Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலை இயங்க நிபந்தனைகளுடன் அனுமதி! - பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை இயங்க நிபந்தனைகளுடன் அனுமதி! - பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை இயங்க நிபந்தனைகளுடன் அனுமதி! - பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்டெர்லைட்டுக்கெதிரான தூத்துக்குடி மக்களின் மாபெரும் போராட்டத்துக்குப் பின் மே 28-ம் தேதி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது வேதாந்த குழுமம். மனுவை விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் கோயல் தலைமையிலான பெஞ்ச் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை நியமித்தது. அகர்வால் குழுவின் ஆய்வறிக்கை தாக்கல், ஸ்டெர்லைட் தரப்பு வாதம், தமிழக அரசு வாதம் என நடந்த வழக்கு விசாரணை டிசம்பர் 10-ம் தேதி நிறைவடைந்தது. இதன் தீர்ப்பு டிசம்பர் 18-ம் தேதி திங்கள்கிழமை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பதிவேற்றப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில் இன்றே வெளியாகியுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு 25 நிபந்தனைகளைக் கூறியுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். ஆலை திறப்புக்குப் பின் அகர்வால் குழுவின் நிபந்தனைகளைப் பின்பற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழக அரசு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், அதன் மேலாண்மை குறித்த விவரங்களை நாள்தோறும் இணையத்தில் வெளியிட வேண்டும். நிலத்தடி நீரின் தன்மை குறித்தும் இணையதளத்தில் தினமும் பதிவேற்றப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை ஆலை நிர்வாகம் முறையாகக் கண்காணிக்க வேண்டும். ஆபத்துக்கால நடவடிக்கைக்கான திட்ட அறிக்கையை ஸ்டெர்லைட் ஆலை சமர்ப்பிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தையும் மூன்று வாரத்துக்குள் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

மேலும், ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது பசுமைத் தீர்ப்பாயம். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் எனத் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.