Published:Updated:

அதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலியா! #Schoolstrike4climate

அதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலியா! #Schoolstrike4climate

பள்ளிக்கூடம் பாராளுமன்றம் அல்ல எனத் தெரிவித்த பிரதமரின் அறிவிப்புக்கு, எட்டாம் வகுப்பு படிக்கும் செல் வைட்டிங் என்னும் மாணவர், ``முதலில் எங்களுடன் வந்து படிக்க வாருங்கள்" என்கிறார்.

அதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலியா! #Schoolstrike4climate

பள்ளிக்கூடம் பாராளுமன்றம் அல்ல எனத் தெரிவித்த பிரதமரின் அறிவிப்புக்கு, எட்டாம் வகுப்பு படிக்கும் செல் வைட்டிங் என்னும் மாணவர், ``முதலில் எங்களுடன் வந்து படிக்க வாருங்கள்" என்கிறார்.

Published:Updated:
அதானி நிறுவனத்துக்கெதிராகப் போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலியா! #Schoolstrike4climate

னித குலம் சந்திக்கும் ஒரு பிரச்னைக்காக, ஒரு நாட்டில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், விடுமுறை எடுத்து தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். அந்தப் பிரச்னை என்ன, எதனால் அந்தப் பிரச்னை ஏற்பட்டது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அதற்கான தீர்வு என்ன என்பது அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இத்தனைக்கும் இதை முன்னெடுத்துச்செல்பவர்கள் அந்தந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களேதான். அதற்காக இந்தப் போராட்டம்? அவர்கள் கவலை கொள்வது உலக புவி வெப்பமாதல் பிரச்னை பற்றியது. நாம் அதிகமாகப் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்டவற்றிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு பூமியை அதிகமாக வெப்பமடையச் செய்கிறது. அதனால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அது நம்மை வெகுவாகப் பாதிக்கிறது. இதற்காகத்தான் ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. தனி மனித நுகர்வில் பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை விட, பன்மடங்கு நுகரும் நாடு. இருப்பினும் இயற்கையின் கையிலிருந்து எந்த நாடுகளும் தப்பிக்க முடியாதுதானே? இந்த வருடம் (2018) வரலாறு காணாத வறட்சியில், ஆஸ்திரேலியாவின் விவசாயிகள் பட்டதுயரம் சொல்லில் அடங்காது. விவசாயிகளுக்கு அரசு பணத்தை கொடுத்து ஒரு வழியாகச் சமாளிக்க முயன்றாலும், அதில் பெரும் தோல்வியே மிஞ்சியது. இந்தப் பஞ்சத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கால்நடைகளே. வறண்டு போன நாக்குக்குத் தண்ணீர்தான் வேண்டுமே தவிர, டாலர்கள் அல்ல.

அவ்வாறு வறண்ட ஒரு பகுதியில் உள்ள ஒருநாள் கால்நடைகளுக்கு லாரியில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அந்த ஒரு லாரியை நூற்றுக்கணக்கான மாடுகளுக்கும் மேல், சுற்றி வளைத்து வந்து, தண்ணீர் அருந்த வந்த அந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் பதறிப்போனார்கள். அந்த மாடுகளின் வறண்ட நாக்கு, அவர்களைத் திக்கு முக்காடச் செய்தது. இதைப் போன்ற நிகழ்வுகளை உற்றுக் கவனித்து, வளர்ந்து வருகிறார்கள் பள்ளிக் குழந்தைகள். அதனால், சூழலியல் மாற்றம் பற்றிய தெளிவான அறிவை வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Photo Courtesy: BBC

ஆஸ்திரேலியா பணக்கார நாடாக விளங்குவதற்கு முக்கியக் காரணம் இங்கு அதிகமாகக் கனிம வளங்கள் புதைந்து கிடக்கின்றன. இரும்பு, தங்கம், காப்பர், நிலக்கரி என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். உலகில் உள்ள பல பெரும் நிறுவனங்கள் அதைப் பங்கு போட்டு வேட்டை ஆடிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கார்மிக்கேல் என்னும் இடத்தில் நிலக்கரி எடுக்கத் திட்டமிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் கட்ட அனுமதியை ஆஸ்திரேலிய அரசு அவர்களுக்கு அளித்தாலும், இதனால் வரும் பாதகங்கள் என்ன என்பதை ஊடகங்கள் மக்களுக்குக் கொண்டு சேர்த்தன.

