக்கும் உடனடியாக கொண்டு சேர்க்க முடிந்தது. சென்னை வெள்ளம், தானே புயல், கேரளா வெள்ளம் என எங்கே பேரிடர் என்றாலும் மனிதம்தான் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களை தூக்கி நிறுத்துகிறது. இப்படி, தனி மனிதன் எவ்வளவு உதவிகள் செய்து அவர்களுக்குக் கை கொடுத்தாலும் அவர்களை முழுவதுமாக தூக்கி நிறுத்துவது அரசின் கைகளில்தான் இருக்கிறது. 

பிடுங்கி எறியப்பட்ட தென்னை மர வேர்களைத் தாண்டி டெல்டா மக்கள் மீண்டும் வேர்ப் பிடித்து வர வேண்டும். மீண்டும் வேர்விட வேண்டும் என்கிற மனிதர்களின் கனவில் என்னவெல்லாம் நிகழுமோ அவை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. துளிர் விடுகிற நம்பிக்கையை விட வேர் விடுகிற நம்பிக்கையை ஒட்டு மொத்த தமிழகமும் அவர்களுக்குள் விதைத்திருக்கிறது.