Published:Updated:

``பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உயிர்வேலிகளின் பங்கு அளப்பரியது!" - சிலிர்க்கும் போலீஸ் அதிகாரி!

உயிர்வேலிகளில் உள்ள கள்ளிச்செடிகளில்தான் தேனீக்கள் கூடு கட்டும். தேனீக்கள், மகரந்தச்சேர்க்கை சிறப்பாக நடப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை.

``பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உயிர்வேலிகளின் பங்கு அளப்பரியது!" - சிலிர்க்கும் போலீஸ் அதிகாரி!
``பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உயிர்வேலிகளின் பங்கு அளப்பரியது!" - சிலிர்க்கும் போலீஸ் அதிகாரி!

``நாம், இயற்கையை இயற்கையாக இருக்கவிடுவதில்லை. காடுகளை அழித்து, மலையைக் குடைந்து இயற்கைச் சமநிலையைச் சீர்குலைத்துவிட்டோம். பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு பாலிடாயில் ஊற்றிவிட்டோம். கிராமங்களில் இருந்த உயிர்வேலிகளை அழித்துவிட்டு, கல் ஊன்றி கம்பி வேலைகளை அமைத்தோம். அதனால், பல இயற்கை உணவுப்பொருள்கள் நமக்குக் கிடைக்காமல் போனதோடு, மகரந்தச்சேர்க்கை சிறப்பாக நடப்பதற்கான காரணிகளும் அழிந்துபோய்விட்டன" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், ஓய்வுபெற்ற மேற்கு மண்டல ஐ.ஜி-யான பாரி.

கரூர் சின்னதாராபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், `உயிர்வேலி' என்ற புத்தகத்தை எழுதி, வெளியிட்டார். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாரி, உயிர்வேலி அழிந்ததால் நாம் இழந்தவை பற்றியும், நமது பாரம்பர்ய உணவுப் பயிர்களின் மேன்மையை உணர்வது குறித்தும் சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தார். விழா முடிந்ததும் அவரிடம் பேசினோம்.

``இன்று விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்துவிட்டது. உடல் உழைப்பு குறைந்து, நோய்களும் பெருகிவிட்டது. நமது உடலுக்கு உன்னதம் தந்த சாப்பாட்டு முறை மாறி, துரித உணவுகளைச் சாப்பிட்டு, ஆண்ட்ராய்டு மொபைலில் பாரம்பர்யம் பற்றிச் சமூக வலைதளங்களில் கருத்துச் சொல்கிற சந்ததியா மாறிப்போய் இருக்கிறோம். ஆனால், வளர்ச்சி என்கிற பெயரில் நாம் இழந்தவை எவ்வளவு தெரியுமா? கிராமங்களில் அதற்குமுன்பு வயல்களைச் சுற்றி உயிர்வேலி அமைப்பார்கள். கள்ளிச்செடிகளான சப்பாத்திக் கள்ளி, சதுரக் கள்ளிகளைக்கொண்டும், கிலுவை, பூவரசு, வாதநாராயண உள்ளிட்ட மரக்கொம்புகளைக் கொண்டும் இயற்கையான வேலியை அமைத்திருப்பார்கள். இந்த வேலிகளில் பலவகை கொடிகள் முளைத்து மண்டிக்கிடக்கும். அவற்றில் காய்க்கும் இலை, காய், கனிகள் மனிதர்களுக்கு அருமருந்தாகவும், உணவாகவும் இருக்கும். அந்த உயிர்வேலிகளில் வெள்ளைக் கத்தைக் கொடி என்கிற கொடி ஒன்று படர்ந்திருக்கும். அந்த இலையைப் பறித்து, கைகளால் நன்றாகக் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை அப்படியே கொஞ்ச நேரம் வைத்திருந்தால், அல்வா பதத்துக்கு மாறிடும். அதைச் சாப்பிட்டு வந்தால், உடலில் உஷ்ணம் ஏற்படாது. எக்காலத்துக்கும் ஹீட் ஸ்ட்ரோக் (heat stroke) ஏற்படாது. அதே வேலியில்தான் கோவைக்கொடியும் படர்ந்துகிடக்கும்.


