Published:Updated:

``அந்தக் குரல் இன்னும் என் காதுக்குள்ளயே கேட்குது" - நெகிழும் தஞ்சை பெண் விவசாயி ரீட்டா!

விகடன் விமர்சனக்குழு

அப்போ மேடையில பேசிக்கிட்டிருந்தப்ப, என் பெயரைச் சொல்லி விளக்கிச் சொல்லிட்டிருந்தார். அந்த குரல் இன்னும் என் காதுக்குள்ளயே கேட்குது. ஐயா இயற்கையை மீற என்னைக்குமே நினைச்சது இல்லை.

``அந்தக் குரல் இன்னும் என் காதுக்குள்ளயே கேட்குது" - நெகிழும் தஞ்சை பெண் விவசாயி ரீட்டா!
``அந்தக் குரல் இன்னும் என் காதுக்குள்ளயே கேட்குது" - நெகிழும் தஞ்சை பெண் விவசாயி ரீட்டா!

காவிரி, குடமுருட்டி என இருபுறமும் சூழ்ந்த ஆறுகள். நிலத்தைவிட ஆறு மேல்மட்டத்தில் உள்ளது. ஆதலால், நிலத்தடி நீரானது எடுக்க இலகுவாகவும், குடிக்கச் சுவையாகவும் இருக்கிறது. கரும்பு மற்றும் நெல் பிரதானமாகச் சுற்றிலும் பசுமையான சூழலுக்கு நடுவே ஆங்காங்கே வீடுகள். இப்படி வயலும் வயல் சார்ந்ததுமாக உள்ளது, தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டைக்கு அருகே உள்ள இழுப்பக்கோரை எனும் கிராமம். அங்கே கடந்த நாற்பது வருடங்களாக நெல், கரும்பு, காய்கறிகள் என்று இயற்கை விவசாயமும் அதைச் சார்ந்து பல செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார், இயற்கை விவசாயி ரீட்டா. தோட்டத்தில் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம். நம்மைக் கண்டதும் இன்முகத்துடன் வரவேற்று தனது பேச்சை ஆரம்பித்தார். 

``தாத்தா, அப்பானு பரம்பரையான விவசாயக் குடும்பம்தான். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில பி.யூ.சி-யும், மன்னர் சரபோஜி கல்லூரியில பி.ஏ பட்டமும் முடிச்சேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயித்துமேல ஈடுபாடு கொஞ்சம் அதிகம். அதனால, வயலைப் பார்த்துக்கலாம்னு முடிவு செஞ்சு, முழுக்க விவசாயத்துல இறங்கிட்டேன். சொந்த நிலம்தான். ஆனாலும் வேலை செய்ய வர்றவங்களைவிட நான்தான் எப்பவும் முதல் ஆளா வயல்ல இறங்குவேன். மொத்தமா எனக்கு 7 ஏக்கர் நிலம் இருக்கு. 4 ஏக்கர்ல கரும்பும், 3 ஏக்கர்ல வாழையும் இருக்கு. அப்பப்போ உளுந்தும், சோளமும் பயிர் செய்வோம். ரேடியோவுல வேளாண் மையத்தோட அறிவிப்பு அடிக்கடி வரும். எல்லாத்தையும் விடாமக் கேட்பேன். தேவைப்பட்டா நோட்டுல குறிச்சு வைச்சு பல நேரங்கள்ல என் நிலத்துல செஞ்சு பார்த்துடுவேன். இதைத் தொடர்ச்சியாப் பார்த்துக்கிட்டு வந்த வேளாண் மைய அதிகாரிகள் என்னை மையத்துல உறுப்பினரா சேர்த்துக்கிட்டாங்க. அதுக்குப் பின்னால கிராம மகளிர் விவசாயத் தலைவியா ஆனேன்.” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

