Published:Updated:

அலட்சியமாக நடந்ததா வழக்கு விசாரணை... ஸ்டெர்லைட் வழக்கில் நேற்று என்ன நடந்தது?

``தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை ஆரம்பித்ததிலிருந்தே தீர்ப்பாயத் தலைவர் கோயல் சட்டத்துக்குப் புறம்பாகத்தான் செயல்பட்டு வருகிறார். முக்கியமாக ஸ்டெர்லைட் ஆலையை ஆராய்வதற்காக தருண் அகர்வால் குழு அமைத்தபோதுகூட முந்தைய ஆய்வுகளைக் கணக்கில் எடுக்காமல் புதிதாக ஆய்வு செய்ய ஆலோசனை கூறுகிறது தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவு. ஆலை மூடுவது குறித்து அந்த அறிக்கையில் சொல்லப்பட வேண்டிய அவசியமே இல்லை. "

அலட்சியமாக நடந்ததா வழக்கு விசாரணை... ஸ்டெர்லைட் வழக்கில் நேற்று என்ன நடந்தது?
அலட்சியமாக நடந்ததா வழக்கு விசாரணை... ஸ்டெர்லைட் வழக்கில் நேற்று என்ன நடந்தது?

ஸ்டெர்லைட்  ஆலையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்ததிலிருந்து கடந்த 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான களப்போராட்டங்களும் சட்டப் போராட்டங்களும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. சிறிதாகவோ பெரிதாகவோ மக்கள் திரள் கூடி அவர்களது எதிர்ப்பைக் கால்நூற்றாண்டாகப் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் சிகரமாக மிகப்பெரிய மக்கள் திரட்சியை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த மாபெரும் மக்கள் கூடுகை கண்டது. தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் மக்களின் எழுச்சி அரசு அதிகாரத்தால் அழுத்தப்பட்டது. 

அதன்பின் கடந்த மே மாதம் 28-ம் தேதி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட்டின் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கும் ஆலையையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்தது. 

இதைத்தொடர்ந்து தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு ஸ்டெர்லைட் ஆலையிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் ஆய்வு நடத்தி கடந்த மாதம் 26-ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையானது 28-ம் தேதி கோயல் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அந்த அறிக்கையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காகச் சொன்ன காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மீண்டும் ஆலையைத் திறக்க உத்தரவு பிறப்பிக்கும்பட்சத்தில், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது. இதற்கான பதில் அறிக்கையைத் தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறி வழக்கை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.  

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசும் வேதாந்தாவும் மாறி வாதங்களை முன்வைத்தன. வழக்கில் இடை மனுதாரர்களாக தங்களையும் சேர்க்கச் சொல்லி மதிமுக தலைவர் வைகோவும் பேராசிரியர் பாத்திமா பாபுவும் தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயத் தலைவர் கோயல் கிடப்பில் போட்டுவிட்டார். வாதிடவும் அனுமதிக்கவில்லை. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்ததற்கே தமிழ்நாடு அரசு ஆட்சேபனை தெரிவித்தது. இது சட்டத்தை மீறக்கூடியது என்றும் தெரிவித்தது. ``தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்பது மேல் முறையீட்டுக்கும் மேலே அமைந்த மையம். எனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு வருவது என்பது சட்டத்துக்கு எதிரானது அல்ல. எங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்" என வேதாந்தா தரப்பில் கூறப்பட்டது. 

மேலும் வேதாந்தா தரப்பு வாதத்தில், ``தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது. தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் மட்டுமே இந்தக் காரணத்தைக் கொண்டு ஆலையை மூட முடியும், அதனால் அரசாணையானது தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் ஆணையின் அடிப்படையில் இருப்பதால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இதை எதிர்க்க முடியும். இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 36% தாமிரத்தை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தாமிரத்தை ஏற்றுமதி செய்த நாம் இப்போது இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தது.

