Published:Updated:

பேரன்பு... பெருங்கோபம்... மூர்க்க குணம் கொண்ட சியாம் சண்டை மீன்கள்!

பேரன்பு... பெருங்கோபம்... மூர்க்க குணம் கொண்ட சியாம் சண்டை மீன்கள்!
பேரன்பு... பெருங்கோபம்... மூர்க்க குணம் கொண்ட சியாம் சண்டை மீன்கள்!

"முட்டையிட்ட உடன் பெண் மீன்களை உடனடியாக எடுத்து மற்ற தொட்டிகளில் விட வேண்டும். இல்லையெனில் முட்டைகளைப் பெண் மீன் தின்றுவிடும். தனியாகப் பெண் மீனைப் பிரித்துவிட்டால், முட்டைகளைப் பேரன்புடன் ஆண் மீன் பாதுகாக்கும்."

பொதுவாக உயிரினங்கள் பலவும் தங்கள் இனத்துக்குள் கூட்டாக வாழும் தன்மை உடையவை. அந்தந்த இனத்தோடு அரவணைத்துக் கொள்ளும் வகையில் அவற்றின் குணாதிசயங்கள் அமைந்திருக்கும். ஆனால், மீன் வகை இனத்தைச் சேர்ந்த சியாம் சண்டை மீன்களின் கதையே வேறு. இந்த வகை மீன்கள் பிற இனங்களை ஒன்றும் செய்யாது. ஆனால், ஒரு சியாம் ஆண் மீன், இன்னொரு ஆண் மீனைக் கண்டுவிட்டால் உடனே போருக்குக் கிளம்பிவிடும். இந்த இனத்தின் ஆண் மீன்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டு இறப்பவை.

இந்த சியாம் சண்டை மீன்கள் (Siamese fighting fish) பூர்வீகம், மேக்கொங் ஆற்றுப்படுகை, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளிலிருந்து வந்தவையாகும். கௌராமி (Gourami) என்ற குடும்பத்தைச் சார்ந்த மீன் இனமான சியாம் சண்டை, பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படுபவை. ஆனால், ஒரே இன வகை மீனாக இருந்தாலும் தனித்தனி தொட்டிகளிலேயே வளர்க்கப்படும். அதற்குக் காரணம், சியாம் மீன்களின் போர்க்குணம். ஒரே தொட்டியில் இரண்டு ஆண் மீன்களை வளர்த்தால் இரண்டும் சண்டையிட்டு ஏதாவது ஒரு மீன் இறந்துவிடும். அதனால் ஆண் மீன்களை மட்டும் தனியாகப் பிரித்து வளர்க்கின்றனர். பெண் மீனையும், ஆண் மீனையும் ஜோடியாகச் சிறியதாக இருக்கும்போது இருந்தே வளர்க்கலாம். அதன் பின்னர் இனப்பெருக்க காலம் தவிர்த்து, மற்ற நேரங்களில் ஆண் மீன்களிடமிருந்து பெண் மீன்களைப் பிரித்துவிட வேண்டும்.

தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டாலும், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலும் இவற்றை அதிகமாகக் காணலாம். இயல்பாக சியாம் சண்டை மீன்கள் வயல்வெளி மற்றும் குளங்கள் என நன்னீர் பகுதிகளிலேயே வாழக்கூடியது. ஆனால், இந்த வகை மீன்களை அதிகளவில் அலங்கார மீன்களாக மட்டுமே தொட்டிக்குள் வைத்து வளர்க்கிறார்கள். வெறும் 1 அங்குலத்திற்கும் குறைவாக வளரக்கூடியவை. இவ்வகை மீன்கள் உணவாக எடுத்துக்கொள்ள தகுந்தவை அல்ல. ஆனாலும் பெரும்பாலான மக்களால் அதிகமாக விரும்பி வளர்க்கப்படுவதற்குக் காரணம், இவற்றின் கண்ணைப் பறிக்கும் அழகுதான். இந்த மீன்களில் பெண் மீன்களை விட ஆண் மீன்களே அழகாக இருக்கும். பெண் மீன்களுக்குப் பிடரிகள் இருப்பது இல்லை. ஆண் மீன்களில் அழகிய வண்ணப் பிடரிகள் காணப்படுவதால் நீந்தும் அழகில் மயங்கி அதிகமானோர் இதை வளர்க்கின்றனர். இந்த வகை மீன்களை மற்ற மீன்களுடன் சேர்த்து வளர்க்கலாம். 

இவற்றில் ஆண் மீன்களானது துணி போன்ற அசையும் துடுப்புகளைக் கொண்டு உள்ளது. உலகின் 11-வது பெரிய நதியான மேக்கொங் ஆற்றுப் படுகையே இதன் பூர்வீகம். அதனால் அந்த நதி பாயும்,  லாவோஸ், கம்போடியா, வியட் நாம் மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகமாக வளர்கின்றன. இந்த நதியிலிருந்து பிரிந்து செல்லும் சிறிய ஓடைகள், கால்வாய்கள், வயல்வெளிகள் போன்றவற்றிலும் இவற்றைக் காண முடிகிறது. இவ்வகை மீன்களைப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அழியும் தறுவாயில் உள்ள மீன்களின் பட்டியலிலும் இணைத்துள்ளது. ஒரே தொட்டியில் இரண்டு மீன்களை விட்டால் இரண்டும் மூர்க்கத்தமாக சண்டையிட்டுக் கொள்ளும். இறுதியில் பலமான மீன் பலவீனமான மீனைக் கொன்று விடும். இம்மீன்களின் போர் குணத்தால்தான் இவை `சண்டை மீன்' என்று அழைக்கப்படுகின்றன. சியாம் சண்டை மீன்களின் இணை சேரும் முறை கொஞ்சம் சுவாரஸ்யமானது. 

ஆண் மீன்களுக்கு இனச்சேர்க்கை உணர்வு ஏற்படும்போது, தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்து எச்சில் குமிழ்களை மிதக்க விடும். அதைக் காணும் பராமரிப்பாளர்கள் இனச்சேர்க்கைக்காக பெண் மீனை, ஆண் மீன் உள்ள தொட்டிகளில் விடுவார்கள். ஆண் மீன் தாக்குமே என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் மீன்கள், பெண் மீன்களைத் தாக்காது. இனப்பெருக்கக் காலம் முடியும் தறுவாயில் பெண் மீன்கள் முட்டையிட்டு விடும். முட்டையிட்ட உடன் பெண் மீன்களை உடனடியாக எடுத்து மற்ற தொட்டிகளில் விட வேண்டும். இல்லையெனில் முட்டைகளைப் பெண் மீன் தின்றுவிடும். தனியாகப் பெண் மீனைப் பிரித்துவிட்டால், முட்டைகளைப் பேரன்புடன் ஆண் மீன் பாதுகாக்கும். அதிகமான மூர்க்கத் திறன் கொண்ட ஆண் மீன்தான் முட்டைகள் குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாக்கும். முட்டைப் பொறித்தவுடன் ஆண் மீனையும் பிரித்து விட வேண்டும். அல்லது மீன் குஞ்சுகளை தனியாகப் பிரித்து வளர்க்கலாம். அக்குஞ்சுகளில் சிறிது வளர்ந்த நிலையில் ஆண் மீன்களை மட்டும் தனியாகப் பிரித்து விடுவது நல்லது. இன்றைக்குப் பல நாடுகளில் சியாம் சண்டை மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

அடுத்த கட்டுரைக்கு