Published:Updated:

நம் கேள்விகளின் மொத்த உருவமே இந்த `ஜனநாயகம்!’ - உரிமைகளைப் பேசும் பாடல்

தமிழ்நாடு இந்தியா என்றில்லை, இன்று உலகளவில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கிறது. நாடுகள் பொருளாதார வளர்ச்சி சார்ந்து, அதுவும் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சி சார்ந்து முன்னேறிக்கொண்டிருக்கின்றன.

நம் கேள்விகளின் மொத்த உருவமே இந்த `ஜனநாயகம்!’ - உரிமைகளைப் பேசும் பாடல்
நம் கேள்விகளின் மொத்த உருவமே இந்த `ஜனநாயகம்!’ - உரிமைகளைப் பேசும் பாடல்

``பதவியிலிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். தயவுசெய்து செவிசாய்க்கவும்..."

இப்படியாகத் தொடங்குகிறது அந்தப் பாடல். வாயைப் பிளாஸ்திரி போட்டு ஒட்டிவைத்த ஒருவர். ஒளிப்படங்களில் அவருடைய பெற்றோரின் வாய்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன. எதையும் கேள்வி கேட்காமல் அமைதியாகிவிட்ட சமுதாயத்தின் ஓர் அங்கத்தினருக்கும் அரசியல் அதிகார வர்க்கத்தினருக்கும் ஜனநாயகம் என்றால் என்னவென்பதைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைக்கிறது அந்தப் பாடல். ஜஸ்டிஸ் ராக்ஸ் 'ஜனநாயகம்' என்ற தலைப்பில் இது ஜனநாயகம் என்ற பாடலை வெளியிட்டது. பாடலாசிரியர்கள் கபேர் வாசுகி, நித்தியானந்த் ஜெயராமன் ஆகியோர் எழுதி மக்கள் போராட்டத்துக்காக, குறிப்பாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்காக இதைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். நேற்று (05.12.2018) ஒரே நேரத்தில் சென்னையிலும் தூத்துக்குடியிலும் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலைப் பற்றிப் பார்க்கும்முன் உங்களிடம் ஒரு கேள்வி, தயவுசெய்து பதிலளிக்கவும்.

எது ஜனநாயகம்?

இந்தக் கேள்வியை எப்போதாவது உங்களுக்கு நீங்களே கேட்டுள்ளீர்களா! 

எங்கே தொடங்குகிறது ஜனநாயகம்? ஒவ்வொரு தனிமனிதனும் தன் கருத்துகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கவும் அதை ஏற்றுக்கொள்ளவும் முன்வருவதில் தொடங்குகிறது ஜனநாயகம். அதுவே அரசாங்கம் வரை நீடிக்க வேண்டும். இந்தப் பல கட்சி அரசியல் முறையின் சாராம்சமே அதுதான். யாரும் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பதில்லை. அது முடியாததும்கூட. அப்படியோர் ஆட்சி வழிதவறிப் போகும்போது அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டிய கடமை மற்ற கட்சிகளுடையது. ஆனால், இன்றைய இந்தியாவில் கட்சிகள் மீதும் அரசுகள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர். உண்மையான ஜனநாயக அரசின் தலையாய கடமை மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது. கேள்வி எழுப்புவது ஜனநாயகத்தின் மிக முக்கியமான உரிமை. அந்த உரிமையை மக்களுக்கு அளிப்பதே ஜனநாயகம்.

தமிழ்நாடு இந்தியா என்றில்லை, இன்று உலகளவில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்தாகிக்கொண்டிருக்கிறது. நாடுகள் பொருளாதார வளர்ச்சி சார்ந்து, அதுவும் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சி சார்ந்து முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இது எந்த மாதிரியான விளைவுகளுக்கு வித்திடுகிறது? அந்த முன்னேற்றம் உள்ளூர் மக்களின் குறிப்பாக, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்து வளர்க்கப்படும் பொருளாதாரம். பொருளாதாரம் ஜனநாயகமாக இல்லை. அது அனைவருக்குமானதாக மக்களுக்கானதாக இல்லை. மக்களைக் காவுகொடுப்பதாகவே இருக்கிறது. நுகர்வுக் கலாசாரத்தைப் புகுத்தி உற்பத்தியைப் பெரிதாக்கி அதைக் காசாக்கும் ஒவ்வொருவனுக்கும் தெரியும், அந்த உற்பத்தி அது செயல்படும் நிலத்தைச் சேர்ந்த மக்களுக்கானது இல்லையென்று. தெரியாமல் யாரும் இங்கே தவறு செய்யவில்லை. தெரிந்தே செய்கிறார்கள். அந்தத் தவறுகளுக்குப் போதுமான வகையில் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொடுக்கின்றன அரசுகள். அது செய்வதைத் தவறு என்று சொல்ல முடியாது. இது துரோகம். மக்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மக்களாட்சிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செய்யும் துரோகம். அதை எதிர்ப்பதற்கும் மக்கள் தங்கள் பிறப்புரிமையான தூய நீர், காற்று, நிலத்தைக் கேட்பதற்கும் அவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால், இங்கே கேள்வி கேட்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ரத்தக்கறை படிந்திருக்கிறது நாடு. 

உலகின் அனைத்துச் சமூக, சூழலியல் பிரச்னைகளுக்கும் அடிப்படை அந்நாட்டு அரசியல். அந்த அரசியல் யாருக்காகச் செயல்படுகிறது என்பதில் உள்ளது அதன் பிரச்னைகளின் ஆணிவேர். உண்மையில் அரசு செயல்பட வேண்டியது மக்களுக்காக. ஆனால், அந்த மக்களுக்கு எதிரான செயற்பாடுகளைச் செய்து கொழுத்த பெருநிறுவனங்களின் அடியாட்களாகப் பணிபுரியும் அரசுகளே தற்போது இயங்கி வருகின்றன. ஆழ்மனதில் புதைந்திருந்த நாம் கேட்க மறுத்து ஏற்று வாழப் பழகிக்கொண்ட அந்தக் கொடூரமான உண்மையை மண்வெட்டியில் தோண்டியெடுத்துத் தூசுதட்டிக் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பொறுப்பை மட்டுமே அவர்கள் கொடுத்துள்ளார்கள். மன்னர்களைப் போன்ற பிம்பங்களை உருவாக்குவதையும், மனிதர்களைத் தெய்வங்களாக்குவதையும் விட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யுங்களென்று உரக்கக் கூறுகிறது 'இது ஜனநாயகம்'.

இது ஜனநாயகம். உங்கள் அரசியல் நாடகங்களை அரங்கேற்றும் மேடையில்லை. பதவிக்கு ஏற்றிவிட்டால் அறச்செயல் செய்யணும்.

"இது ஜனநாயகம்
மனதில் நினைவிருக்கட்டும்
நீ எங்கள் சேவகன்தான்
ஏன்னா நாங்கதான் ஜனம்"

அவர்களின் அரசியல் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவதில் தோற்றுவிட்டன. சராசரி இந்தியக் குடிமக்களால் யாருக்காகவோ போடப்படும் சாலையை எதிர்த்துக் கேள்வி எழுப்ப முடியவில்லை. அந்த மக்களுக்காகக் கேள்வி எழுப்புகிறவர்களும் கைது, சிறை என்று அழுத்தப்படுகிறார்கள். சராசரி இந்தியக் குடிமக்களால் தங்கள் நிலத்தை, நிலத்தடி நீரை, காற்றை மாசாக்கிய நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வெல்ல முடியவில்லை. சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். நீதிப் போராட்டத்திலும் அவர்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது. தங்கள் நீரை, காற்றை, நிலத்தைப் பாதுகாத்துக்கொள்ள அரசுக்கு எதிராகப் போராடியே ஆக வேண்டுமென்ற இக்கட்டான அரசியல் சூழலில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அனைத்தும் கிடைத்துக்கொண்டேயிருக்கும்போது நாம் வீதியிலறங்கிப் போராட மாட்டோம். குடிக்க நீர், சாப்பிட உணவு, வாழ இடம் என்று அத்தனையும் எப்போது ஒரு சமுதாயத்தில் ஆபத்துக்கு உள்ளாகிறதோ அப்போது வெடிப்பதுதான் மக்கள் புரட்சி. அப்படியொரு புரட்சி வெடிக்காமல் தடுப்பதில் அரசுகளும் பெருநிறுவனங்களும் வெகு தீவிரமாகச் செயல்படுகின்றன. அந்த முயற்சி தோற்றுக்கொண்டிருக்கிறது.

மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். நான் பார்த்து வளர்ந்த பசுமையான நிலம் எங்கே? நான் சுவாசித்த சுத்தமான காற்று எங்கே? நான் குடித்து ருசித்த நன்னீர் எங்கே? அது பெருக்கெடுத்து ஓடிய ஆறுகள், ஏரிகள், குளங்கள் எங்கே?

தாங்கள் வாழும் நிலத்தின் சூழல், அதன் நீர், காற்று அனைத்தும் அவர்களுக்கானது என்பதைப் புரிந்துகொண்டார்கள். அதில் அவர்களுக்கே முன்னுரிமை. அந்த உரிமைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் இயற்கை வளங்கள் அத்தனையையும் சிலரின் ஆதாயங்களுக்காகக் காவுகொடுத்துக்கொண்டிருக்கும் அரசைப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அந்தக் கேள்விகளுக்கான உருவமே `இது ஜனநாயகம்’ பாடல். அந்த உருவம் உங்கள் கண்களை உறுத்துகிறதா! அப்படியென்றால் நீங்களும் மாற வேண்டியவரே! மாறுங்கள். நீங்கள் மக்களுக்கானவர்கள். அவர்களுக்காக வந்து நில்லுங்கள் என்று அறிவுறுத்துகிறது 'இது ஜனநாயகம்'.

"மக்களாட்சி மறந்திட
மக்களென்ன மக்கா!
கம்பெனி முதலாளிட்ட
முடியாது சொல்லு!
அராஜகம் நிறுத்தி
வந்து எங்க பக்கம் நில்லு"