Published:Updated:

அக்வாமேன் கொடுக்கும் எச்சரிக்கை... ஆபத்து கடலுக்கா நமக்கா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அக்வாமேன் கொடுக்கும் எச்சரிக்கை... ஆபத்து கடலுக்கா நமக்கா?
அக்வாமேன் கொடுக்கும் எச்சரிக்கை... ஆபத்து கடலுக்கா நமக்கா?

இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒன்று மட்டுமே. கடல் நம்மீது ஆத்திரப்பட்டால் நடக்கப்போவது மனித இனத்தின் பேரழிவு. மனித இனத்தோடு இங்கு வாழும் நிரபராதிகளான மற்ற உயிரினங்களும் சேர்ந்து அழியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"இரண்டும் இருவேறு உலகங்கள் இல்லை. இரண்டும் ஒரே உலகத்தில்தான் இருக்கிறது. நாம் ஒற்றுமையாக வாழவேண்டும்."

க்ளைமாக்ஸில் அக்வா மேன் ஆர்தரின் அம்மா சொல்லும் கருத்துதான் இது. அந்தக் கருத்து ஏற்படுத்திய தாக்கமே இதை எழுதத் தூண்டியது. மனிதர்கள் கடலில் ஏற்படுத்தும் மாசு அதில் வாழும் கடல்வாழ் மனிதர்களை ஆத்திரமடையச் செய்கிறது. நிலவாழ் மனிதர்கள் செய்யும் முட்டாள்தனமான செயல்கள்தாம் அதற்குக் காரணம் என்று நினைக்கிறார்கள். அதனால், அவர்கள்மீது போர்தொடுக்கத் திட்டமிடுகிறார்கள்.

ஒரு காட்சியில் வில்லனான கடல் அரசன் கடல் அலைகளை வைத்து சுனாமியை ஏற்படுத்துகிறான். அது நிலவாழ் மனிதர்களுக்கு அவன் விடுக்கும் ஓர் எச்சரிக்கை. அந்தப் பேரழிவில் கப்பல்கள் கடலோர வீடுகள் சேதமடைகின்றன. அதோடு இன்னொன்றும் நடக்கிறது. நிலவாழ் மனிதர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த பரிசுகளைத் திரும்ப நம்மிடமே கொடுக்கிறது கடல். அந்தப் பரிசு வேறெதுவுமில்லை. குப்பைகள். ஆண்டாண்டு காலமாக நாம் அந்த உலகுக்குக் கொடுத்த பரிசு அதுதான். எவ்வளவுக் குப்பைகள்? எவ்வளவு எண்ணெய்க் கழிவுகள்? எவ்வளவு பிளாஸ்டிக்? எவ்வளவு அழிவு?

அவை அனைத்தையும் கடல் நிஜமாகவே நமக்குக் கொடுத்தால் என்ன நடக்கும்? கடல் நிஜமாகவே நம்மீது ஆத்திரப்பட்டால் என்ன நடக்கும்?

இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒன்று மட்டுமே. கடல் நம்மீது ஆத்திரப்பட்டால் நடக்கப்போவது மனித இனத்தின் பேரழிவு. மனித இனத்தோடு இங்கு வாழும் நிரபராதிகளான மற்ற உயிரினங்களும் சேர்ந்து அழியும். காலம் காலமாக நடக்கும் அடக்குமுறைகள் என்றாவது ஒருநாள் அடங்கித்தானே ஆகவேண்டும். ஆண்டாண்டு காலமாக நடக்கும் வன்கொடுமைகளுக்கு ஒருநாள் தண்டனை கிடைத்துத் தானே ஆகவேண்டும். ஆனால், அந்த தண்டனைக்கு ஆளாகப் போவது இந்தக் குற்றங்களைச் செய்யும் நாமல்ல. நம் சந்ததிகள்.

