Published:Updated:

'செல்போன் டவர்கள் அருகிலும் சிட்டுகள் வாழ்கின்றன!' ஆய்வு முடிவு

'செல்போன் டவர்கள் அருகிலும் சிட்டுகள் வாழ்கின்றன!' ஆய்வு முடிவு

ஓர் உயிரினம் அழிந்துவருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை நாம் முன்வைக்க வேண்டும்.

'செல்போன் டவர்கள் அருகிலும் சிட்டுகள் வாழ்கின்றன!' ஆய்வு முடிவு

ஓர் உயிரினம் அழிந்துவருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை நாம் முன்வைக்க வேண்டும்.

Published:Updated:
'செல்போன் டவர்கள் அருகிலும் சிட்டுகள் வாழ்கின்றன!' ஆய்வு முடிவு

மிழகத்தின் ஐந்தாவது பறவை ஆர்வலர்கள் சந்திப்பு இந்த மாதம் முதல் மற்றும் இரண்டாம் தேதிகளில் ராஜபாளையத்தில் நடைபெற்றது. பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். முதன்முதலாக 2014-ம் ஆண்டு நடந்தபோது வெறும் ஐம்பது பேரோடு தொடங்கியது. தற்போது ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர். பறவைகளின் முக்கியத்துவத்தையும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய நம் கடமையையும் மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.

பறவைகளின் திறன்கள், அவற்றின் கணக்கெடுப்பு, வகைகள், அவை எதிர்கொள்ளும் உணவு மற்றும் வாழிடச் சிக்கல்கள் போன்றவற்றை இந்தச் சந்திப்பில் விரிவாக அலசினார்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் சுமார் 1450 வகைப் பறவையினங்கள் வாழ்கின்றன. இந்தச் சந்திப்பில் பாம்பே இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் (BNHS) விஞ்ஞானி பாலசந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கெடுத்து உரையாற்றினார். வலசை வரும் பறவைகள் குறித்து ஆய்வுசெய்யும் அவர் அவற்றின் வாழிடச் சிக்கல்கள் குறித்தும் அவை எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்தும் பேசினார். வேடந்தாங்கல், கூந்தன்குளம் போன்ற பறவைகள் சரணாலயங்களின் முக்கியத்துவத்தை விளக்கினார். சரணாலயங்கள் மட்டுமன்றி அவற்றுக்கு அருகிலுள்ள நிலங்களும் அப்பறவைகளின் வாழ்வியலில் பங்களிக்கின்றன. நம் எல்லை இந்தச் சரணாலயத்துக்குள் மட்டுமே என்று அவை நினைப்பதில்லை. பறவைகளுக்கான சரணாலயம் என்பது அவற்றின் வரவைப் பேணுவதற்கான ஓர் ஈர்ப்புவிசை மட்டுமே. அதைச் சுற்றியுள்ள நிலங்களும் அவற்றின் பசுமையும்கூட பாதுகாக்கப்பட வேண்டும். வருகைதரும் பறவைகள் அங்கும் பல இடங்களில் கூடுகட்டி வாழ்கின்றன. கம்பிவேலிகள் இட்டுக் குறிப்பிட்ட நிலத்தையும் நீர்நிலையையும் மட்டுமே பாதுகாத்து வைப்போம் என்று நினைக்கக் கூடாது. அதைச் சுற்றிய நிலம் மொத்தமும் பசுமை மாறாமல் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவரது உரை உணர்த்தியது. வேடந்தாங்கல் சரணாலயத்தைச் சுற்றிக் கட்டுமானங்கள் அதிகமாகிவரும் இந்தச் சமயத்தில் அப்பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்களிடையே அவர் இதுகுறித்துப் பேசியது வரவேற்கத்தக்க ஒன்று.

