Published:Updated:

ஐ.நா சபை விருது... அனல் பறக்கும் விவாதங்கள்!

ஐ.நா சபை விருது... அனல் பறக்கும் விவாதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.நா சபை விருது... அனல் பறக்கும் விவாதங்கள்!

விவாதம்

“மரங்களைத் தெய்வமாக வணங்கும் மரபு நம்முடையது. நிலம், காடு, ஆறு ஆகியவை அனைத்தும் தெய்வங்கள். அவற்றைப் பாதுகாத்து, சேதாரமில்லாமல், அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும்”- இப்படி உருக்கமான சொற்களை உதிர்த்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. நாட்டு மக்களிடையே தன்னுடைய பிம்பம் உயரும் என நினைத்து, மோடி இப்படிப் பேசியிருக்கலாம். ஆனால், இப்படிப் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் என மோடி எதிர்பார்த்திருக்கவே மாட்டார்.

ஐ.நா சபை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் வழங்கி வரும் ‘சேம்பியன் ஆஃப் எர்த் விருது’ (Champions of the Earth Award) இந்த ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், கடந்த அக்டோபர் 3-ம் தேதி டெல்லியில் இவ்விருதைப் பிரதமர் மோடியிடம் வழங்கினார். அவ்விழாவில், மோடி நிகழ்த்திய உணர்ச்சிமிக்க உரை, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்டவற்றுக்கு எதிராகப் போராடி வரும் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், இவ்விவகாரம் குறித்துத் தெரிவித்திருந்த கருத்துகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஐ.நா சபை விருது... அனல் பறக்கும் விவாதங்கள்!

இதுகுறித்து மணியரசனிடம் பேசினோம். “ஐ.நா சபை இந்த விருதை எந்த அடிப்படையில் பிரதமர் மோடிக்கு வழங்கியது எனத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பா.ஜ.க அரசு, எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டத்தையும் இந்தியாவில் நடைமுறைப்படுத்தவில்லை. ‘வளர்ச்சித்திட்டம்’ என்ற பெயரில் இயற்கை வளங்களைச் சூறையாடத் துடிக்கிறது, மத்திய அரசு. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மெய்சிலிர்க்கப் பேசுகிறார் பிரதமர்.

‘இயற்கை தாங்கக்கூடிய அளவில்தான் மனித நுகர்வு இருக்க வேண்டும். இல்லையேல் இயற்கை நம்மைத் தண்டித்துவிடும்’ எனக் காந்தியடிகள் கூறிய அறிவுரையை மேற்கோள்காட்டிப் பேசுகிறார், மோடி. இயற்கையை, அன்னை என்று காந்தியடிகள்போல் பேசினாலும், காந்தி வேடம் மோடிக்குக் கொஞ்சம்கூடப் பொருந்தவில்லை.

‘வளர்ச்சி’ என்ற பெயரில் ஓ.என்.ஜி.சி, வேதாந்தா போன்ற எரிவாயு நிறுவனங்கள் மூலம் காவிரிப்படுகையிலும் கடற்பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் துடிக்கிறார், பிரதமர். இதனால், சுற்றுச்சூழல் நஞ்சாக மாறுவது குறித்து அவருக்குக் கொஞ்சம்கூடக் கவலையில்லை. பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி, விவசாயத்தை அழித்துச் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க மோடி அரசு தீவிரம் காட்டுகிறது. கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை தொடங்கி நாகை மாவட்டம் கோடியக்கரை வரையிலும் 10 இடங்களில் ராட்சச அனல்மின் நிலையங்கள் அமைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அதனை மூடக்கோரி அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதற்கு ஆறுதல் கூற மோடி இங்கு வரவில்லை. ஆலையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.

‘சுற்றுச்சூழல் தத்துவம் என்பது உலகத்தின் கட்டளை முழக்கமாக மாற வேண்டும். சுற்றுச்சூழல் மீதான அக்கறை மன உணர்ச்சியில் கால்பதித்திருக்க வேண்டும். அது அரசாங்க ஆணைகளைச் சார்ந்திருக்கக் கூடாது’ என உருக்கமாகப் பேசியுள்ளார். அவரது பேச்சு, காந்தியடிகள், வள்ளலார், நம்மாழ்வார் போன்றவர்களின் பேச்சையே மிஞ்சிவிட்டது. அம்பானிகள், அதானிகளின் சுற்றுச்சூழல் அழிப்புகளை மூடி மறைப்பதற்காகத்தான் மோடிக்கு இந்தத் திடீர் ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது” என்று சாடுகிறார், மணியரசன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஐ.நா சபை விருது... அனல் பறக்கும் விவாதங்கள்!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் மணியரசனின் கருத்துக்களைப் பாரதீய ஜனதா கட்சியினர் கடுமையாக எதிர்த்து வரும் சூழ்நிலையில்... மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்.

“மக்களுக்கு நன்மை தரக்கூடிய எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் மணியரசன் போன்றவர்கள் எதிர்க்கிறார்கள். சுற்றுச்சூழல் குறித்துப் பேச மணியரசனுக்கு என்ன தகுதி இருக்கிறது, அவரால் சுற்றுச்சூழலுக்கு என்ன நன்மை விளைந்தது? பிரதமர் மோடி அளவுக்கு இந்தியாவில் வேறு எந்தப் பிரதமரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டித் திட்டங்கள் வகுத்ததில்லை.

காகித உற்பத்திக்காகத்தான் அதிகளவில் மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனைத் தடுக்கத்தான் இந்தியா முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கினார். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்கத்தான் எரிவாயுத் திட்டங்களை அதிகளவில் கொண்டு வருகிறார். மரங்களை அழியாமல் காப்பதற்காகத்தான், விறகு மூலம் அடுப்பெரித்து வந்த கிராமப்புற மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

ஐ.நா சபை விருது... அனல் பறக்கும் விவாதங்கள்!

பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள ‘தூய்மை இந்தியா திட்டம்’, மிகப்பெரிய சாதனை. இதற்கு முன் வேறு எந்தப் பிரதமரும் நாடு தழுவிய அளவில் தூய்மையை வலியுறுத்தியதில்லை. ஏழை வீட்டுப் பெண்கள் திறந்தவெளி கழிவறைக்குத்தான் சென்று கொண்டிருந்தார்கள். கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில் கழிவறைகள் இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்திய பெண்கள் ஏராளம். 2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் 6 கோடி கழிவறைகள்தான் இருந்தன. பிரதமரின் முயற்சியால் தற்போது 8 கோடி கழிவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் இலவசமாகக் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது பெற பிரதமர் மோடிக்கு முழுத் தகுதியுள்ளது. ஒரு தனி அமைப்போ, தனிப்பட்ட ஒரு நாடோ, அவருக்கு இந்த விருதை வழங்கவில்லை. ஐ.நா சபை வழங்கியுள்ளது. ஆனாலும் மணியரசன் போன்றோர் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள்” என்று பொரிந்து தள்ளினார், பொன்.ராதாகிருஷ்ணன்.

- கு.ராமகிருஷ்ணன்