Published:Updated:

ஸ்டெர்லைட்டும் தமிழக அரசும் இனி செய்ய வேண்டியது என்ன? #SterliteVerdict

43 பக்கம் கொண்ட அந்தத் தீர்ப்பில், அந்த 13 உயிர்களுக்கான நியாயமும் கொஞ்சம் இருந்திருக்கலாம்.

ஸ்டெர்லைட்டும் தமிழக அரசும் இனி செய்ய வேண்டியது என்ன? #SterliteVerdict
ஸ்டெர்லைட்டும் தமிழக அரசும் இனி செய்ய வேண்டியது என்ன? #SterliteVerdict

மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக தூத்துக்குடியில் மாபெரும் மக்கள்திரள் கூடியது. போராட்டத்தில் 13 உயிர்கள் பலிகொண்ட பின் மே 28-ம் தேதி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அரசாணைப் பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது வேதாந்தா குழுமம். மனுவை விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் கோயல் தலையிலான பெஞ்ச் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை நியமித்தது. அகர்வால் குழு ஆய்வுசெய்து சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்துகொள்ளலாம் என அறிக்கை அளித்தது. அரசின் கொள்கைரீதியான முடிவை வேதாந்தா குழுமம் எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது என வாதத்தில் சொன்னது தமிழக அரசு. இப்படியாகக் கடந்த நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை வழக்கு விசாரணை மூன்று கட்டமாக நடைபெற்றது. விசாரணையின் முடிவில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பானது டிசம்பர் 18-ம் தேதி திங்கள்கிழமை இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றே தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

தீர்ப்பு விவரம்:

"தருண் அகர்வால் கமிட்டி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்டது. தமிழக அரசும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை மூடியதற்குக் கூறிய வாதங்கள் ஏற்கும்படியாக இல்லை. அதனாலேயே தீர்ப்பாயம் இந்தக் குழுவை நியமித்து புதிதாக ஆய்வுசெய்தது" என ஆய்வுக்குழு குறித்துத் தீர்ப்பில் பேசியுள்ளது பசுமைத்தீர்ப்பாயம். ஆய்வுக்குழு தனது வரம்பை மீறியிருந்தாலும் அது தகவல்களை முழுமையாகக் கொடுப்பதற்கே. அதோடு இரண்டு தரப்புமே ஆய்வின்போது உடனிருந்தன என்பதால் அந்த வரம்புமீறலும் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

முடிவாக, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வேதாந்தாவிற்கு அனுமதி வழங்கியுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு 25 நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. ஆலைத் திறப்புக்குப் பின் அகர்வால் குழுவின் நிபந்தனைகளைப் பின்பற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீரின் தன்மை குறித்துத் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தவேண்டும். அந்தப் பரிசோதனை முடிவுகளைத் தவறாமல் இணையத்திலும் பதிவேற்ற வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அல்லது இணையத்தில் பதிவேற்றத் தவறினால் சூழலியல் நஷ்ட ஈடாகப் பத்து லட்சம் ரூபாயை மாவட்ட நீதி அமைப்புக்கு வழங்கவேண்டும். அவர்கள் இதற்கான கணக்கு வழக்குகளைப் பராமரிக்க வேண்டும். இவற்றோடு சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்பு உணர்வுச் செயற்பாடுகளிலும் ஆலை நிர்வாகம் ஈடுபட வேண்டுமென்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மூன்றரை லட்சம் டன்கள் தாமிரக் கசடுகளை முறையாகப் பராமரிக்காமல் விட்டது தவறு. அதற்காக இரண்டரை கோடி ரூபாய் மாவட்ட நீதி அமைப்பில் வழங்கப்பட வேண்டும். ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான விதத்தில் தாமிரக் கலவையைப் பயன்படுத்த வேண்டும். அதேபோல் கசிந்து கொண்டிருக்கும் கந்தக அமிலத்தைச் சுத்தப்படுத்தவும் கசிவை நிறுத்திச் சரிசெய்யவும் வேண்டும். இவையனைத்தும் இணையத்திலும் பதிவேற்றப்பட வேண்டும். இவற்றோடு, கழிவுகளை முறையாகக் கையாள்வது, கழிவுகள் வெளியேறாமல் கண்காணிப்பது போன்றவற்றையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். தமிழக மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கத் தனி குழு அமைக்கவேண்டும்.

விசாரணையின்போது மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்காத காரணத்தாலேயே மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தது. அது உண்மையெனில் மாவட்ட நிர்வாகமும் ஆட்சியரும் இவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இதைச் செய்யவேண்டும். 