 

கியூபாவைத்தான் உலகத்தின் சர்க்கரை கிண்ணம் என்று சொல்வார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகளின் தொட்டிலாக இந்தியா மாறி வருகிறது. ஒருகாலத்தில் வயதானவர்களில் சிலருக்கு மட்டுமே, அதுவும் பாரம்பர்யமாக மட்டுமே வந்த சர்க்கரை நோய், இன்று 10 வயது சிறுவன் தொடங்கி அனைவருக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் வருகிறது. அதற்குக் காரணம், மோசமான உணவுப்பழக்கம்தான். உயிர்வேலியில் படர்ந்துகிடக்கும் கோவைக்காயை வத்தல் செய்தோ, பொரியல் செய்தோ சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். கோவைப்பழத்தையும் சாப்பிடலாம். அதேபோல் சோளமும், கம்பும் சர்க்கரை நோயை பயந்தோடச் செய்யம் நம் பாரம்பர்ய உணவுகள். ஆனால் பீட்சா, பர்க்கரைச் சுவைக்கப் பழகிவிட்ட நமது நாக்கு, சோளத்தையும், கம்பையும், கோவைக்காயையும் சுவைக்க மறுக்கின்றன. இதனால், சர்க்கரை நோய் பாதித்தவர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால், திருமண மண்டபங்களில் சைவம், அசைவம் சமைப்பதுபோல் சர்க்கரை நோயாளிகளுக்கு என்று மூன்றாவதாக ஒரு சமையல் செய்ய வேண்டிய நிலை வரும்.

உயிர்வேலி அருகே முளைக்கும் தானியப்பயிர்கள் மக்கி மண்ணோடு மண்ணாகி, பிறகு முளைப்பதுதான் காளான். காளானைவிட உலகத்தில் சுவையான ஓர் இயற்கை உணவு எதுவும் இல்லை. பூஞ்சை காளான் விஷமானது. அதைச் சாப்பிடக் கூடாது. புற்றுகள் உயிர்வேலியில் மட்டுமே உருவாகும். அந்தப் புற்றில்தான் சாப்பிடக்கூடிய காளான் முளைக்கும். உயிர்வேலியில்தான் பிறண்டைச் கொடி வளர்கிறது. இதைவிட ஒரு மாமருந்தான கொடி வேறு இல்லை. கல்யாண முருங்கை என்று ஒரு மரம், உயிர்வேலியில் வளர்க்கப்படும். அதன் இலைகளை தோசை மாவுடன் அரைத்து, அதில் ரொட்டிச் சுட்டுச் சாப்பிட்டால், எப்படிப்பட்ட நெஞ்சு சளியும் கரைந்துபோகும். உயிர்வேலியில் உள்ள செடி, கொடிகளில் பழுத்துக்கிடக்கும் காரப்பழம், சூரப்பழம், சப்பாத்தி மற்றும் சதுரக்கள்ளிப் பழங்கள் உடம்புக்கு அவ்வளவு நல்லது. அதில் இருக்கும் சத்தைவிட, ஆப்பிளில் பெரிய சத்துகள் கிடைத்துவிடுவதில்லை. மனிதர்களுக்கு மட்டுமல்ல... உயிர்வேலியில் வளரும் கொடிகள், ஆடுகளுக்கும் பயன்தரக்கூடியவை. அங்கே வளரும் முஷ்டக்கொடியைச் சாப்பிடும் ஆடுகளுக்கு எந்த வியாதியும் வராது. அதேபோல், மகரந்தச்சேர்க்கைக்கு உயிர்வேலிகள் முக்கியப் பாலமாக இருக்கின்றன.


 

உயிர்வேலிகளில் உள்ள கள்ளிச்செடிகளில்தான் தேனீக்கள் கூடு கட்டும். தேனீக்கள், மகரந்தச்சேர்க்கை சிறப்பாக நடப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை. அதனால், உயிர்வேலிகளைச் சுற்றியுள்ள செடி, மரங்களில் மகரந்தச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, கசூல் அதிகரிக்கும். இந்த உயிர்வேலிகளில் உள்ள பூச்சிகளைப் பிடிக்க குருவிகள் வந்து அமரும். குருவிகளும் மகரந்தச்சேர்க்கையைச் சிறப்பாகச் செய்பவை. பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்ச்சங்கிலியைச் சமபங்கில் வைத்திருப்பதற்கும் உயிர்வேலிகளின் பங்கு அளப்பரியது. இங்கு வளரும் பூச்சிகளைப் பாம்புகள் சாப்பிடும்; பாம்புகளைக் கீரி கொல்லும்; கீரிகளைக் குள்ளநரி அழிக்கும்; குள்ளநரிகள் மயில்கள் முட்டைகளைச் சாப்பிடும். இதனால், உயிர்ச்சங்கிலி சரியான விகிதத்தில் இருந்தது. ஆனால், நாம் உயிர்வேலிகளை அழித்தபிறகு, குள்ளநரிகள் இனம் கணிசமாக அழிந்துவிட்டன. இதனால் மயில்கள் வழக்கத்தைவிட அதிகமாகப் பெருகிவிட்டன. இரவு நேரத்தில் உயிர்வேலிகளில் இருக்கும் பூச்சிகளைப் பிடிக்க ஆந்தைகள் வரும். ஆனால், இப்போது ஆந்தைகள் இனம் குறைந்துவிட்டது. உயிர்சமநிலையில் ஓர் உயிரினம் குறைவது கூடாது. அதுபோல், ஓர் உயிரினம் பெருகுவதும் ஆபத்துதான். 

