Published:Updated:

விலங்குகள் தாகம் தீர்க்கும் 500 ஆண்டு குளம்..! கரூர் நெகிழ்ச்சி

விலங்குகள் தாகம் தீர்க்கும் 500 ஆண்டு குளம்..! கரூர் நெகிழ்ச்சி
விலங்குகள் தாகம் தீர்க்கும் 500 ஆண்டு குளம்..! கரூர் நெகிழ்ச்சி

ம்மில் பலருக்கு இயற்கை மீது அன்பு இல்லை. மாறாக இயற்கையைச் சிதைப்பது, காடுகளை அழிப்பது என்று `வளர்ச்சி' பேய் பிடித்து திரிகிறோம். இதனால்தான் காடுகளில் வழிமாறிப்போகும் விலங்குகள் குடிநீர், உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் கொடுமை அவ்வப்போது நடக்கிறது. ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் வனவிலங்குகளின் தாகத்தைப் போக்குவதற்காக 500 வருடங்களுக்கு முன்பே ஒரு குளத்தை வெட்டி இருக்கிறார்கள். நீதிமடை அல்லது பாப்பாமடை என்ற பெயர் கொண்ட அந்தக் குளம் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக இப்போதும் ஊர் மக்களால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. கடும் வறட்சியிலும் வற்றாத குளமாக அது திகழ்வதோடு, தாங்கள் குடிநீர்ப் பஞ்சத்தில் தவித்தாலும் அந்தக் குளத்தை வற்றவிடாமல் மக்களும், இயற்கையும் காத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

கரூர் மாவட்டத்தின் தென் எல்லையாக கடைக்கோடி ஊராக இருக்கிறது கடவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த தெற்கு அய்யம்பாளையம். சுமார் ஆயிரத்து ஐந்நூறு மக்கள் இந்த கிராமத்தில் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தின் முகப்பில் இருக்கிறது பாப்பாமடை குளம். குளக்கரையில், குளத்திற்குள் என்று ஆலமரங்கள் சூழ இருப்பது, குளத்தின் ரம்மியத்தைக் கூட்டுகிறது. சுற்றிலும் வறட்சி நிலவ, இந்தக் குளத்தில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. தெற்கு அய்யம்பாளையம் மட்டுமன்றி, சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த அத்தனை கிராமங்களையும் சுற்றிச் சூழ்ந்து வட்ட வடிவில் மலைகள் அமைந்திருக்கின்றன. இந்த கிராமங்களுக்கு வெளியிலிருந்து உள்ளே வந்து போக நான்கே நான்கு வழிகள் மட்டுமே உள்ளன. பாப்பாமடை குளத்தைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் நமக்கு கிடைக்கவே, தெற்கு அய்யம்பாளையத்திற்கு வண்டியை விட்டோம்.

பாப்பாமடை குளம் பற்றி சின்னுவிடம் பேசினோம். "கடவூர் மற்றும் சுற்றியுள்ள தெற்கு அய்யம்பாளையம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சுற்றி இருக்கும் மலைகளில் வனவிலங்குள் வசிக்கின்றன. மான், காட்டுப் பன்றி, தேவாங்குனு ஏகப்பட்ட விலங்குகள் இருக்கு. இருநூறு வருஷத்துக்கு முன்னாடி சிறுத்தைகூட வாழ்ந்ததா சொல்றாங்க. கடந்த பத்து வருஷமா இங்கே கடும் வறட்சி. மழை சரியாகப் பெய்யவில்லை. இருந்தாலும் இந்தப் பாப்பாமடை குளம் வற்றவில்லை. 500 வருடங்களுக்கு முன்பு எங்க ஊரில் வசிச்ச மக்கள்தான் இதை வெட்டியிருக்காங்க. அப்போ இந்த மலைகளில் வனவிலங்கள் அதிகம் வாழ்ந்துருக்கு. அவற்றுக்கு தாகம் எடுக்கும்போது தண்ணீர் பருக வசதியாக இந்தக் குளத்தை அவர்கள் வெட்டி இருக்காங்க. அதற்கு நீதிமடைன்னு பெயர் வெச்சுருக்காங்க. அதாவது, `இங்குள்ள மனிதர்கள் விலங்குளை சமமாப் பாவிச்சு நீதியோடு வெட்டிய குளம்'ங்கிற அர்த்தத்துல அந்தப் பெயரை வெச்சுருக்காங்க. பல பூஜைகள் செய்துதான் இந்தக் குளத்தை அமைச்சுருக்காங்க. அதனால், இந்தக் குளம் கடுங்கோடையிலும் வற்றாதுன்னு நம்புறோம்.