``மாவட்டத்துல நடக்குற எல்லாப் பயிற்சிகள்லேயும் கலந்துக்குவேன். கருத்தரங்குகள்ல பயிற்சியும் கொடுத்துருக்கேன். இதோட அடுத்த கட்டமா போராட்டம், வீதி பிரசாரம்னு எதையும் விடாம கலந்துக்க ஆரம்பிச்சேன். அப்போ இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவோட அறிமுகம் கிடைச்சது. அவர்கூட பல கருத்தரங்குகள்ல கலந்துக்கிட்டுப் பேசியிருக்கேன். எங்க ஊர்ல இருந்து யாராவது அவரைப் பார்க்கப் போனா நிச்சயம் என்னைப் பத்தி விசாரிப்பார். அவர்கிட்ட கத்துக்கிட்ட இயற்கை விவசாய உத்திகளைப் பயன்படுத்தி இயற்கை சார்ந்த விவசாயம் அதிகமா செய்ய ஆரம்பிச்சேன். இன்னைக்கும் எங்க வயல்ல பஞ்சகவ்யாதான் பிரதான உரம். அவர் பேசுறப்போ இயற்கை விவசாயத்தைப் பத்தி யாரும் அதிகமா பேசலை. ஆனா, இன்னைக்கு அவர் பேசுன கருத்துகளை எல்லோரும் பேசுறாங்க. இதைப் பார்க்குறப்போ மனசுக்கு சந்தோஷமா இருக்குது. இப்படித்தான் ஒரு நாள் அரசோட திட்டங்களை வானொலியில கேட்டு, அதுல கேட்ட கேள்விக்குப் பதில் எழுதி அனுப்புனேன். அதுல எனக்கு இந்திய அளவுல முதல் பரிசு கிடைச்சது. இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனமும்', திருச்சி வானொலி  நிலையமும் சேர்ந்து திருச்சியில நடத்துன விழாவுல, அப்போ திருச்சி மாவட்ட ஆட்சியர் மூர்த்தி கையால விருது வாங்குனேன். என்னோட ஊர்லயும் பாராட்டு விழா நடத்துனாங்க. 2003-ம் வருஷம் ஜெனிவாவுல இருக்குற `Women's World Summit Foundation'-ங்குற அமைப்பு `Women's Creativity in Rural Life'-ங்குற விருதைக் கொடுத்தாங்க.

2011-ம் வருஷம்னு நினைக்கிறேன். உத்தரகாண்ட் மாநிலம், உத்ராஞ்சல்ங்குற இடத்துல வந்தனா சிவாங்குறவர் `நவதானியம்'ங்குற ட்ரஸ்ட் நடத்துறார். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் சார்ந்த செயல்பாடுகளையும், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்திக்கிட்டிருக்கார். உதாரணமா சொன்னா நம்ப மாட்டீங்கனு தெரியும். அங்க ஒவ்வொரு மண்புழுவும் என் விரல் அளவுக்கு இருந்துச்சு. மரங்கள் சார்ந்த இயற்கை கருத்தரங்குக்கு நம்மாழ்வாரோட தமிழ்நாட்டுல இருந்து 80 பேர் போயிருந்தோம். ஐயா வழக்கம் போல மரங்கள், அங்கயிருந்த தாவரங்கள் பத்தி எல்லாத்தையும் விளக்கிச் சொல்லிட்டிருந்தார். அப்போ மேடையில பேசிக்கிட்டிருந்தப்ப, என் பெயரைச் சொல்லி விளக்கிச் சொல்லிட்டிருந்தார். அந்தக் குரல் இன்னும் என் காதுக்குள்ளயே கேட்குது. ஐயா இயற்கையை மீற என்னைக்குமே நினைச்சது இல்லை. அதைத்தான் நானும் செஞ்சுக்கிட்டிருக்கேன்.” என்றார் ரீட்டா ததும்பும் குரலில்.

அதைத் தொடர்ந்து பேசிய அவரது மகன் ``எங்கு என்ன நிகழ்ச்சின்னாலும் அம்மா உடனே போயிடுவார். சமீபத்துல கூட நெல் ஜெயராமன் ஐயா மறைவுக்குப் போகணும்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களுக்கு உடல் நிலை இப்போ சரியில்லை, அதனால நாங்க விடலை. நம்மாழ்வார் ஐயா முதற்கொண்டு பலபேர் எங்க வீட்டுக்கு வந்துருக்காங்க. இப்போ நடக்குற விவசாயக் கூட்டங்கள்ல எங்க அம்மா பெயரைச் சொன்னாலே எனக்கு தனி மரியாதை கிடைக்குது. இப்போ அம்மா ஆலோசனை கொடுக்குறாங்க. நான் வயல்ல இறங்கி வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். அம்மா  ஓய்வுல இருந்தாலும் பலபேர் ஆலோசனை கேட்டு வருவாங்க. அவங்களும் ஆலோசனை கொடுத்துக்கிட்டுதான் இருக்காங்க" என்றபடி இருவரும் விடைகொடுத்தனர்.