2017-ம் ஆண்டில் சுமார் 7,000 டன்கள் எண்ணெய்யைச் சுற்றுச்சூழலின் அழிவுக்காகச் செலவழித்துள்ளது பூமி. அதில் பாதிக்கும் அதிகமாக இந்தியப் பெருங்கடலைக் கொலை செய்வதற்காகக் கொட்டப்பட்டது. ஆம், இது கொலைதான். செய்வது தவறு, இதனால் ஏற்படுவது அழிவு என்று தெரிந்தே செய்யும் படுகொலை. மீன்களும், சிப்பி வகைகளும் எண்ணெய்க் கழிவு படிந்த நீரில் வாழும் சிற்றுயிர்களைச் சாப்பிடுகின்றன. அதனால் வளர்ச்சியில் குறைபாடு, உப்பிய கல்லீரல், இதயச் செயற்பாடுகளில் மாற்றம், சுவாசக் கோளாறு, இனப்பெருக்கக் குறைபாடுகள் என்று எத்தனைப் பிரச்னைகளைச் சந்திக்கின்றன. கடலில் வாழும் நீர்க்கீரி, பாலூட்டிகள், நீர்ப்பறவைகள் அனைத்தும் தங்கள் எதிர்ப்புச்சக்தியை இழந்து வருகின்றன. அதனால் அவற்றுக்கு அதிகமான நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுக் கொத்துக் கொத்தாக இறக்கின்றன. இதற்குக் காரணம் நாம் கொட்டிய எண்ணெய்க் கழிவுகள். அந்த எண்ணெய்க் கழிவுகள் கடலில் சத்தமின்றி ஓர் இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. கடலில் தட்பவெப்பநிலை எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. அந்த மாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும் திறனோடுதான் கடலில் உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த எண்ணெய்க் கழிவுகள் கடல்வாழ் பாலூட்டிகளின் அந்தத் திறனைக் குறைக்கின்றன. அதனால் ஹைபோதெர்மியா (Hypothermia) என்ற செயற்கை உடல்வெப்பக் குறைப்பு நிகழ்ந்து அழிவுக்கு உள்ளாகின்றன. எவ்வளவு திமிங்கிலங்கள் செத்துக் கரை ஒதுங்குகின்றன. அதற்கெல்லாம் கடல் நம்மைத் தண்டிக்காமல் விடாது என்பதையே சொல்கிறான் அக்வா மேன். 

கடலில் நாம் கொட்டும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் ஆமைகளை எந்த அளவுக்குப் பாதிக்கிறது. இந்த வாரத் தொடக்கத்தில் பிரிட்டனைச் சேர்ந்த கடலியல் ஆய்வாளர்கள் குழு வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா?

102 கடல் ஆமைகளிடம் அவர்கள் நடத்திய பரிசோதனையில் 800 சின்னச் சின்ன பிளாஸ்டிக்குகள் அவற்றின் குடலில் சேர்ந்திருந்தது தெரியவந்தது. ஆமைகள் மட்டுமல்ல, சமீபத்தில் இந்தோனேசியாவில் ஒரு திமிங்கிலம் கரை ஒதுங்கியிருக்கிறது. அதன் வயிற்றிலிருந்து பதின்மூன்று பிளாஸ்டிக் டம்ளர்கள், நான்கு பிளாஸ்டிக் பாட்டில்கள், இருபத்தைந்து பிளாஸ்டிக் பைகள், ஒரு நைலான் பை உள்பட மேலும் ஆயிரக்கணக்கிலான சின்னச் சின்ன பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துள்ளார்கள். அந்தத் திமிங்கிலத்தின் வயிறு கிட்டத்தட்ட ஒரு குப்பை மேடாகக் காட்சியளித்துள்ளது. இதுதான் நாம் கடலுக்குச் செய்யும் நன்றிக்கடனா! தன் வாரிசுகளின் வயிறுகளில் சந்ததிகள் வளர்வதைப் பார்த்துப் பூரித்துப்போக வேண்டிய கடல், அதற்குப் பதிலாக நம் குப்பைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கும் வயிற்றைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல் பொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் கடல் எப்போதும் பொறுமையாகவே இருக்க வேண்டுமா!

அக்வா மேன் சொல்லும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் மறுக்கமுடியாத உண்மை. நம் கப்பல்கள், நம் தொழிற்சாலைகள், நம் குப்பைகள் கடலுக்குச் செய்யும் கொடுமைகளைக் காணப்பொறுக்காத யாருக்கும் அக்வா மேன் சொல்லும் கருத்தின் ஆழமும் அதிலுள்ள வலியும் வேதனையும் புரியும்.

தாமிரம் போன்ற உலோகப் பொருள்களுக்காக நாம் எவ்வளவு கடல்வாழ் உயிர்களைக் கொன்று கொண்டிருக்கிறோம்! தாமிரம், கடல் மாசடைவதில் பெரும்பங்கு வகிக்கும் ஓர் உற்பத்திப் பொருள். அது பற்பல உயிரினங்களின் வாழ்வியல் சுழற்சிவரை சென்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

கடல் சுரங்கள் ஆழ்கடலின் முக்கியமான மாசுக்காரணி. தாமிரம், கோபால்ட், துத்தநாகம் போன்றவற்றை ஆழ்கடலில் இருந்து எடுக்கிறோம். அது கந்தகம் அதிகமாக அங்கு படிவதற்குக் காரணமாகிறது. அதுவும் 3,500 மீட்டர்கள் ஆழத்தில். இந்த ஆழ்கடல் சுரங்கங்கள் இன்னும் எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது மேன்மேலும் ஆய்வுகள் செய்யச்செய்ய வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் இருக்கின்றன. அவை ஆழ்கடலில் நச்சுத் தன்மையையும் அதிகப்படுத்துகின்றன. 