குறிப்பாக அவர்கள் அதிகம் விரும்பும் உலகப் புகழ் பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் எனப்படும் பவளப் பாறைகளுக்கு ஆபத்து என்பதாலும், வருடத்துக்கு 12 பில்லியன் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படும் என்பதாலும் மக்கள் அதை வெறுக்க ஆரம்பித்தனர். இதனால் உருவானதுதான், ஸ்டாப் அதானி என்கிற இயக்கம். அதானி நிறுவனத்தின் இத்திட்டத்துக்குப் பணம் அளிக்க, முதலில் ஓடோடி வந்த ஆஸ்திரேலிய வங்கிகள், மக்கள் எதிர்ப்பைப் பார்த்து சற்று தயக்கம் காட்டியன. இன்னொரு பக்கம் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் செலவு குறைந்து கொண்டே வந்தது. இதை உற்று நோக்கிய வங்கிகள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கி கடைசியில் 28 வங்கிகளும் கையை விரித்துவிட்டன. இதற்கு பொது மக்கள் அந்த வங்கிகளின் தலைமையிடத்தில் நடத்திய போராட்டங்களும் முக்கியக் காரணமாகும். பின்னர் அதானி நிறுவனத்துக்கு இந்திய அரசு சார் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரு பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்திகள் முதலில் வெளியாயின, பின்னர் அது மறுக்கப்பட்டது. அதன் தற்போதைய நிலைமை அறியப்படவில்லை.

சில மேல் முறையீடுகள் இருந்தாலும், அரசு அனுமதி கிடைத்த பிறகும், மக்கள் எதிர்ப்பு காரணமாக திட்டத்தை நான்கு வருடங்களாகத் தொடங்க முடியாமல் இருக்கும் அதானி நிறுவனத்துக்கு நேரடியாக ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் சிலர் மிகப் பெரும் ஆதரவாக இருப்பதுவும் மறுப்பதற்கு இல்லை. ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட், தற்போதைய தொழில்துறை மற்றும் கனிமவள அமைச்சர் மேட் கனவான் என அந்தப் பட்டியலும் நீளும். மேலும் பல பிரதிநிதிகளும் மறைமுகமாக ஆதரவாக இருக்கிறார்கள். அதானி தனக்கு ஆதரவு தருமாறு பலரையும் சென்று சந்தித்து வருவதும், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அமைப்புகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை என்பதுவும் வேறு கதை. எப்படி இருப்பினும், இன்று வரை திட்டத்தைத் தொடங்க முடியாததால், வெறுப்புற்ற அதானி நிறுவனம், திட்டச் செலவை வெகுவாகக் குறைத்து தன் சொந்தப் பணத்திலிருந்து இரண்டு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்போவதாக நவம்பர் கடைசி வாரத்தில் அறிவித்து, இன்னும் இரண்டு வாரங்களில், அதாவது 25 டிசம்பர் 2018-க்கு முன்னதாக திட்டம் ஆரம்பிக்கும் என அறிவித்தது.

இதை எதிர்த்துத்தான், ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல், வீதிக்கு வந்து போராடினார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசு, குழந்தைகளுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தது. சிட்னி, மெல்போர்ன் எனப் பெருநகரங்களில் ஆரம்பித்த போராட்டம், காப்ஸ் ஹார்போர், பெண்டிகோ எனச் சிறு நகரங்களுக்கும் பரவியது.

பள்ளிக்கூடங்கள் பாடசாலைகளாக மட்டும்தான் இருக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார் பிரதமர் ஸ்காட் மாரிசன். அதற்குப் பதிலளித்துள்ள 14 வயதான ஹாரியேட் ஓ ஷியா கேர், ``கல்வி என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதைத் தள்ளி வைத்து விட்டு, இங்கே நாங்கள் வந்துள்ளோம் என்றால், கல்வியை விட இந்தச் சூழலியலுக்கான போராட்டம் முக்கியமானது என்பதை உணர்த்த வந்துள்ளோம்" என்றார். பத்தாம் வகுப்பு படிக்கும் டைனா அதனோசோஸ், `உங்கள் வேலையை நீங்கள் சரியாகச் செய்திருந்தால், நாங்கள் பள்ளியை விட்டு வெளியே வந்து இருக்க மாட்டோம் என்கிறார். கனிம வள அமைச்சர் மேட் கனவான் கூறுகையில், ``போராட்டத்துக்குச் செல்வதன் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் சிறந்த பாடம் என்னவெனில், நாளை வேலை இல்லா பட்டதாரிகளுக்கு அரசு வழங்கும் சலுகையைப் பெற, எப்படி வரிசையில் நிற்பது என்பதைத்தான்" என்றார். மேலும் நிலத்திலிருந்து எப்படி நிலக்கரி எடுப்பது, எரிவாயு எடுப்பது என அறிவியல் மூலம் கற்றுக்கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

தனது 8 வயது மகனுடன் போராட்டத்துக்கு வந்த தந்தை ட்ரெண்ட் அதற்கு பதில் அளிக்கையில், மாணவர்களின் சூழலியல் சார்ந்த அறிவும், தேர்ச்சியும் பல அரசியல்வாதிகளைவிடச் சிறப்பாக இருப்பதாகவும், சர்வதேச சூழலியல் மாற்றம் சம்பந்தப்பட்ட(IPCC) ஆய்வுகளைப் பற்றி பள்ளிகளில் விவாதிக்கும் அளவுக்கு நிபுணத்துவம் பெற்று இருக்கிறார்கள் எனவும் பெருமை படக்கூறினார். பள்ளிக்கூடம் பாராளுமன்றம் அல்ல எனத் தெரிவித்த பிரதமரின் அறிவிப்புக்கு, எட்டாம் வகுப்பு படிக்கும் செல் வைட்டிங் என்னும் மாணவர், ``முதலில் எங்களுடன் வந்து படிக்க வாருங்கள்" என்கிறார்.

ஒரு பக்கம் அரசு, பெரு நிறுவனங்கள், சட்டம், தொழில்துறை என ஒரு கூட்டமும், மறுபுறம் சூழலியல், மாற்றம், மாசு அற்ற உலகம், ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை வலியுறுத்தி இன்னொரு கூட்டமும் தொடர்ந்து கருத்துகளால் அனைத்து நாடுகளிலும் மோதிக் கொண்டுதான் இருக்கின்றது. இதை அனைத்துமே கைக்கட்டிக் கொண்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டமும் உண்டு. தனக்கு மட்டுமன்றி தனக்குப் பின்னால் வரப்போகும் தலைமுறையையும் கருத்தில் கொண்டு செயல்படும் இந்தச் சூழலியலாளர்களாலும், தலைவர்களாலும் மட்டும்தான் இந்த பூமிப் பந்தில் உள்ள மனித குலத்தைக் காக்க முடியும். சுத்தமான காற்றை தானும், தன் சுற்றமும் சுவாசிக்க வேண்டும் என விரும்பி, ஒரு பெரும் தனியார் தொழிற்சாலைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடிய, தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்னோலின் போன்ற மாணவிகள், உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். அவர்கள்தாம் மனித குலத்தின் உண்மையான நம்பிக்கை.

மற்ற நாடுகளில் உள்ள ஸ்னோலின்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்கள் கருத்தும் விவாதப்பொருளாகிறது. ஆனால் இங்கே, துப்பாக்கி தோட்டாவுக்கு இரையாக்கப்படுகிறார்கள். இதை, எந்தவித கழிவிரக்கமும் இன்றி, பொதுச் சமூகம் கடந்து சென்றால், நாம் சுவாசிக்கும் காற்றில், காப்பர் துகள் மட்டுமல்ல, கந்தகம் கூடக் கலக்கும். ஸ்னோலினின் இழப்பு நம் மண்ணில், சூழலியலுக்காக இழந்த கடைசி உயிராக இருக்கட்டும். அந்த மாணவி காக்க முயன்ற சூழலியலை நாம் பாதுகாப்போம். சூழலியலாளர்களின் குரல் ஒட்டு மொத்த மனித குலத்துக்குமானது என்பதை, அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தங்கள் எதிர்காலத்துக்கு எது முக்கியம் என அறிந்து தெருவுக்கு வந்திருக்கும் இந்த ஆஸ்திரேலிய இளம் போராளிகளின் போராட்டம் வெல்லட்டும்.