அதோடு சதுப்புநிலங்களின் பாதுகாப்பில் பறவைகளின் பங்கு, அவை அந்தச் சூழலியலின் ஊட்டச்சத்துகளை மறுசுழற்சி செய்வது போன்றவற்றைப் பற்றியும் பேசினார். அது சதுப்புநிலப் பாதுகாப்புச் செயற்பாடுகளை வளர்க்க மக்கள் மனதுக்கு உரமூட்டுவதாக அமைந்தன. அதைத் தொடர்ந்து ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அங்கு வாழும் பறவையினங்கள் மற்றும் அங்கு மட்டுமே வாழும் எண்டெமிக் (Endemic) பறவைகளைக் கணக்கெடுத்துப் பட்டியலிட்டார்கள். இதுபோன்ற பல பறவை ஆய்வுகளின் முடிவுகள் அந்தச் சந்திப்பில் வெளியிடப்பட்டன. அப்படியோர் ஆய்வாகத்தான் சிட்டுக்குருவிகள் குறித்த ஆய்வும் வெளியானது. அங்கு கூடியிருந்த பறவை ஆர்வலர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் அது சாதாரண ஒன்றுதான். ஆனால், சிட்டுக்குருவிகள் குறித்த தவறான புரிதல்கள் நகர மக்களிடையே உண்டாகிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அந்த ஆய்வை மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்.

``கவனிக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள், தேவையற்ற செய்திப் பரவல்களால் மறைக்கப்பட்டோ அல்லது மறக்கப்பட்டோ விடுகின்றன" என்று தனது சிட்டுக்குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் புத்தகத்தில் எழுத்தாளர் ஆதி. வள்ளியப்பன் குறிப்பிட்டிருப்பார். அத்தகைய செய்திப்பரவல்கள் ஏற்படாமலிருக்க இதுபோன்ற ஆய்வுகளை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டியது முக்கியமான கடமை. 

மதுரையிலுள்ள லேடி டோக் கல்லூரியைச் சேர்ந்தவர் பேரா.முனைவர்.பிரியதர்ஷினி ராஜேந்திரன். தன் மாணவிகள் ஐரீன், மிருதுளா ராணி இருவரையும் வைத்துச் சிட்டுகளின் வாழிடம், அவற்றின் உணவு, இவற்றில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஏழுமாத ஆய்வொன்றை நடத்தினார். அந்த ஆய்வு குறித்துப் பேச பேராசிரியரைத் தொடர்புகொண்டோம்,

``e-bird என்ற இணையத்தில் நாங்கள் பார்க்கும் பறவைகளைப் பற்றிப் பதிவேற்றுவோம். அப்போது எங்கள் கல்லூரி வளாகத்தில் நிறைய பறவைகளைப் பார்க்கிறோம். ஆனால், சிட்டுகளைப் பார்க்க முடிவதேயில்லை. அதனால் e-bird இணையத்திலுள்ள தரவுகளைச் சேகரித்தோம். மதுரை மாவட்டத்தில் எங்கெல்லாம் சிட்டுகளைப் பார்க்கமுடிகிறது என்பதைத் தெரிந்துகொண்டோம். அதுபோக சிட்டிசன் ஸ்பாரோ கவுன்ட் என்ற ஓர் ஆய்வு சில வருடங்களுக்குமுன் நடத்தப்பட்டது. அதன் தரவுகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு கிளம்பினோம். அதன்மூலம் மதுரையின் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறித்த ஓர் அடிப்படையைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

மதுரையின் பல இடங்களுக்கும் சென்ற மாணவிகள் இருவரும் அவர்கள் பார்த்த சிட்டுகள், எந்தப் பகுதி, எவ்வளவு இருந்தன என்று குறிப்பெடுத்தார்கள். சில இடங்களில் பார்க்கமுடிந்தது, சில இடங்களில் பார்க்க முடியவில்லை. இறுதியாக இருபது ஊர்களை ஆய்வுகளுக்கு உட்படுத்தினார்கள். பத்து கிராமங்கள், பத்து நகரங்கள். அதன்மூலம் சிட்டுகளின் வாழிடம் எப்படி அமைகின்றன, அவற்றின் உணவுப்பழக்கம் போன்றவற்றைப் பதிவுசெய்தோம்.