மனிதர்கள் உற்பத்தி செய்யும் கழிவுகளையும் நேரடியாகக் கடலுக்கு அனுப்புகிறோம். சாக்கடைக் கழிவுகள், மாசு ஏற்படுத்தும் நச்சுப் பொருள்கள் அனைத்தும் சேர்ந்து அப்படியே கடலுக்குச் செல்கின்றன. இதனால் ஏற்படும் வேதிம வினைகள் கடலில் ஆக்ஸிஜன் வாயுவைக் குறைக்கிறது. கடல் தாவரங்களை அழிக்கிறது. கடல்நீரின் தரத்தையே குறைக்கின்றது. இவை கடல்வாழ் உயிரினங்களின் இருப்பையே ஆபத்துக்குள்ளாக்குகிறது. எவ்வளவோ கடல் ஆமைகள் கரையில் இறந்து கிடப்பதை நாம் பார்க்கிறோம். பார்ப்பதோடு கடந்துசெல்ல மனிதர்களால் மட்டுமே முடியும். நாம் அப்படியே வளர்க்கப்பட்டவர்கள். காலம் முழுவதும் நம்மால் முடியாது என்ற அவநம்பிக்கைகளையே ஊட்டி வளர்த்துள்ளது இந்த மனிதச் சமுதாயம். அந்த அவநம்பிக்கை, சமூகத்தைத் தாண்டி சூழலியல் பிரச்னைகள் வரை நீள்கின்றது.

பூமியின் மிகப்பெரிய நீர்நிலைகள் பெருங்கடல்கள். கடந்த சில பத்தாண்டுகளில் அந்த நீர்நிலைகளுக்கு நாம் மிகப்பெரிய துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மை வாழவைத்த, நம் பொருளாதாரத்தை, கலாசாரத்தை, நாகரிகத்தை முன்னேற்றிய கடலிடம் நன்றிகெட்டு நடந்து கொண்டிருக்கிறோம். அந்த நன்றிகெட்ட செயலின் விளைவுதான் இந்தச் சமுத்திரபுத்திரன். படத்தின் கரு வேறாக இருந்தாலும், கடலின் பக்கம் நின்று அது முன்வைக்கும் வாதம் இதுதான். 

"நீங்கள் எங்கள் வாரிசுகளை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முட்டாள்தனத்துக்கு எங்களை நாசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்."

எண்ணெய், பிளாஸ்டிக், தொழிற்சாலைக் கழிவுகள், வேதிமக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் இன்னும் இன்னும் இன்னும்...

கடல் என்ன மனிதர்களின் கசடுகளைக் கொட்டுவதற்கான குப்பைத் தொட்டியா! அது நிலத்தைவிடப் பல வகையான உயிர்கள் வாழும் சொர்க்கம். அந்தச் சொர்க்கத்தை நரகமாக்க யாருக்குமே உரிமை கிடையாது. நாம் சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொருவரும் இங்கு வாழும் மற்ற உயிரினங்களைவிட நம்மை மேலானவர்களாக நினைத்துச் சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகளைத்தான் இன்று இயற்கைப் பேரிடர்களாக அனுபவிக்கிறோம்.

கடல்களை, பெருங்கடல்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. அதைக் குப்பைத் தொட்டியாக்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பூமிவாசிகள் அனைவருக்குமானது. இந்த உலகில் எந்த உயிரினமும் உயர்ந்தது இல்லை. அனைத்து உயிர்களும் சமம். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும். இங்கு தனித்தனி உலகங்கள் கிடையாது. அனைவரும் ஒரே உலகத்தில்தான் வாழ்கிறோம். ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழவேண்டும். யாரும் யாரையும் கைவிட்டுவிடக் கூடாது.

"மனிதர்களிடம் எப்போதுமே உள்ள ஒரு மனநிலை. ஒரு நம்பிக்கை. அதுதான் இத்தனை அழிவுகளுக்கும் காரணம். எப்படியாவது யாராவது காப்பாற்றி விடுவார்கள் என்ற அந்த நம்பிக்கைதான் நம் பூமிக்கு இருக்கும் பேராபத்து"

- ராபர்ட் ஸ்வான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு