Published:Updated:

'தமிழர்களின் பாரம்பர்ய ரகங்களை தேடித்தேடிச் சேகரித்தவர்!' - நெல் ஜெயராமன் நினைவலைகள்

’விதைகள் உறங்கினாலும், விதைத்தவன் உறங்குவதில்லை’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார், ’நெல்’ ஜெயராமன். இவர் பரப்பிய பாரம்பர்ய நெல்லின் ஒவ்வொரு விதையிலும் நெல் ஜெயராமன் நீடித்திருப்பார்.

'தமிழர்களின் பாரம்பர்ய ரகங்களை தேடித்தேடிச் சேகரித்தவர்!' - நெல் ஜெயராமன் நினைவலைகள்
'தமிழர்களின் பாரம்பர்ய ரகங்களை தேடித்தேடிச் சேகரித்தவர்!' - நெல் ஜெயராமன் நினைவலைகள்

ம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல நெல் ரகங்கள், நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்கு வழக்கொழிந்து விட்டன. பசுமைப்புரட்சியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டார், நம்மாழ்வார். அவருடன் சில மாதங்கள் சில இளைஞர்கள் குழுவாகப் பயிற்சி பெறுவது வழக்கம். அப்படி டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில் நம்மாழ்வார் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் 'நெல்' ஜெயராமன். ’நெல்’ ஜெயராமன் என்ற பெயரைச் சொன்னால் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். அப்போலோ மருத்துவமனையில் கடந்த சில நாள்ளாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் இன்று இயற்கையோடு கலந்துவிட்டார்.

பாரம்பர்ய நெல் சார்ந்து பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தவர். இவரின் இயற்பெயர் இரா. ஜெயராமன். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா விவசாயியாக இருந்தபோதும், இவரது ஆரம்பக்கால வாழ்க்கையை விவசாயியாகத் துவங்கவில்லை. காரணம், இவருக்கு இருந்த கடன்கள்தான். அதற்காக தமக்கு இருந்த விவசாய நிலங்களை விற்று கடனை அடைத்துவிட்டு, திருத்துறைப்பூண்டியில் உள்ள அச்சகத்தில் தொழிலாளியாக வேலையைத் துவக்கினார், இரா.ஜெயராமன். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். 

சுவாமி மலைக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்திருந்த நேரம், அவருடைய பேச்சைக் கேட்டு, அச்சக வேலைக்கு 'குட்பை' சொல்லிவிட்டார். அதுமுதல் வேளாண் தொழிலுக்கு வந்துவிட்டார். இப்படித்தான் ஒரு விவசாயியாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ம் ஆண்டு பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புஉணர்வு நடைபயணத்தில் பங்கேற்றார், இரா.ஜெயராமன். அந்த பயணத்தின்போது விவசாயிகள் நம்மாழ்வாருக்கு பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகள் வழங்கியுள்ளனர். அதனை நம்மாழ்வார் இரா.ஜெயராமனிடம் கொடுத்து அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்பச் சொன்னார். அன்று முதல் மறைவதற்கு சில நாள்களுக்கு முன்பு வரைக்கும் பாரம்பர்ய நெல்லை மீட்கும் பயணத்தில் சிறப்பாக செயல்பட்டார். 

2005-ம் ஆண்டு கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கும்பளங்கி எனும் கிராமத்தில் தணல் அமைப்பு சார்பில் ’நமது நெல்லைக் காப்போம்’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. அதில் நெல் ஜெயராமன் கலந்து கொண்டபோது, கேரளா விவசாயிகள், அவர்களின் பாரம்பர்ய நெல்லைப் பற்றி பேசும்போது, நம்முடைய பாரம்பர்ய நெல்கள் எல்லாம் என்ன ஆயிற்று என்று எண்ணியிருக்கிறார். அப்போதிருந்தே தமிழக விவசாயிகள் பலரிடமும் நேரில் சென்றும் நெல் சேகரிக்க தொடங்கியுள்ளார். இப்படி பல வழிகளில் நெல் சேகரிக்க பாடுபட்டதால்தான், இன்று பலராலும் ’நெல்’ ஜெயராமன் என அழைக்கப்படுகிறார். இதுவரைக்கும் ஏராளமான பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்திருக்கிறார். விவசாயிகளிடம் இருந்து விதைநெல்லாக மட்டுமல்லாமல், நெல் நாற்றுகளாகவும் வாங்கி வந்து நடவு செய்தும் பாரம்பர்ய ரகங்களை மீட்டெடுத்தவர். 

