Published:Updated:

டெல்லியில் மோசமடையும் காற்று மாசுபாடு - தொழிற்சாலைகள் இயங்கத் தடை

டெல்லியில் மோசமடையும் காற்று மாசுபாடு - தொழிற்சாலைகள் இயங்கத் தடை
டெல்லியில் மோசமடையும் காற்று மாசுபாடு - தொழிற்சாலைகள் இயங்கத் தடை

டெல்லியில் தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டின் காரணமாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் (Environment Pollution Control Authority (EPCA)) தொழிற்சாலைகளுக்கும் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதித்துள்ளது. நேற்றிலிருந்து மூன்று நாள்களுக்குப் புதன்கிழமை வரை டெல்லி முழுவதும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக டெல்லி மாநகரம் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு, டெல்லி மிக அதிக அளவிலான மாசுபாட்டை எதிர்கொண்டு வருகிறது. நேற்று திங்களன்று தொடர்ச்சியாக மூன்றாவது நாள் காற்று மாசுபாடு கடுமையான அளவில் உள்ளது. காற்றின் வேகமும் மற்ற வானியல் நிகழ்வுகளும் காற்று மாசுபாட்டைக் குறைக்கவில்லை. 

வீட்டைவிட்டு வெளிவருவதையும் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மிக முக்கிய தொழிற்துறைப் பகுதிகளான வசிர்பூர் (Wazirpur) முன்ட்கா (Mundka) நரேலா (Narela) பவனா (Bawana) ஷகிபாபாத் (Sahibabad) ஃபரிதாபாத் (Faridabad) ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. இதை EPCA தலைவர் புஹ்ரே லால் (Bhure Lal) கடிதம் மூலம் டெல்லி தலைமைச் செயலாளர் விஜய் குமார் தேவ்விடம் (Vijay Kumar Dev) தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டெல்லி, ஃபரிதாபாத், குருகான் (Gurugan), கசியாபாத் (Ghaziabad) மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் நடைபெறும் அனைத்துவிதமான கட்டுமானப் பணிகளையும் புதன்கிழமை வரை தடை செய்துள்ளனர். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் திங்கள்கிழமை டெல்லியின் 32 பகுதிகள் காற்று மாசுபாட்டின் கடுமையான நிலைமையையும் ஐந்து இடங்களில் மிக மோசமான நிலையையும் பதிவு செய்துள்ளது. காற்று தர குறியீட்டு எண் 461 ஐத் தாண்டி மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இன்னும் பல இடங்களில் இதே மோசமான அளவை எட்டியதால்தான் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.