Published:Updated:

`2100-க்குள் மும்பை மூழ்கும்!' - சொல்வது இந்திய அரசு!

இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையும் அதை ஒட்டிய மேற்குக் கடற்கரையின் பல பகுதிகளும் இந்த நூற்றாண்டுக்குள் கடலில் மூழ்கிவிடும் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பாராளுமன்றத்தில் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்துள்ளார். 

`2100-க்குள் மும்பை மூழ்கும்!' - சொல்வது இந்திய அரசு!
`2100-க்குள் மும்பை மூழ்கும்!' - சொல்வது இந்திய அரசு!

புவி வெப்பமாதல் காரணமாகக் கடல்நீர் மட்டம் உயர்வதும் அதனால் நிலப்பரப்பும் நகரங்களும் கடல்நீரில் மூழ்கும் அபாயம் குறித்தும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த அனைத்து ஆய்வுகளின் முடிவுகளும் கடல்நீர் மட்டம் உயர்வதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் உறுதிப்படுத்துகின்றன. கடல்நீர் மட்டம் எப்போது அதிகமாக உயரும், அதன் அதீத பாதிப்பு எப்போது ஏற்படும் போன்ற கால அளவைக் குறிப்பிடுவதில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நிச்சயமாகப் பாதிப்பு இருக்கிறது. நம் கண்முன்னே தற்போதுகூட பல்வேறு தீவுநாடுகளின் கடற்கரைகள் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. அவை மிகச்சிறிய நாடுகளாக இருப்பதாலேயே உலகத்தின் கவனத்துக்கு அவை வரவில்லை போலும். நமது நாட்டின் பகுதிகள் கடலுக்குள் மூழ்காதவரைக் கடல்நீர் மட்ட உயர்வு என்பது ஒரு செய்திதான். ஆனால், அந்த அபாய எச்சரிக்கை தற்போது இந்தியாவுக்கும் வந்துள்ளது. ஆம், இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையும் அதை ஒட்டிய மேற்குக் கடற்கரையின் பல பகுதிகளும் இந்த நூற்றாண்டுக்குள் கடலில் மூழ்கிவிடும் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பாராளுமன்றத்தில் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்துள்ளார். 

ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கக்கூடிய கடல் தகவல் சேவைக்கான தேசிய மையத்தில் (Indian National Centre for Ocean Information Services) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின்படி இந்திய கடற்கரையின் கடல்நீர் மட்டமானது புவி வெப்பமயமாதல் காரணமாக இந்த நூற்றாண்டுக்குள் 3.5 இன்ச்சிலிருந்து 34.6 இன்ச் வரை உயரலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 34.6 இன்ச் என்பது 2.8 அடி அல்லது 87.8 செமீ. ஒரு செமீ அளவு கடல்நீர் மட்டம் உயர்ந்தாலே பல்வேறு விளைவுகள் ஏற்படும் எனக் கூறப்படும் நிலையில் 2.8 அடி என்பது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது உறுதி. முக்கிய துறைமுக நகரமான மும்பை உட்பட கம்பாட் (Khambat), குட்ச் (Kutch) என இந்தியாவின் மேற்குக் கடற்கரையின் பல பகுதிகள், கொங்கன் (Konkan) கடற்கரைப் பகுதி மற்றும் தெற்கு கேரளா ஆகியவை கடல்நீர் மட்ட உயர்வால் மிக அதிக அளவில் பாதிக்கப்படுமென ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள கங்கை, கிருஷ்ணா, கோதாவரி, காவேரி மற்றும் மகாநதி ஆகிய நதிகளின் டெல்டா பகுதிகளும் பாசன நிலங்களும் அதன் அருகே அமைந்துள்ள நகரங்கள், கிராமங்கள் என மிகப்பெரிய நிலப்பரப்புக்கும் கடல்நீர் மட்ட உயர்வின் அச்சுறுத்தல் இருக்கிறது. மேற்சொன்ன ஆறுகள் கடல்நீர் மட்ட உயர்வால் பாதிக்கப்பட்டால் கங்கைச் சமவெளி, தக்காண பீடபூமி, தென்னிந்தியாவின் பெரும்பான்மையான நீர்த் தேவை ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும். 

கடல்நீர் மட்ட உயர்வால் நிலப்பரப்பு மூழ்கும் அபாயம் மட்டுமல்ல. அவை நமது நாட்டின் உணவு உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் ஆற்றுநீரைச் சார்ந்துள்ளனர். கடல்நீர் மட்டம் உயர்வதால் ஆற்றுநீரின் உப்புத் தன்மை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் சுற்றுச்சூழல் ஒழுங்குத் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் கடற்கரைக்கு அருகில் உள்ள நிலத்தடி நீர் உப்புத் தன்மை உடையதாக மாறிவிடும். இதனால் சதுப்புநிலங்கள் பாதிக்கப்படும். நிலப்பரப்பு அழியும். கடலோர சமூகங்களான மீனவர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவர். தற்போதைய நிலையிலேயே தண்ணீர்த் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் யுனெஸ்கோ (UNESCO) அளித்த அறிக்கையின்படி 2050-ம் ஆண்டுவாக்கில் மத்திய மற்றும் தென்னிந்தியாவின் நீர் வழங்குதல் மிக மோசமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் கடல்நீர் மட்ட உயர்வு என்பது எவ்வளவு மோசமான பிரச்னையாக உருப்பெற இருக்கிறது என்பது புரியும்

காட்ஃப்ரே பிமென்டா(Godfrey Pimenta) என்ற செயற்பாட்டாளர் கடல்நீர் மட்ட உயர்வு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் மும்பை கடற்கரையின் கடல்நீர் மட்டமானது ஆண்டுக்கு 1 மில்லி மீட்டர்  வீதம் அதிகரித்து வருவதாகப் பதிலளித்துள்ளது. இதற்கெல்லாம் முன்னதாக 13 ஆண்டுகளுக்கு முன்பு 2005-ம் ஆண்டில் மும்பையில் வெள்ளம் ஏற்பட்டபோது அமைக்கப்பட்ட மாதவ் சிடாலே (Madhav Chitale) குழுவின் பரிந்துரையின்படி பனிப்பாறைகள் உருகுவதால் மும்பையின் கடல்நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும் மும்பை போன்ற கடற்கரை நகரத்தைச் சரிவர திட்டமிடலோடு கட்டமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் இந்த ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்ததோடு இந்த அபாயங்களைத் தடுக்கும்விதமாக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மகேஷ் சர்மா. கடலோர சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையைப் பாதுகாக்கவும், மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்கரையோரப் பாதுகாப்புக்கும் அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் கூறியுள்ளார். அதிக பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் மும்பை கடற்கரையில்தான் 3,700 கோடி செலவில் சத்ரபதி சிவாஜியின் சிலை அமைக்கப்படவுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் சூழல் குறித்த விழிப்பு உணர்வுகளை அந்தந்த நாட்டின் குடிமகன்களுக்கு வழங்கிவரும் நிலையில் நமது அரசிடம் அது குறித்தான தெளிவான பார்வை இருக்கிறதா?