Published:Updated:

``எங்களுக்கு என்ன செய்தது இந்தச் சென்னை?!" - எண்ணூர் மக்களின் நியாயமான கேள்வி

``எங்களுக்கு என்ன செய்தது இந்தச் சென்னை?!" - எண்ணூர் மக்களின் நியாயமான கேள்வி

எண்ணூர் பவுண்டரிஸ், உரம் உற்பத்தி, அனல்மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், துறைமுகம் போன்றவை அனைத்தும் அமைந்திருப்பது எண்ணூரில். ஆனால், அதன் மக்களுக்குக் கிடைப்பதென்னவோ சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், கடல் அரிப்பும்தான்.

``எங்களுக்கு என்ன செய்தது இந்தச் சென்னை?!" - எண்ணூர் மக்களின் நியாயமான கேள்வி

எண்ணூர் பவுண்டரிஸ், உரம் உற்பத்தி, அனல்மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், துறைமுகம் போன்றவை அனைத்தும் அமைந்திருப்பது எண்ணூரில். ஆனால், அதன் மக்களுக்குக் கிடைப்பதென்னவோ சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், கடல் அரிப்பும்தான்.

Published:Updated:
``எங்களுக்கு என்ன செய்தது இந்தச் சென்னை?!" - எண்ணூர் மக்களின் நியாயமான கேள்வி

டசென்னை. உண்மையான சென்னை. மண்ணிலிருந்து முளைத்த செடிகளைப் போல் இங்கேயே முளைத்த மக்கள் வாழும் மண், வடசென்னை.

அதே நேரம், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக நிற்கிறது. அதிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக நிற்கிறது, எண்ணூர். எண்ணூர் மக்கள், சென்னையின் வளர்ச்சிக்காகத் தங்கள் நிலங்களை தானம் தந்த வள்ளல்கள் என்றே சொல்லலாம். அந்த வள்ளல்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் வசதியாக மறந்துவிட்டது.
துறைமுகம், தொழிற்சாலைகள், அனல் மின் நிலையம் என்று அனைத்துக்காகவும் இடம் கொடுத்த மக்களுக்கு அவற்றில் உள்ள வேலைவாய்ப்பு மிகக் குறைவு. அவர்களுக்கான கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் எதுவுமே இன்னும் மேம்படுத்தப்படவே இல்லை. சென்னையின் ஒரு பக்கம் பல்நோக்குத் திட்டங்களுடன் கூடிய வளர்ச்சிப் பணிகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அதுவே மறுபக்கமுள்ள வடசென்னையில் உள்ள எண்ணூருக்குச் சென்றால் அங்கு குறைந்தபட்ச அவசர சிகிச்சைக்கான முறையான ஒரு மருத்துவமனைகூட இல்லை. மற்ற பகுதிகளைப் போன்ற தரமான கல்வி பயிலும் வசதிகள் ஏற்படவில்லை. அவர்கள் சுவாசிப்பது அம்மோனியா கலந்த காற்று, குடிப்பது புளோரைடு கலந்த தண்ணீர். சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய மாநகராட்சி. ஆனால், அதன் முதல் இரண்டு வார்டுகளிலேயே மக்கள் முறையான அடிப்படை வசதிகளும், தரமான வாழ்வாதாரமும் கிடைக்காத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கடமைகளை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டும். அதற்கு மக்கள் மத்தியில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அர்ப்பணிப்பும், ஒற்றுமையும் வேண்டும். அதற்காகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-12-2018) `நமக்கான எண்ணூர்’ என்ற மக்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் படிப்பகம் நடத்திய `நமக்கான எண்ணூர்’ நமது எண்ணூரைப் பற்றிய ஒரு சிந்தனைக் களமாக இருந்தது. அப்பகுதி மக்களைக் கட்சி பேதமின்றி கொள்கை பேதமின்றி எண்ணூருக்கான கோரிக்கைகளை அதன் வளர்ச்சிக்கான சூழலியல் முன்னேற்றத்துக்கான கோரிக்கைகளை ஆலோசிப்பதற்காக ஒன்று திரட்டிய கூட்டம். சிறப்பு விருந்தினர்களாக நீரியல் வல்லுநர் பேரா. ஜனகராஜன், சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாகி ரங்கராஜன், ஊடகத்துறையைச் சேர்ந்த விஜய் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த பத்து வருடங்களில் தென் சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் ஏற்பட்ட உள்கட்டுமானங்களும், போக்குவரத்து வசதிகளும் மேல்தட்டு மக்களுக்கு ஏற்பட்ட வசிப்பிடச் சுகாதாரமும் பிரமிக்கத்தக்கவை. அவற்றில் பத்து சதவிகிதம்கூட எண்ணூர் மக்களுக்குக் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்படவில்லை. அரசு ஏற்படுத்தித் தரவும் இல்லை. தாம்பரம் - கடற்கரைக்கு இடையே ரயில் போக்குவரத்துக்கு பத்து நிமிடத்துக்கு ஒருமுறை இருக்கிறது. அதுவே வடசென்னையில் ரயிலை விட்டால் இரண்டு மணிநேரங்கள் காத்திருக்க வேண்டும். இதுவே அவர்கள் நிலை. தாம்பரம், மடிப்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், பூவிருந்தவல்லி போன்ற பகுதிகள் அடைந்த வளர்ச்சியை ஏன் திருவொற்றியூரோ, எண்ணூரோ அடையவில்லை. இந்த அப்பட்டமான புறக்கணிப்பை மக்களுக்குப் புரிய வைக்க அவர்களின் பிரச்னைகளை அவர்கள் மூலமாகவே தெரிந்துகொள்ள நடந்ததே இந்த மக்கள் கலந்தாய்வு.

கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நிலம் தற்போது ஆக்கிமிக்கப்பட்டுள்ளது. அது அரசாங்கத்தின் வசம் இருக்கிறதா இல்லை தனியார்வசம் இருக்கிறதா என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலத்தை மீட்டுத் திரும்பவும் அரசு பள்ளிக்குச் சொந்தமாக்க வேண்டுமென்ற கோரிக்கை உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது நமக்கான எண்ணூர். ஒவ்வொரு கோரிக்கை குறித்தும் அந்தச் சிக்கலை அனுபவிக்கும் மக்களையே அழைத்துப் பேச வாய்ப்பு தந்தனர். கூட்டத்துக்கு வந்திருந்தோர் தத்தம் கருத்துகளைப் பதிவு செய்யவும் நேரம் வழங்கப்பட்டது.

அந்தக் கோரிக்கைகள், கத்திவாக்கம் அரசுப் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை மீட்பதோடு, படுக்கை வசதிகள் கொண்ட 24 மணிநேர அரசு மருத்துவமனை கட்டவேண்டும். திருவொற்றியூரில் தற்காலிகமாக இயங்கும் சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு எண்ணூரில் நிரந்தர இடம் ஒதுக்கவேண்டும். கிளை நூலகத்துக்கு அறிவிக்கப்பட்டபடி விசாலமான இடத்தில் புதிய கட்டடம், தாமரைக் குளத்தைப் பராமரிக்க அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை முறையாக அமல்படுத்தி நிலத்தடி நீரைப் பாதுகாப்பது, மெட்ரோ ரயில் போக்குவரத்து எண்ணூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். முறையான பேருந்து வசதி, திருவல்லிக்கேணி, வடபழனி, கொடுங்கையூர் தடங்களில் நிறுத்தப்பட்டப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு உட்பட்டு அனல்மின் நிலைய மின்சார உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதோடு, புதிய திட்டங்களுக்கோ விரிவாக்கத்துக்கோ அனுமதி வழங்கக் கூடாது. மீனவர்கள் எளிதாகக் கடலுக்குச் செல்லும் வகையில் முகத்துவாரத்தைத் தொடர்ந்து தூர்வார நிரந்தர ஏற்பாடு செய்யவேண்டும். கொற்றலை ஆற்றில் ஆலைக்கழிவுகள் கொட்டுவதையும், ஆற்றுநிலத்தை ஆக்கிரமிப்பதையும் தடுக்க வேண்டும். அனல்மின் நிலையம், துறைமுகம் உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளில் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குத் தகுதி அடிப்படையில் வேலை வழங்கவேண்டும். இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தத் தனி விளையாட்டுத் திடல் வேண்டும். தாழங்குப்பம் கடற்கரை எதிரில் உள்ள நிலத்தை விளையாட்டுத் திடலுக்கு ஒதுக்கிட வேண்டும். எண்ணூர் மையப்பகுதியில் நடைபாதை வசதிகளுடனான பூங்கா அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகிறது, சென்னை. அந்தச் சென்னையின் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் அசோக் லே-லாண்டு, எண்ணூர் பவுண்டரிஸ், உரம் உற்பத்தி, அனல் மின் நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், துறைமுகம் போன்றவை அனைத்தும் அமைந்திருப்பது எண்ணூரில். ஆனால், அதன் மக்களுக்குக் கிடைப்பது என்னவோ சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், கடல் அரிப்பும்தான். அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளையாவது உருவாக்கியதா என்றால் இல்லை என்பதே அப்பகுதி மக்களின் பதில். எண்ணூர் மக்களின் இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்துச் சரி செய்ய வேண்டும். சென்னையின் வளர்ச்சிக்கு வழிவிட்ட வள்ளல்களிடம் அரசு கொஞ்சமாவது நன்றியோடு நடந்துகொள்ள வேண்டும்.