இந்த ஆய்வின்போது நகரங்களில்கூட சிட்டுகளின் எண்ணிக்கை பல இடங்களில் 30 முதல் 50 சிட்டுகள் வரைகூட குழுக்களாகப் பார்க்கமுடிந்தது. அதில் பழங்காநத்தம் என்றொரு பகுதி. மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரப்பகுதி. அங்கு 50 சிட்டுகள் வரை குழுக்களாகச் சுற்றுவதைப் பார்க்க முடிந்தது. அவ்வளவு அடர்த்தியான மனித வாழிடங்களில்கூட அவற்றால் வாழமுடிகிறது என்பது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இங்கே குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் அங்கு செல்போன் டவர்களும் அதிகமாகவே இருக்கின்றன. அதேபோல் அலங்காநல்லூர் பகுதியிலும் அதிகமான சிட்டுகளைப் பார்க்கமுடிந்தது. என்ன மாதிரியான உணவுகளை அவை உண்கின்றன என்பதைக் கவனித்து அதற்கேற்றவாறான வாழிடம் அவற்றுக்கு எங்கெல்லாம் அமைகின்றன என்றும் கவனித்தோம். அடுத்தது அவற்றின் இனப்பெருக்கம், அதற்கான கூடுகட்டும் இடம் போன்றவற்றை எங்கே அமைக்கின்றன என்பதையும் கவனித்தோம். அதையும் இந்த இரண்டு நகரங்களில் முக்கியமாகக் கவனித்தோம். இதையெல்லாம் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். மாணவிகள் காலையிலிருந்து மாலைவரை அங்கேயே அவற்றின் செயல்களைக் கவனித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். சிட்டுகளின் வாழ்வைப் பதிவுசெய்தார்கள்.

இப்படியாகச் செய்துகொண்டிருந்த சமயத்தில்தான் செல்போன் டவர்களுக்கு அருகேயும்கூட சிட்டுகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்துகொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது. நாங்கள் அதிகம் கண்காணித்த 21 பகுதிகளில் சுமார் 18 பகுதிகள் அதிகமான செல்போன் டவர்கள் அமைந்திருந்த பகுதி. இருந்தாலும் அவற்றின் உணவு, வாழிடம் மற்றும் இனப்பெருக்கத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. செல்போன் டவர்கள் இருந்த இடங்களிலும் அவற்றின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றங்களும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் செல்போன் டவர்கள் இருந்த இடங்களில் எப்படிச் சிட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததோ, அதேபோல் செல்போன் டவர்கள் இல்லாத சில இடங்களில் அவை இல்லாமலே போயுள்ளன. எனில் செல்போன் டவர்கள் அவற்றின் அழிவுக்குக் காரணமாக இருக்க வாய்ப்பில்லை" என்று தங்கள் ஆராய்ச்சி குறித்து விரிவாகப் பேசினார்.

சுமார் நாற்பது ஏக்கர் பரப்பளவுடைய அவர்களின் கல்லூரிக்கு அருகேகூட எந்த செல்போன் டவரும் காணப்படுவதில்லை. இருந்தாலும் அங்குச் சிட்டுகள் வாழிடம் அமைத்து வாழவில்லை என்பதையும் குறிப்பிட்டார். சில பகுதிகளில் அவற்றைப் பார்க்கமுடியாமல் போவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமென்றும் அவர் கூறினார். அதோடு உணவுப் பழக்கத்திலும் சிட்டுகள் மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்து வாழ்கின்றன. உதாரணத்துக்கு குழந்தைகள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளைக்கூட சாப்பிடப் பழகிவிட்டன. பெரும்பாலான நகர்ப்புறப் பகுதிகளில் அவை கூடமைப்பதற்கான வசதிகள் இல்லாமல் போவதும் அவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணம் என்பதை மீண்டுமொரு முறை இவர்களின் ஆய்வுமூலம் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதுகுறித்து தமிழகப் பறவை ஆய்வாளர்கள் சந்திப்பை ஒருங்கிணைத்த பறவைகள் ஆராய்ச்சியாளர் ப.ஜகநாதனைத் தொடர்புகொண்டு பேசினோம்,

``ஓர் உயிரினம் அழிந்துவருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை நாம் முன்வைக்க வேண்டும். அதாவது முன்பு 20,000 இருந்தது இப்போது வெறும் 500-தான் இருக்கிறது என்று சொல்லும் போது, ஒரு காலத்தில் இருந்த அதன் எண்ணிக்கை நமக்குத் துல்லியமாகத்  தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். இதுபோன்ற அடிப்படைத் தகவல் தெரிந்த பிறகே அந்த உயிரினம் எண்ணிக்கையில் குறைந்துபோனதற்கான காரணத்தை ஆராய முற்படுவோம். இந்த அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். ஆனால் இந்தியா முழுவதிலும் சிட்டுக்குருவிகள் எங்கெங்கு, எத்தனை இருந்தன என்கிற தகவல் இதுவரை இல்லை. இப்போதுதான் அவற்றைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளோம். இந்தத் தகவல் இல்லாமல், நாம் பார்க்கவில்லை என்பதற்காக அவை அழிந்து வருகின்றன என்றும் அதற்கான காரணங்களையும் தக்க ஆதாரங்களின்றி கூறுவது சரியல்ல" என்று கூறினார்.

