Published:Updated:

``ஆம், மரபணு மாற்ற பருத்தி தோல்வியடைந்துவிட்டது" - எம்.எஸ்.சுவாமிநாதன்

முதலில் மரபணு மாற்றம் குறித்த தொழில்நுட்பங்களை ஆதரித்தவரே, இப்போது `பி.டி பருத்தி தோல்வியடைந்த ஒன்று' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பார்க்கும்போது ஒரு சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது.

``ஆம், மரபணு மாற்ற பருத்தி தோல்வியடைந்துவிட்டது" - எம்.எஸ்.சுவாமிநாதன்
``ஆம், மரபணு மாற்ற பருத்தி தோல்வியடைந்துவிட்டது" - எம்.எஸ்.சுவாமிநாதன்

ல ஆண்டுகளாகவே சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் விஷயம் `மரபணு மாற்றப் பயிர்கள்'. இது நல்லதா கெட்டதா என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், 2002-ம் ஆண்டு பி.டி பருத்தி முதல் மரபணு மாற்றப் பயிராக இங்கே அறிமுகம் செய்யப்பட்டது. `அதிகமான விளைச்சல் தருகிறது' என்ற ஆசை வார்த்தைகள் காட்டியே இப்பயிர்கள் விவசாயிகள் இடத்தில் பரவலாக்கப்பட்டது. அதன் விளைவு இப்போது இந்தியா முழுவதும் 95 சதவிகிதம் பி.டி பருத்திதான் பிரதான பயிர். பி.டி பருத்தியால் வாழ்விழந்த விவசாயிகள் இந்தியாவில் ஏராளம். பூச்சித்தாக்குதல், அதிக செலவினம் என அவர்கள் பட்டபாடுகள் சொல்லிமாளாது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ஓர் ஆராய்ச்சி முடிவும் வெளியாகியிருக்கிறது.

பி.டி விதைகள் பாதிப்பை ஏற்படுத்தும்; அதனால், பாரம்பர்ய விதைகளைப் பத்திரப்படுத்துங்கள். அவை இன்று பயன்படாவிட்டாலும், என்றைக்காவது பயன்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டு விதைகளின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் தற்போது புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ``பி.டி பருத்தி என்று சொல்லக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி பயிர் தோல்வியடைந்த ஒன்று" என்று சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தியிருக்கிறார், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். 

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும், விஞ்ஞானி பி.சி.கேசவன் என்பவரும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையான `நிலையான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான நவீனத் தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பின் கீழ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்தரி, கடுகு ஆகிய பயிர்கள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

அந்த அறிக்கையில், ``பிடி பருத்தி இந்தியாவில் தோல்வியடைந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. பருத்தி விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதாரப் பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது. அது விஞ்ஞான ரீதியிலான உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளும், அடிப்படை அறிவியல் ஆய்வுகளும் இல்லாதது. மரபணு மாற்ற விதைகள் செலவினத்தை அதிகப்படுத்துவதால் நிறைய கேள்விகளை எழுப்புகின்றன. மேலும் வெளிநாட்டு மரபணுக்களை நமது தாவரங்களில் உட்செலுத்தும்போது, தாவரங்களின் மூலக்கூறுகள் மற்றும் செல் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து துல்லியமாகப் புரிந்துகொள்ளப்படவில்லை" என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுபற்றி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம் பேசும்போது, ``இதுவரை 16 ஆண்டுகளாக விவசாயிகள் பி.டி பருத்தியால் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்துள்ளனர். இப்போது இந்தியா முழுவதும் 95 சதவிகிதம் பி.டி பருத்தி விதைகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. எம்.எஸ் சுவாமிநாதன் சொல்லியிருப்பது போல மரபணு மாற்ற பருத்தி தோல்வி என்றால், இதற்கு மாற்றாக விதைகளுக்கு விவசாயிகள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. பி.டி பருத்திக்குப் பின்னர் பருத்தி விதை கம்பெனிகள் பெரும்பாலானவை துடைத்தெடுக்கப்பட்டுவிட்டன. இப்போது ஆங்காங்கே சில கம்பெனிகள் மட்டும் இருக்கின்றன. இது மட்டும் எப்படி விவசாயிகளுக்குப் போதுமானதாக இருக்கும்? விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எம்.எஸ் சுவாமிநாதன் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தனை வருடங்களாக நாங்களும் சொல்லிக் கொண்டு வந்தோம். ஆனாலும், அரசு கேட்டபாடில்லை. மூத்த வேளாண் விஞ்ஞானியே இப்போது சொல்லியிருக்கிறார். இதன் பின்னரும் மத்திய அரசு மௌனம் காக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபணு விதைகள் நமது மண்ணுக்கு ஒத்துவராது என்று பல இயற்கை விவசாய ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அடுத்த இலக்காக மரபணு மாற்றக் கடுகை கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இதற்குப் பின்னாவது மத்திய அரசு மனம் மாறும் என நினைக்கிறோம்" என்றார்.

கடந்த ஆண்டு ஜி.இ.ஏ.சி என அழைக்கப்படும் 'மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு', மரபணு மாற்றுக் கடுகுக்கு அனுமதி வழங்கலாம் என மத்தியச் சுற்றுச்சூழல் துறைக்குப் பரிந்துரைத்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் மரபணு மாற்றுக் கடுகுக்கு அனுமதியளிக்கலாம் என்ற நிலை உருவாகியது. விரைவில் மரபணு மாற்ற கடுகு விவசாயிகளின் விளைநிலங்களுக்கு வரலாம் என்ற நிலையும் உருவானது. இன்னும் சில நாள்களிலோ அல்லது ஆண்டுகளிலோ இதற்கான முடிவை மத்திய அரசு வெளியிடலாம். இது சம்பந்தப்பட்ட வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் உணவுப்பொருள் உற்பத்தியில் அனுமதிக்கப்பட்ட முதல் மரபணு மாற்றப் பயிராக கடுகு இருக்கும். ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பி.டி கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கி, மக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது. 

முதலில் மரபணு மாற்றம் குறித்த தொழில்நுட்பங்களை ஆதரித்தவரே இப்போது `பி.டி பருத்தி தோல்வியடைந்த ஒன்று' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பார்க்கும்போது ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. லை பிக் (Lie Big) என்ற மறைந்த வேளாண் விஞ்ஞானி ரசாயனங்களைப் பயிருக்கு உணவாகக் கொடுக்கலாம் என்று முதன் முதலில் சொன்னார். அதனால் ரசாயன உரங்கள் உலகம் முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டன. அவர் மரணப் படுக்கையில் இருக்கும்போது, ``நான் தவறு செய்துவிட்டேன். ரசாயனங்களை உபயோகிக்கச் சொல்லியிருக்கக் கூடாது" என்றார். இந்த மாற்றத்தை அவரிடம் உண்டாக்கியது, அந்த ரசாயனங்கள் பயிரின்மீது ஏற்படுத்திய பாதிப்புகள்தாம். அதே கதைதான் இங்கேயும்.

எது எப்படியோ... மரபணு மாற்றப் பயிர்கள் ஊடுருவி விவசாயிகளுக்கும், மக்களுக்கும் அழிவைக் கொடுக்காமல் இருந்தால் நல்ல விஷயம்தான். மத்திய அரசும் இனிக் கவனமாகச் செயல்பட வேண்டும்.