விசாரணையின்போது ஆலை நிர்வாகம் தரப்பிலிருந்து மேலும் நூறு கோடியை அந்த பகுதி மக்கள் நலனுக்காக வழங்குவதாகக் கூறியிருந்தது. அந்தத் தொகை மக்களுக்கான குடிநீர் விநியோகம், மருத்துவமனை மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் செலவு செய்யவேண்டும் அதுவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதைச் செய்யவேண்டும். இதை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் தலைமையில் செய்துமுடிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தடைகளை நீக்கவும் அனுமதியைப் புதுப்பிக்கவும் வேண்டுமென்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் ஆபத்தான நச்சுப் பொருள்களை முறையாகக் கையாளவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதைக் கண்காணிக்கவும் வேண்டும். ஆலைக்கு உள்ள மின்சாரத் தடையை நீக்கி உடனடியாக மின்சாரம் வழங்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டில் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டுமெனத் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். ஆபத்துக்கால நடவடிக்கைக்கான திட்ட அறிக்கையை ஸ்டெர்லைட் ஆலைச் சமர்ப்பிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தையும் மூன்று வாரத்திற்குள் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். மேலும் ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து மனுக்களையும் இந்த தீர்ப்பின் மூலம் தள்ளுபடி செய்துள்ளது.  

மேற்கண்ட அனைத்தும் ஸ்டெர்லைட் ஆலைத் தீர்ப்பின்படி செய்யவேண்டிய பணிகள். சரி, தமிழக அரசு இனி என்ன செய்யப்போகிறது? தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது அரசு.

"தூத்துக்குடியில் உள்ள  ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதியளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள ஆணையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த ஆலை மூடப்பட்டதினால்  பாதிக்கப்பட்டிருந்த அனைவருக்கும் வாழ்வாதாரம் மீண்டும் கிடைக்கும் மற்றும் தூத்துக்குடி நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆணையை விரிவாகப் படித்து, நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டல்களின்படி ஆலையின் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்குத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். நாங்கள் இப்பகுதியைச் சுற்றியுள்ள தூத்துக்குடி மக்களோடு ஒன்றிணைந்து வளர்வதற்கும் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்” என்று பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு குறித்துக் கூறுகிறது வேதாந்தா தரப்பு..

தீர்ப்பு குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரான அரிராகவனிடம் பேசியபோது, "இது ஒன்றும் புதிது இல்லை. எதிர்பார்த்த ஒன்றுதான். ஏன் இப்படிச் சொல்கிறோம் என்றால் கார்ப்பரேட்டுகளிடம் நீதிமன்றம் எப்படி நடந்துகொள்ளும் எனத் தெரிந்ததுதான். கூடங்குளம், எட்டுவழிச்சாலை என வழக்குகளிலும் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். முறையாக அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. தருண் அகர்வால் குழுவிடம் கொடுக்கப்பட்ட மனுக்களில்கூட ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட மனுக்கள்தான் அதிகம். அதுமட்டுமில்லாமல் சென்னை எழிலகத்தில் ஸ்டெர்லைட் எக்ஸ்பர்ட் கமிட்டி கூட்டம் நடந்தபோது ஸ்டெர்லைட் எதிராகப் பேசுவதற்கு அனுமதிக்கப்படவேயில்லை. நிர்வாக நடைமுறைக்காக மட்டும் திறக்கப்பட்டிருக்கும் ஒரு நிறுவனம் எப்படி CSR செயல்பாடுகளில் ஈடுபட முடியும். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேனர்கள் வைக்கப்படுகிறது, கோயில் கட்டுமானங்களுக்கு பண உதவி செய்யப்படுகிறது, மக்களுக்கு நிறைய காரணங்களைச் சொல்லி தொடர்ந்து பணம் கொடுக்கிறது. இதனை மாவட்ட ஆட்சியரிடமும் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் தெரியப்படுத்தியும் எந்த பயனும் இல்லை. அதே நேரத்தில் ஸ்டெர்லைட்டுக்கெதிராக ஒரு துண்டு நோட்டீஸ்கூட கொடுக்க முடியவில்லை. தமிழக அரசு அரசாணையின் மூலம் ஸ்டெர்லைட்டை மூடியிருந்தாலும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறது. கடந்த சில நாட்களாக வாகன சோதனை, விசாரணை என அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு நிலை தூத்துக்குடியில் நிலவி வருகிறது. எதிர்ப்பைக் காட்டுவதற்கு கறுப்புத்துணி வாங்கியதற்காக மக்கள் கைது செய்யப்படுகின்றனர். இப்போது வந்திருக்கும் தீர்ப்புக்கெதிராக கறுப்புத்துணி கூட காட்டமுடியாத நிலைதான் இருக்கிறது. இன்று வந்திருக்கும் தீர்ப்பு முழுக்க அநீதியானது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடுவதற்கு ஜல்லிக்கட்டு போன்று சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதே ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் கோரிக்கை" என்றார்.     

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக வந்திருக்கும் தீர்ப்பு தூத்துக்குடியில் அசாதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி பலரும் இந்த தீர்ப்பின் மீது அதிருப்தியில் உள்ளனர். 43 பக்கம் கொண்ட அந்தத் தீர்ப்பில், அந்த 13 உயிர்களுக்கான நியாயமும் கொஞ்சம் இருந்திருக்கலாம்.