Published:Updated:

பாரம்பர்ய பொருள்களுடன் அசத்தும் சென்னை கிராமியக் கலை விழா!

பாரம்பர்ய பொருள்களுடன் அசத்தும் சென்னை கிராமியக் கலை விழா!
பாரம்பர்ய பொருள்களுடன் அசத்தும் சென்னை கிராமியக் கலை விழா!

லகமயமாக்கல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், கிராமத்துப் பாரம்பர்ய உணவு வகைகள் முதல் கைவினைப் பொருள்கள் வரை கண்களுக்கு எட்டாத தூரத்திற்குப் பயணித்துக்கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்களும், கூட்டுறவுச் சங்கங்களும் கிராமியப் பண்பாடுகளைக் காப்பாற்றும் நோக்கில் கண்காட்சி, விழிப்புஉணர்வு எனப் பலவற்றை நடத்திவருகிறார்கள். அவ்வகையில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி இணைந்து ‘நபார்டு கிராமியத் திருவிழா’ என்கிற கண்காட்சி, சென்னை தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் உள்ள ஜெ.ஒய்.எம் கல்யாண மண்டபத்தில் நடத்திவருகிறது. 

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கிராமியக் கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள், சுயமுன்னேற்றக் குழுக்கள், விவசாயக் குழுக்கள் ஆகியோர் இக்கண்காட்சியில் பங்குபெற்றுள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் 100-க்கும் மேற்பட்ட சிறப்புகளை, 44 அரங்குகளில் அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். காங்கேயம், சென்னிமலை, அரியலூர், காரைக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய இடங்களின் கைத்தறித் தொழிலாளர்கள் தங்கள் கைவண்ணத்திலான பட்டு, சில்க், காட்டன் புடவைகளைக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். விவசாயிகளிடமிருந்து நேரடியாக நூல் வாங்கி, கையால் நெய்து, நேரடியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எளிமையான வண்ணங்கள், அழகான டிசைன்கள் என்று பார்வையாளர்களைக் கவர்ந்தபடி புடவைகள் இருக்கின்றன. 

பிளாஸ்டிக் பைகள் தடை ஏற்பட்டுள்ள இச்சமயத்தில் சணல் பைகள், துணிப்பைகள் என அழகுடன்கூடிய எம்ப்ராய்டிங் வேலைப்பாடுகளுடன் குறைந்த விலையில், திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். 
திருவிழாவைத்  தொடங்கிவைத்துப் பேசிய, ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மண்டல இயக்குநர் அருந்ததி மெக், ‘கிராமப்புற வளர்ச்சிக்கு, நபார்டு வங்கி செய்துள்ள பணிகள் பாராட்டத்தக்கது’ என்றார். நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல முதன்மை மேலாளர் பத்மா ரகுநாதன், ‘‘கிராமியத் தொழில்களை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இதுபோன்ற திருவிழாக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்’’ என்று உறுதிபடப் பேசினார். ‘‘இந்தியாவில் உள்ள கைத்தொழில்கள் பாரம்பர்யம் கொண்டவை. உலகின் மிகச்சிறந்த கலைவண்ணம் நம்மிடம் உள்ளது. அதை வெளிப்படுத்த, வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும்’’ என்றார், தமிழக அரசின் நிதி ஆலோசகர் நாகூர் அலி ஜின்னா. 

‘ஓடுற வாய்க்கால் தண்ணியில் ஊறவச்சி, கத்தி எடுத்துக் கிழிச்சு, உள்ள இருக்குற சோத்தையெல்லாம் வெளிய எடுத்து செஞ்சதுதான் கரூர் கோரைப்பாய்’ என்று ஒரு பாட்டி சொன்ன விளக்கத்துடன் கோரைப்பாயையும், ஹேண்ட் பேக்கையும் பார்த்தபடி பார்வையாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். ‘நாப்கின் பயன்படுத்துவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் இதர சில பிரச்னைகள் வருவதால், நமது முன்னோர்கள் பயன்படுத்தியதைப் போல துணியைப் பயன்படுத்தலாம்’ என்று துணியாலான நாப்கின்களை திருச்சி குழுவினர் காட்சிப்படுத்தியிருந்தனர். 

பழங்குடி மக்கள் பனாரஸ், ஆக்ரா பாசிகள் மற்றும் ருத்திராட்ச மாலைகளையும், கம்மல், வளையல் போன்ற அணிகலன்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். கேரட், பீட்ரூட், எலுமிச்சை, உருளைக்கிழங்கு போன்ற உணவுப்பொருள்களின் சாறுகளில் தயாரான சோப்பு, எண்ணெய் போன்ற பொருள்களையும், கலப்படமில்லாத மஞ்சள், மிளகாய்த்தூள், இட்லிப்பொடி போன்ற பொருள்களையும் கோயமுத்தூர், கரூர் குழுவினர் காட்சிப்படுத்தியிருந்தனர். 

சிறுதானியங்களிலான பிஸ்கட், மிட்டாய், முறுக்கு போன்ற தின்பண்டங்களையும்; மலைகளிலிருந்து அப்படியே எடுக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட தேன் வகைகளையும் வைத்திருந்தனர். வாழைக்காய் மாவு, நாட்டு அரிசி வகைகளையும் வைத்திருந்தனர். கேரள அரங்குகளில் செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய், தேன், மேங்கோ ஜாம் போன்ற பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர். விவசாயப் பொருள்களில், பயன்பாட்டுக்குப் பிறகான மீதியை அழகிய பொக்கேக்களாக மாற்றி, கேரள குழுவினர் காட்சிப்படுத்தியிருந்தனர்.


“ இயற்கைதான் நிரந்தரம். இனி எல்லாரும் மண்பாண்டங்களைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்; வேறு வழியில்லை” என்ற நம்பிக்கையில், திருநெல்வேலியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளிகள், மண்ணாலான வாட்டர்பாட்டில், கப், பாத்திரங்கள் மற்றும் பிளேட் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். திருவள்ளுவர் மற்றும் பல கடவுள்களின் சிலைகளை, விழுப்புரம் மக்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். 

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை முற்றிலும் இயற்கை முறையில் தயாரித்து, கிராமக் கலைஞர்கள் கலக்கிய இக்கண்காட்சி, நேற்று (ஜனவரி 3) தொடங்கி, ஜனவரி 6 வரை நடக்க உள்ளது. காலை 10 மணி முதல் 8.30 மணி வரை நடக்கிறது. நம் மண்ணின் பெருமையை அறிந்துகொள்ளவும், கைவினைப் பொருள்கள், சிறுதானிய உணவுகளை ருசிக்கவும் சென்று பார்க்கவேண்டிய திருவிழா இது.