இந்தக் குளத்தின் தண்ணீர் அளவு குறைஞ்சு, சுத்தமாக வற்றிப்போகும் சூழல் ஏற்பட்டுச்சுன்னா, இயற்கையே மழையைப் பெய்ய வைத்து இந்தக் குளத்தை நிரப்பிடும். அது இந்தக் குளத்தின்பால் உள்ள எங்களின் ஐதீகம். இந்தக் குளம் அப்படி அதிசயமா வற்றாமல் இருக்கிறதுக்கு எடுத்துக்காட்டு சொல்லனும்னா, இந்தக் குளத்துக்குப் பக்கத்துலேயே தரவுமூக்கு மலையிலிருந்து வர்ற ஓடையில் கொஞ்சமும் தண்ணீர் தேங்காது. பாப்பாமடை குளத்தை விட இந்த ஓடை பதினைஞ்சு அடி பள்ளம் என்பதுதான் இதில் அதிசயம்" என்றார்.

அடுத்து பேசிய, பொன்னுச்சாமி என்பவர், ``அதேபோல, பாப்பாமடைக்கு மேல பாப்பாமடைக்குத் தண்ணீர் வர்ற வாரியையொட்டி பண்ணைப்பட்டியான் மடை இருக்கு. மலையில் பெய்யுற மழை தண்ணி அதுல நிறஞ்சு, அதன்பிறகு உபரி தண்ணிதான் பாப்பாமடைக்கு வரும். ஆனால், அந்தப் பண்ணைப்பட்டியான் மடைகூட வற்றிபோய்விடும். பாப்பாமடை வற்றாது. கடந்த பத்து வருஷமாவே இங்க கடும் வறட்சி. இருந்தாலும் பாப்பாமடை வத்துற சூழல் வரும்போது, மழை பெஞ்சு குளம் நிரம்பிரும். ஆனா, கடந்த 500 வருஷத்துல முதல்முறையா ஒரு மாதத்திற்கு முன்பு பாப்பாமடை குளம் சுத்தமா வத்திப் போய்ட்டு. எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாயிட்டு. உடனே கொஞ்சம் சடங்கெல்லாம் பண்ணோம். உடனே, மழை பேய்ஞ்சு கடந்து ஒரு வாரத்துல பாப்பாமடையில தண்ணி தேங்க ஆரம்பிச்சுட்டு. ஆனா, வேற எந்தக் குளத்துலயும் பொட்டுத் தண்ணியில்லை. வனவிலங்குகள் குடிக்க இந்தக் குளத்தை என்ன காரணத்திற்காக முன்னாடி வாழ்ந்தவங்க வெட்டினாங்களோ, அதை இம்மியளவும் குறைக்காம மதிச்சு காபந்து பண்ணிட்டு வர்றோம்" என்றார் பெருமை பொங்க.

அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த செல்லம்மாள் என்பவர்,
``இந்தக் குளத்தில் யாரும் குளிக்கமாட்டாங்க. நாங்க வளர்க்குற ஆடு, மாடுகளுக்கும் தாகம் தீர்க்க இந்தக் குளம்தான் உதவுது. இந்தக் குளத்தில் கடந்த 500 வருஷத்துல எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை. அதாவது, மனிதர்கள், கால்நடைகள்ன்னு எந்த உயிர்பலியும் ஏற்பட்டதில்லை. இந்தக் குளம் வத்த ஆரம்பிச்சா, இயற்கை தானாகவே மழையைப் பெய்ய வச்சு இந்தக் குளத்தை நிரப்பிடும்ங்கிறது எங்க நம்பிக்கை. ஒருவேளை அப்படி மழை பெய்யாம இயற்கை ஏமாத்துனா, இந்தப் பாப்பாமடை குளம் முழுசா வத்திப் போறதுக்குள்ள அருகில் உள்ள ஏழு கன்னிமார் தெய்வத்தை வேண்டுவோம். அவங்க மழையைப் பெய்ய வைத்து, பாப்பாமடையை நிறைய வச்சு, வனவிலங்குகளை காப்பாத்துவாங்க.

ஏழு கன்னிமார் கோயிலில் வாழைப்பழங்களை குவியலா வச்சு, `மழையைக் கொடுத்து வனவிலங்களுக்கும், எங்க கால்நடைகளுக்கும் சீவனம் கெடைக்க வழி பண்ணுங்க'ன்னு வேண்டிக்குவோம். பூஜை பண்ணுவோம். பூஜை முடிஞ்சதும், அந்த வாழைப்பழங்களை எல்லோரும் பிரசாதமா சாப்பிடுவோம். பூசாரி மூணு நாள் கெடு விதிப்பார். அந்த மூணு நாளைக்குள்ள மழை பேஞ்சு, பாப்பாமடை குளம் முழுசா கடகடன்னு நிறைஞ்சுரும். அதப் பார்த்து எங்க மனசும் நிறைஞ்சுரும்" என்றார் உணர்ச்சி மேலிட.

இப்படி ஏராளமான நம்பிக்கைகளை தங்களோடு சுமந்துகொண்டு சுற்றுகின்றனர் இந்தக் கிராம மக்கள். இந்த நம்பிக்கைகள் ஒருபக்கம் இருக்கட்டும். வனவிலங்களுக்கும் இரக்கப்பட்டு, அதற்காகவே ஒரு குளம் வெட்டிய இந்த கிராமத்து முன்னோர்களும், அதைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு அப்படியே பின்பற்றி வருகிறார்களே? அதற்காகவே இவர்களை பாராட்டவேண்டும்.