தமிழக அரசு தரப்பு வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசின் கொள்கை முடிவாகும்; இதை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் எதிர்க்க முடியாது. மேலும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது, ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா, நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்ய மட்டுமே. ஆனால், இந்தக் குழு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஆலையை மூடியது தவறா சரியா என்று ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை, தருண் அகர்வால் குழு தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டுள்ளது எனத் தமிழக அரசு காட்டமான பதிலைத் தந்தது. ``தமிழக அரசின் அரசாணை செல்லாது" என்று அறிவித்த அகர்வால் அறிக்கையை ஏற்க முடியாது என்று வாதிட்ட தமிழக அரசு, தருண் அகர்வால் குழு கொடுத்திருக்கும் அளவீடுகளானது சரியானதில்லை எனவும் தெரிவித்தது. 

முன்னதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின் நக்சலைட்டுகள் இருந்தனர் எனத் தெரிவித்த வேதந்தாவின் வாதத்தைத் தமிழக அரசு மறுத்தது. மேலும் இது ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னை. மேலும் உத்தரவை மீறிய போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையானது சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது எனவும் கூறப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனம் தங்களது CSR செயல்பாடுகளில் தூத்துக்குடி மக்களின் குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் பள்ளிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகத் தெரிவித்தது. தூத்துக்குடி மக்களின் நல்வாழ்வுக்காக இன்னும் நிறைய செய்யத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தது. இப்படி வழக்கு விசாரணை சென்று கொண்டிருக்கும்போதே வழக்கை நேற்றைக்கு (10.12.18) ஒத்தி வைத்தார் தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் கோயல்.

இன்று நடந்த விசாரணையில் தமிழக அரசு ஆரம்பத்திலேயே, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடிநீர் மோசமான நிலையிலிருந்து மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. அதனால்தான் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் தலையிட்டு ஆலையை மூடியது என வாதம் வைத்தது. ``2014 - 2018 இடைப்பட்ட காலத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு இது தொடர்பாக நோட்டீஸ் ஏதாவது வழங்கப்பட்டதா?" என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழகத்திடம் கேட்டது. முழுமையான ஆய்வுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான புதுப்பிப்பு உரிமத்தை ரத்து செய்திருந்தோம். அதையும் மீறி ஆலையை இயக்க முற்பட்டதால் மின்சாரம் நிறுத்தப்பட்டு மூடுவதற்கான அரசாணை உத்தரவிடப்பட்டது எனத் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. 

வழக்கு ஆரம்பித்ததிலிருந்து இடை மனுதாரர்களாகச் சேர்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட வைகோ, பேராசிரியர் பாத்திமா பாபு, ராஜா ஆகியோரின் மனு இன்றும் கிடப்பிலேயே இருந்தது. வைகோவின் எதிர்ப்பால்  உணவு இடைவேளைக்குப் பின் மனுதாரர்களின் எதிர்ப்பு கடமைக்காக கேட்கப்பட்டது. அலட்சியப்போக்கில் தேசிய தீர்ப்பாயத் தலைவர் கோயல் வாதங்களைக் கேட்டார். அவரவர் வாதங்களை முடித்தவுடன் வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் திங்கள் கிழமை இணையத்தில் பதிவேற்றப்படும் எனக் கூறி விசாரணையை முடித்து வைத்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து தருண் அகர்வால் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை இப்போதுவரை எதிர் மனுதாரர்களுக்கோ வழங்கப்படவில்லை. மேலும் தமிழக அரசின் வாதத்தை மட்டும் கூர்ந்து கேட்ட நீதிபதி கோயல், தூத்துக்குடி மக்களின் சார்பாக வாதிட்ட வைகோ, பாத்திமா பாபு போன்றோரின் வாதங்களை அலட்சியமாகவே கவனித்திருப்பது ஒருதலைபட்சமான தீர்ப்புக்கு வழிவகுக்கலாம் என அச்சம் கொள்ள வைக்கிறது. மேலும், இந்தியா தொழிற்சாலை குறைவான நாடாக மாற வாய்ப்புள்ளது என வழக்கின் இடையே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கவலை தெரிவித்திருக்கிறது. இதெல்லாம் சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றன.