மயில்கள் இப்போது பெருகியிருப்பது உயிர்சமநிலைக்குக் கேடான விஷயமாகும். இவ்வளவு பயன் தந்த உயிர்வேலிகளை நாம் அழித்துவிட்டு, கருங்கல்லை ஊன்றி, கம்பி வேலிகளை அமைத்துக்கொண்டிருக்கிறோம். இதனால், நமக்குத்தான் இழப்பு. இதன்மூலம், இயற்கைச் சமநிலையையும் மோசமாக்கி இருக்கிறோம். கடலைச் செடியும், அதன் எண்ணெயும் நம் உடலுக்கு அவ்வளவு நல்லது. இதை உணர்ந்ததால்தான் அமெரிக்காவில் கடந்த பத்து வருடங்களில் கடலை உற்பத்தி 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன் பயன்பாடும் பெருகியுள்ளது. ஆனால், இங்கே `கடலை எண்ணெய் கொழுப்பு நிறைந்தது' என்று யாரோ கிளப்பிய புரளியை நம்பி, அதன் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு வருகிறோம். கடலையை வயலில் சாப்பிடும் எலிகளும், பெருச்சாளிகளும் இனப்பெருக்கத்தில் நிறைய எலிக்குஞ்சுகளைப் பெறும். அதுபோல்தான், மனித இனப்பெருக்க விஷயத்திலும் கடலை பயன்தரக்கூடியவை. மலட்டுத்தன்மையை நீக்கும்.

நம் நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது இங்கே வந்த `பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்' மன்னனுக்குக் கடுமையான வயிற்று வலி. சாப்பிட்ட உணவு சேராமல் பலநாள் அவருக்கு வலி நீடித்திருக்கிறது. அவரும் பார்க்காத வைத்தியம் இல்லை. ஆனால், எந்த வைத்தியத்தாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. அதையறிந்த அவரது இந்திய சமையல்காரர், ஒரு கஷாயம் வைத்து தந்திருக்கிறார். அதை அருந்தியதும், மன்னனுக்குத் தீராத வயிற்று வலி சரியாகிவிட்டது. ஆச்சர்யமான அந்த மன்னன், `என்ன மருந்து கொடுத்தாய்' என்று கேட்டிருக்கிறார். அதற்கு, அந்தச் சமையல்காரர், `மிளகு தண்ணி' என்று சொன்னாராம். ஆச்சர்யமாகிப்போன மன்னன், தன்னுடைய சமையல் பட்டியலில் மிளகுத் தண்ணியை முதல் இடத்தில் சேர்த்திருக்கிறார். அந்தச் சமையல்காரர் சொன்னதை தன் பாணியில் உணர்ந்ததால், அதை Mulliga tawny என்று உச்சரித்திருக்கிறார். அதுதான் இன்றைக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் அந்தப் பெயரில் மெனு கார்டில் உள்ளது. இந்த மிளகுத் தண்ணி தயாரிப்பது நமது பாரம்பர்ய பாட்டி வைத்திய முறையில் உள்ளதுதான். இப்படி, கிராமத்து உயிர்வேலிகளின், நமது பாரம்பர்ய உணவு முறைகளை நாம் மறந்துபோனதால், இன்றைக்கு இவ்வளவு பிரச்னைகளை எதிர்கொள்கிறோம்; இவ்வளவு நோய்கள் உருவாவதற்கு நாமே காரணமாக இருந்து, நாமே அதற்கு மருந்தில்லாமல் திண்டாடுகிறோம். இனிமேலாவது நாம் இழந்த உயிர்வேலிகளை அமைப்போம்; பாரம்பர்ய உணவுகளைக் காப்போம். இல்லை என்றால், நமது பாவத்துக்கு நாமே சம்பளமாவோம்" என்றார் உறுதி மேலிட!

இயற்கையைக் காப்போம்...