Published:Updated:

``நாளைக்கு சாப்பாடு போடமாட்டீங்களானு கேட்டாங்க!’’ - டெல்டா மக்களின் பசியாற்றும் தேன்மொழி

`நிவாரணப் பணிகளின்போது அந்தந்த பகுதிகளில் திடீர்த்தலைவன்கள் தோன்றி, நம்மிடமிருக்கும் பொருள்களை விநியோகிப்பதாகக் கூறி பதுக்கல் வேலையில் ஈடுபடுவார்கள். இதைத் தவிர்ப்பதற்காக நானே நேரடியாக உணவு சமைத்துப் பரிமாறும் பணியைச் செயல்படுத்தி வருகிறேன்.’

``நாளைக்கு சாப்பாடு போடமாட்டீங்களானு கேட்டாங்க!’’ - டெல்டா மக்களின் பசியாற்றும் தேன்மொழி
``நாளைக்கு சாப்பாடு போடமாட்டீங்களானு கேட்டாங்க!’’ - டெல்டா மக்களின் பசியாற்றும் தேன்மொழி

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை' என்ற திருக்குறளுக்கு அர்த்தம் தருவதுபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து உணவு சமைத்துப் பகுத்துண்டு வருகிறார் தேன்மொழி அண்ணாதுரை. ஃபேஸ்புக்கில் 'நான் ராஜாமகள்' என்ற பெயரில் அறியப்பட்டவர். 

திருச்சிக்கு அருகிலுள்ள தென்கடைகுறிச்சியைச் சேர்ந்த இவரது வாழைத்தோட்டத்திலுள்ள சுமார் 280 வாழை மரங்களும்கூட கஜா புயலால் வீழ்ந்து ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனினும், அதுகுறித்துக் கவலைப்படாமல், வாழ்வின் விளிம்புநிலை மக்களுக்குக் கைகொடுக்கும் நோக்கோடு தொடர்ச்சியாக நிவாரணப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கஜா புயல் வீசியதற்கு மறுநாள் இரவே, தார்ப்பாலின், மெழுகுவத்தி, பிரெட், பன், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களோடு உணவு சமைக்கத்தேவையான அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்களையும் அள்ளிக்கொண்டு தனது வாகனத்தில் அதிராம்பட்டினம் கிளம்பிச் சென்றார் தேன்மொழி.

கூடுதலாக, தனது தோட்டத்தில் வீழ்ந்த வாழைக்குலைகளையும் உணவுக்காக எடுத்துச் சென்றார். வீடு இழந்தவர்களுக்குத் தார்ப்பாலின் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை விநியோகித்த கையோடு, காலை, மதியம், மாலை என மூன்று வேளையிலும் உணவு சமைத்து வழங்கினார். பின்னர், அங்கிருந்து பெருமகளூர், பேராவூரணி, சோழகனார் வயல், எட்டுப்புள்ளி, மகிழம்கோட்டை, ஏரிக்கரை குப்பம், திட்டக்குடி, வலையன்வயல், கூத்தாடிவயல், பாப்பான்கொல்லை, சோலைக்காடு, கரையூர் தெரு, தோப்புக்குடியிருப்பு எனப் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கடந்த இரண்டு வாரங்களாக அங்குள்ள மக்களுக்கு உணவு சமைத்து வழங்கிவருகிறார். 

இப்படி நிவாரண உதவி செய்யும் எண்ணம் ஏற்பட்டது குறித்தும், களப்பணியில் அவரது அனுபவங்கள் குறித்தும் கேட்டபோது, ``2015-ல் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், ஹெலிகாப்டரிலிருந்து வீசப்படும் உணவுப் பொட்டலங்களுக்காகக் கையேந்திய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்ததும் மனது வலித்தது. உடனே எங்களுடைய வீட்டில் 1,000 சப்பாத்தி செய்து, வீட்டிலிருந்த அரிசியில் புளி சாதம் செய்து எடுத்துக்கொண்டு சென்னைக்குச் சென்று நிவாரண உதவி செய்தேன். டெல்லியிலிருந்த நண்பர் ஷாஜஹான், எனது நிவாரணப்பணி குறித்து, எனது பிறந்தநாள் அன்று வாழ்த்தோடு முகநூலில் பதிவிட்டார். உடனே நிறைய பண உதவிகள் கிடைத்தன. அவற்றைக்கொண்டு, சென்னையில் 2 நாள்களும், கடலூர் பகுதியில் 6 நாள்களுமாகத் தொடர்ந்து 8 நாள்கள் நிவாரண உதவியில் ஈடுபட்டேன். இந்தப் பணியின்போது ஷாஜஹான் அண்ணாவும் எங்களோடு இணைந்துகொண்டார்.