வைகோ பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, ``இந்தியாவுக்கே வருமானம் போய் விட்டது. தாமிரம் இறக்குமதி செய்கிறோம் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் மிகவும்  ஆதங்கப்பட்டார். இந்தியாவின் வருமானத்துக்காக நாங்கள் சாக வேண்டுமா? தாஜ்மகால் உலக அதிசயங்களுள் ஒன்று. அந்தத் தாஜ்மகால் மாசுபடாமல் பாதுகாக்க, யமுனைக்கரையில் கோடிக்கணக்கான வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த பல தொழிற்சாலைகளை உச்சநீதிமன்றம் மூடிவிட்டதே? ஸ்டெர்லைட் ஆலையை 99.9 விழுக்காடு மக்கள் எதிர்க்கின்றார்கள். இதில் வேதனைதரும் செய்தி என்ன என்றால், தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே இவ்வளவு காலமும் செயல்பட்டார்கள். அதனால்தான், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் பலமாக வாதாடுகிறார். உண்மைகளை மறைப்பதும்,  தவறான தகவல்கள் தருவதும் ஸ்டெர்லைட்டின் வழக்கம் என்று, உச்சநீதிமன்றமே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தரமாக மூடுவது ஒன்றுதான், தூத்துக்குடி மாநகர மற்றும் சுற்று வட்டார மக்களைப் பாதுகாக்கும் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் வழக்குகளின் சட்ட நிபுணர் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசியபோது, ``தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை ஆரம்பித்ததிலிருந்தே தீர்ப்பாயத் தலைவர் கோயல் சட்டத்துக்குப் புறம்பாகத்தான் செயல்பட்டு வருகிறார். முக்கியமாக ஸ்டெர்லைட் ஆலையை ஆராய்வதற்காக தருண் அகர்வால் குழு அமைத்தபோதுகூட முந்தைய ஆய்வுகளைக் கணக்கில் எடுக்காமல் புதிதாக ஆய்வு செய்ய ஆலோசனை கூறுகிறது தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவு. ஆலை மூடுவது குறித்து அந்த அறிக்கையில் சொல்லப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆரம்பத்திலிருந்தே கோயல் சட்டத்தை மீறித்தான் செயல்பட்டு வருகிறார். ஸ்டெர்லைட் வழக்கில் மட்டுமல்ல மற்ற வழக்குகளிலும் இதே போக்குதான் காணப்படுகிறது" என்றார். 

மிகப்பெரிய போராட்ட வரலாறு கொண்ட வழக்கை ஒருதலைபட்சமாக அணுகுவது என்பது மக்களுக்கான ஜனநாயகமாக இருக்க முடியுமா? ஆலையைத் தொடர்ந்து எதிர்த்து வரும் தூத்துக்குடி மக்களின் சார்பில் வழக்குகள் நடத்திவரும் பேராசிரியர் பாத்திமா பாபு, வைகோ போன்றவர்களின் வாதங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் வழக்கு விசாரணை முழுமையடைய முடியுமா? தூத்துக்குடியின் பெரும்பான்மையான மக்கள் எதிர்த்த ஆலையை மீண்டும் திறப்பதென்பது கொன்று குவித்த 13 உயிர்களின் கல்லறைகளுக்கு அருகில் மெல்லச் சாக இருக்கும் தலைமுறைகளின் கல்லறைகளைக் கட்டுவது போலத்தான். திங்கள் கிழமை பதிவேற்றப்படும் தீர்ப்பு இறுதி இல்லையென்றாலும் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு அதுதான் மெழுகுவத்தி. அதன் வழி ஒளி கிடைப்பதும் இருளடைவதும் திங்கள்கிழமை தெரியவரும்.