அதற்கான சுவாரஸ்யமான ஒரு கதையும் இருக்கிறது. ஒரு சமயம் பனங்காட்டுக் குடவாழை நெல்லைத் தேடி அலைந்திருக்கிறார். அந்த நெல், கடலோர மாவட்டங்களில் விளையும் தன்மை கொண்டது. வேதாரண்யம் பக்கத்தில் இருக்கும் ஒரு விவசாயி வைத்திருப்பது கேள்விப்பட்டு அங்கே சென்றிருக்கிறார். நெல் ஜெயராமன் விவரம் சொன்ன பின்பும், அந்த விவசாயி நெல்லைக் கொடுக்க மறுத்திருக்கிறார். சளைக்காமல் தொடர்ந்து ஆறுமுறைக்குமேல் அவரிடம் சென்று கேட்டிருக்கிறார். இறுதியில் மனம் இறங்கி வந்த விவசாயி, “நெல் இல்லை, நாத்து இருக்கு. கொண்டு போயி நெட்டு வளர்த்துக்கங்க” என்று சொல்லியிருக்கிறார். இவரும் இரண்டு பிடி நெல் நாற்றை வாங்கி வந்து நடவு செய்து பனங்காட்டு நெல் விதையை உற்பத்தி செய்தார். இதுபோல பல நெல் ரகங்களையும் கஷ்டப்பட்டுத்தான் சேர்த்திருக்கிறார். அனைத்துமே தமிழர்களின் பாரம்பர்ய நெல் ரகங்கள் என்பதுதான் அதன் இன்னுமொரு சிறப்பு. 

இதுதவிர, திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நண்பர் நரசிம்மன் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் மையம் அமைத்தார். 60 நாள் முதல் 180 நாள் வரை சாகுபடி செய்யக்கூடிய பாரம்பர்ய நெல் விதைகளை அம்மையத்தில் சேமித்து வைத்திருக்கிறார். அங்கேயே வருடம்தோறும் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தினார்.  நெல் திருவிழாவில் ஒரு விவசாயிக்கு இரண்டுகிலோ வீதம் விதை நெல்லை வழங்கி வந்தார். நெல் திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் அதிகளவில் கலந்து கொள்கிறார்கள். பாரம்பர்ய விதைகளைப் பரப்பும் நோக்கில் பல கருத்தரங்குகளில் உரையாற்றி இருக்கிறார். இயற்கை விவசாயம் சார்ந்து பல பயிற்சி வகுப்புகளையும் நடத்தி இருக்கிறார்.  அதற்கென ஒரு வங்கியும் இயங்கி வருகிறது.

இவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பர்ய அறிவுக்கான விருதையும், SRISTI அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான SRISTI சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது. பாரம்பர்ய விதைகளைக் காப்பாற்றியதற்காக தேசிய விருதும் மாநில விருதும் கிடைத்திருக்கின்றன. பாரம்பர்ய விதை நெல்களைக் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்து நெடுங்காலமாகச் செயற்பட்டுக் கொண்டு இருந்தவர். நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். நம்மாழ்வாரின் தீவிர கொள்கை செயற்பாட்டாளர் இன்று இயற்கையுடன் கலந்திருக்கிறார். 

’விதைகள் உறங்கினாலும், விதைத்தவன் உறங்குவதில்லை’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார், ’நெல்’ ஜெயராமன். இவர் பரப்பிய பாரம்பர்ய நெல்லின் ஒவ்வொரு விதையிலும் நெல் ஜெயராமன் நீடித்திருப்பார். தன் பெயரையே `நெல்' ஜெயராமன் என கெசட்டில் மாற்றிக்கொண்ட அந்த விதை நாயகனுக்கு, ’இயற்கை அஞ்சலி’ செலுத்துவோம். வெடித்து வெம்பி நிற்கும் தமிழ் மண்ணில் `ஜெயராமன்' என்கிற இன்னொரு பாரம்பர்ய நெல் விதைக்கப்பட்டிருக்கிறது.