தற்போது கஜா புயல் பாதிப்பிலும் ஷாஜஹான் அண்ணா தொடர்ந்து, தன் நண்பர்கள், நன்கொடையாளர்கள்மூலம் பண உதவிகளைப் பெற்றுத்தருவது, நிவாரணப் பொருள்கள் எங்கே தரமாகவும் நியாயமான விலையிலும் கிடைக்கிறது என்பதை அறிந்து சொல்வது, எந்தப் பகுதி மக்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது என்பதையும் அறிந்து, டெல்லியில் இருந்தபடியே எங்களுக்கு வழிகாட்டி வருகிறார். மேலும், ஆன்மன், இனியன் ஆகிய முகநூல் நண்பர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களப்பணியாற்றுவதோடு, என்னோடும் தொடர்பிலிருந்தபடி, நான் சரியானபடி செயல்படவும் உதவுகிறார்கள். இவர்களின் ஆதரவையும் வழிகாட்டலையும் நான் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதேபோல என் குடும்பத்தினரும் எனக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்துவருகிறார்கள்.

நிவாரண உதவிகளைப் பொறுத்தவரை அரிசி, பருப்பு எனப் பொருள்களாகக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், நிவாரணப் பணிகளின்போது அந்தந்த பகுதிகளில் திடீர்த்தலைவன்கள் தோன்றி, நம்மிடமிருக்கும் பொருள்களை விநியோகிப்பதாகக்கூறி பதுக்கல் வேலையில் ஈடுபடுவார்கள். இதைத் தவிர்ப்பதற்காக நானே நேரடியாக உணவு சமைத்துப் பரிமாறும் பணியைச் செயல்படுத்தி வருகிறேன். அரிசிச் சிப்பம், ரவை மூட்டை, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருள்களோடு, சமைக்க உதவும் பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர், விறகுகள் உள்ளிட்ட மொபைல் கிச்சனோடு தான் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றேன். காலையில் உப்புமா, மதியம் கூட்டு, பொரியலோடு சாம்பார், ரசம் வைத்து சாப்பாடு, இரவில் உப்புமா எனச் செய்து சுடச்சுட பரிமாறினேன்.

இயற்கைப் பேரிடர் சூழலிலும் ஜாதிப்பிரிவினை இருப்பதையும் காணமுடிகிறது. எவ்வித நிவாரண உதவியும் எட்டாத, ஒதுக்கப்பட்ட மக்களுக்கான பகுதி ஒன்று ஒவ்வோர் ஊரிலும் இருக்கும். நான் அந்தப் பகுதி மக்களைத்தான் தேடிச் சென்று உணவு சமைத்துப் பரிமாறி வருகிறேன். ``இப்படி சூடா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுங்க'' என்று அந்தப் பகுதி மக்கள் சொல்வதைக் கேட்கையில் நெகிழ்ச்சியாக இருக்கும். தொடக்கத்தில் சமையல்காரர் ஒருவரையும் அழைத்துச் சென்றேன். ஆனால், அவருக்குத் தரும் 3,000 ரூபாயில் இரவுச் சாப்பாட்டுக்கான பட்ஜெட்டை முடித்துவிடலாமென்று தோன்றியதால் சமையல்காரரை நிறுத்திவிட்டு, அந்தந்த பகுதி மக்களை உடன் இணைத்துக்கொண்டு சமையல் செய்யத் தொடங்கினேன். ஒரு நாளுக்கு 4 சிப்பம் அரிசி, 20 கிலோ பருப்பு, காய்கறிகள் செலவாகின்றன. பருப்பு வாங்கப் பணப்பற்றாக்குறை ஏற்பட்டால், கீரை, தக்காளிச்சாதம் என்றெல்லாம் மாற்றிச் சமைப்பேன். 