சூழலியல் சார்ந்த விழிப்பு உணர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க வேண்டியது அவசியம். அந்த விழிப்பு உணர்வு அறிவியல் ரீதியாகச் சரியாக இருக்கவேண்டும். மக்கள் மத்தியில் அறிவியல் போர்வைகொண்டு மூடநம்பிக்கைகளை விதைக்கக் கூடாது. மக்களுக்குத் தெளிவான அறிவியல்பூர்வமான உண்மைகளைக் கொண்டு சேர்ப்பதே சூழலியல் பாதுகாப்பில் முக்கியமான பணி. அதைச் செய்ய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களின் உதவிகளை நாடவேண்டும். நாமாக எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது.

கடந்த வருடம் முழுவதும் செய்யப்பட்ட பல ஆய்வுகள் இந்தப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டன. அதோடு களத்துக்குச் சென்று பறவை நோக்குதல், பறவைகளை ஒளிப்படம் எடுப்பதில் வழிகாட்டுதல் போன்ற மேலும் பல அமர்வுகளும் இதன் பகுதிகளாக நடைபெற்றன. பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த பறவை ஆர்வலர்கள் உட்பட பொதுமக்களும் பள்ளிக்குழந்தைகளும் கலந்துகொண்டது மனதுக்குப் பெருமகிழ்வை ஏற்படுத்தியது. வெறும் ஐம்பது ஆர்வலர்களோடு தொடங்கிய பறவையாளர்கள் சந்திப்பு இந்த வருடம் பல நூறுபேர் வரை பரந்திருப்பது தமிழகப் பறவை ஆர்வலர்களின் முக்கியத்துவத்தையும் பறவைகள் மீதான மக்களின் ஆர்வத்தையும் பறைசாற்றுகிறது. அதேசமயம் சந்திப்பின்போது நடைபெற்ற அமர்வுகளும் ஆய்வுமுடிவு விளக்கங்களும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தன. அதைப் புரிந்துகொள்வது சாதாரண மக்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சிரமமாக இருந்தது. தமிழகத்தின் பறவையாளர்கள் சந்திப்பு தமிழிலேயே நடைபெற்றால் பொது மக்களும் அதில் பங்கேற்றுப் பயனடைய வசதியாக இருக்கும். சூழலியல் பாதுகாப்பு பல காலமாக அறிவியலாளர்கள் மத்தியிலேயே நின்று கொண்டிருப்பதற்கு மொழிப் பிரச்னையால் ஏற்படும் புரிதலின்மையும் காரணம்.

ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களால் மட்டுமே அதிகமாக பறவை நோக்குதல், பறவை ஆராய்ச்சி போன்றவை மேற்கொள்ளப்பட்டன. அதற்குக் காரணம் பறவைகள் பற்றிய விவரங்களும் குறிப்புகளும் புத்தகங்களும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்ததே. ஒளிப்படங்களே இல்லாமல் வெறும் எழுத்துகளே நிரம்பிய அந்தப் புத்தகங்கள் பெரும்பான்மை இந்திய மக்களிடையே ஆர்வத்தை வளர்ப்பதைவிட அலுப்புதட்ட வைத்ததே அதிகம். அதை உடைக்க ஒளிப்படங்கள் எவ்வளவு முக்கியம் என்பதைப் பறைசாற்றியவர் சலீம் அலி. அதேபோல் இன்றைய காலகட்டத்தில் மக்களுக்குக் கொண்டுசேர்க்க வழக்குமொழிகள் மிக முக்கியம். சூழலியல் சார்ந்த புத்தகம் தற்போது தமிழில் அதிகம் வெளியாகத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான ஒன்று. அதேபோல் இதுபோன்ற சந்திப்புகளும் சூழலியல் கூட்டங்களும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் அமைவது அவசியம். அதன்மூலமே அனைத்து மக்களுக்கும் தங்கள் பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் வாழும் பறவைகள் பற்றிய விழிப்பு உணர்வைக் கொண்டுசேர்க்க முடியும் என்று நம்புகிறேன்.