ஒருநாள் காலையில் முதியவர் ஒருவர் மிகுந்த நடுக்கத்தோடு காலை உணவுக்காக வந்து நின்றார். அவரால் பசி பொறுக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி வராததால், இருட்டும் முன்பே இரவுச்சமையலை முடித்து 7 மணிக்கெல்லாம் இரவு உணவு பரிமாறிவிடுவேன். எனவே, நீண்ட இரவு நேரத்துக்கு உப்புமாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று புரிந்தது. மறுநாளே காலையில் கூட்டு பொரியலோடு சாப்பாடு, மதியம் உப்புமா, இரவில் ஒரு கூட்டு, ரசம், சோறு என்று மெனுவை மாற்றிவிட்டேன். இரவிலும் காலையிலும் சாப்பாடு சாப்பிடுவதால் அவர்களால் பசி பொறுத்துக்கொள்ள முடிந்தது. 

ஓர் ஊரில் இரவுச் சாப்பாடு முடிந்ததும் என்னைச் சந்தித்த ஒருவர், "இனி நாளைக்கு சாப்பாடு போடமாட்டீங்களா?" என்று பரிதாபமாகக் கேட்டதால், ``நாளைக்கும் சமைத்துப் போடுகிறேன்" என்று ஒரே ஊரில் இரண்டு நாள்கள் தங்கியும் சமைத்துப் பரிமாறியிருக்கிறேன். வாகனத்தின் டீசல் செலவை மிச்சபடுத்துவதற்காகவும் ஒரே ஊரில் தங்கியபடி சுற்றியுள்ள நான்கைந்து ஊர்களுக்குச் சேர்த்தும் சமையல் செய்திருக்கிறேன். அந்தந்த பகுதி மக்களோடு பேசிப்பழகிவிடுவதால், யார் வீட்டிலாவது இரவு தங்கிவிட்டு மறுநாள் விடிகாலையிலேயே அடுத்த ஊருக்குச் சென்றுவிடுவேன். தொடர்ந்து ஊர்ஊராகச் சுற்றுவதால் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறைதான் குளிக்கக்கூட முடிகிறது. புதிய உடைகளை எடுத்துச் செல்வதற்காக மட்டும் இடையே ஒருநாள் மட்டும் எனது வீட்டுக்கு வந்து திரும்புவேன்.

புயலால் உடைமைகளை இழந்ததோடு மன உறுதியையும் இழந்த மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தன்னம்பிக்கையூட்டுவேன். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு இனி என்ன செய்வது என்று வருந்தினால், அவர்களின் படிப்புக்கும் உதவி செய்வதாகக் கூறி, அதற்கான ஏற்பாட்டையும் ஷாஜஹான் அண்ணா மூலமாக ஏற்பாடு செய்கிறேன். புயலால் பாதித்த மக்களுக்கு விவசாயக் கடன், நகைக்கடன் போன்றவற்றை ரத்து செய்வது குறித்து மட்டுமே பலரும் பேசி வருகிறார்கள். இதுமட்டுமே போதாது. கிராமப்புறப் பெண்கள், குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கான கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். இவர்களின் பணக்கஷ்டத்தைச் சாதகமாக்கி, ஆசை வார்த்தைகூறி அதிக வட்டிக்குக் கடன்வாங்க வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கடன்கள் ரத்து செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் இவர்களுக்காக நிவாரண உதவியில் ஈடுபடும் பலரும் இணைந்து கூட்டம் கூட்டமாகப் பொது இடங்களில் பிச்சையெடுக்க இருக்கிறோம். இதை அரசு அவமானமாகக் கருதினால் உடனே கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் தீர்க்கமாக.