Published:Updated:

தமிழகத்தின் அதிகப்படியான குளிருக்குக் காரணம் என்ன? - விளக்கும் நிபுணர்கள்

``தற்போதைய அதீத குளிருக்கும் காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால், தொடர்ந்து இயற்கையில் நிகழ்ந்துவரும் மாற்றங்களையும் சீற்றங்களையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஆய்வுரீதியாகவும் சரி, அரசியல்ரீதியாகவும் சரி; அதற்கென கவனத்தை நாம் கொடுத்தே ஆக வேண்டும்.’’

தமிழகத்தின் அதிகப்படியான குளிருக்குக் காரணம் என்ன? - விளக்கும் நிபுணர்கள்
தமிழகத்தின் அதிகப்படியான குளிருக்குக் காரணம் என்ன? - விளக்கும் நிபுணர்கள்

ந்தப் புத்தாண்டின் காலை ரம்மியமானதாக, உற்சாகமானதாக இருந்ததைக் காட்டிலும் கடுமையான குளிரைக் கொண்டிருந்தது. பின்னிரவின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்கூட குளிர் நடுக்கத்துடன்தான் அரங்கேறியது. புத்தாண்டு அன்று மட்டுமல்ல; கடந்த சில நாள்களாகவே குளிரின் அளவு அதிகமாகவே இருந்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா எனத் தென்னிந்தியா முழுக்கவே குளிரின் பிடியில் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிரின் அளவு அதிகமாக இருப்பதே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் முழுவதும் குளிர்காலம் நிலவும். பிப்ரவரியிலும் லேசான குளிர் இருக்கும். தமிழ் மாதத்தைப் பொறுத்தவரை, மார்கழி மாதம் கடும் பனிப்பொழிவு ஏற்படும். தை, மாசி மாதத்திலும் லேசான பனி நீடிக்கும். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் அதிக குளிரால் பனி மூட்டம் ஏற்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி நிலவுகிறது. இதனால், மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கடந்த சில நாள்களாகச் சென்னையின் வெப்பநிலையானது சராசரியாக 20 டிகிரி செல்சியஸைத் தாண்டவில்லை. கொடைக்கானல், ஊட்டியை (7.3 டிகிரி) காட்டிலும் ஓசூரில் குளிர் அதிகரித்து 7 டிகிரி செல்சியஸ் நிலவியது. அதிலும் வால்பாறையில் மிகக் குறைவாக 3.5 டிகிரி செல்சியஸ் இருந்தது. 

தமிழகம் மட்டுமல்லாது தெலங்கானா, ஹைதராபாத் பகுதிகளிலும் வெப்பநிலையானது ஒற்றை இலக்கத்தில் உள்ளது. குறைந்தபட்சமாக அடிலாபாத் (Adilabad) மற்றும் மேடாக் (Medak) மாவட்டங்களில் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்குள்ள கோடை வாசஸ்தலங்களிலும் உறைபனி நீடிக்கிறது. கேரளாவிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. மூணாறு பகுதிகளில் வெப்பநிலையானது மைனசுக்கும் கீழே சென்றதால் சில நாள்களாகப் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. தென்னிந்தியா முழுவதிலும் கடுமையான குளிர் என்பது புதியதோர் காலநிலை எனச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

குளிர் அலைதான் (Cold Wave) இத்தகைய கடுமையான குளிருக்குக் காரணம். இந்திய தீபகற்பத்தின் வடக்குப் பகுதிகளில் இதுபோன்ற குளிர் காலநிலை ஏற்படுவது ஆண்டுதோறும் நிகழக்கூடியதுதான். ஆனால், தெற்குப் பகுதியில் திடீரென குளிர் நிலவுவது ஆய்வுக்குரியது. இதற்கான காரணங்களை சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, ``தமிழகத்தைப் பொறுத்தவரை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி வரை குளிர்காலம் நிலவும். வடக்குப் பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து காற்று வீசுவதால் குளிர் நிலவுகிறது. மேலும், தற்போது தமிழகத்தில் மிகவும் வறண்ட காலநிலை நிகழ்வதால் குளிரின் தன்மை அதிகமாக இருக்கிறது. கடல்பகுதி காற்று வீசியிருந்தால் குளிரின் அளவு கட்டுக்குள் இருந்திருக்கும். இது இயல்பானதுதான். இன்னும் கொஞ்ச நாள்களுக்கு இந்த குளிர் நீடிக்கலாம். குளிர்காலமே இன்னும் முடியவில்லை. முடிந்த பின்தான் என்னவென்று கூற

முடியும்’’ என்றார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானிடம் பேசியபோது, ``இந்திய துணைக்கண்டத்தில் அதிகமான அழுத்தம் நிலவுவதால், அடுத்து வரும் நாள்களில் வடமாநிலம் மற்றும் தமிழகத்தில் கடும் குளிர் நிலவும். குறிப்பாகத் தமிழகம், பெங்களூர், மைசூர் ஆகிய நகரங்களில் இயல்பைவிட அதிகமான குளிர் இருக்கும். ஈரப்பதம் குறைந்து மேகங்களும் இல்லாமல் போனதும் குளிர் அதிகமாக இருக்கக் காரணம். மேலும், கிழக்குப் பகுதியிலிருந்து வீசும் கடல் காற்று இந்த வருடம் இல்லாததும் குளிருக்கான காரணங்கள்’’ என்றார்.

மேலும் ``தமிழகத்தில் நிலவும் கடும் குளிர் பொங்கல் பண்டிகை வரை நீடிக்க வாய்ப்புள்ளது. தற்போது நிலவும் குளிர் அதிகரித்து, ஊட்டியில் நிலவும் குளிரைக் காட்டிலும் ஓசூரில் அதிகமான பனி நிலவுகிறது. மேற்கு மற்றும் உள் மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் வரும் நாள்களில் கடும் பனி இருக்கும்’’ என்றார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வனிடன் பேசியபோது, ``இந்தியாவின் வடக்கு பகுதியைப் போன்று தெற்கிலும் அதீத குளிர் ஏற்பட்டிருப்பது ஒரு புதிய மாற்றம். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் குளிர்காலத்தில் மட்டும்தான் அதிகபட்சமாகக் குளிர் இருக்கும். ஆனால், இப்போது மாதிரியான குளிர் இருக்குமா என்றால் கேள்விக்குறிதான். வடக்குப் பகுதியின் குளிர் மட்டுமே இதற்குக் காரணம் எனச் சொல்ல முடியாது. இந்த மாற்றத்தைப் புவி வெப்பமாதலோடும் காலநிலை மாற்றத்தோடும் பொருத்திப் பார்ப்பதற்கான ஆய்வுகள் நம்மிடம் இல்லை. ஆனால், புவி வெப்பமாதலும் இந்த மாற்றத்துக்கு மறைமுக காரணமாக இருக்கலாம். இதனால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து ஆய்வுகள் நாம் மேற்கொள்ளவில்லை. இதே போன்றுதான் இந்திய கடலில் ஏற்பட்டிருக்கும் தட்பவெப்பநிலை மாறுபாடு குறித்த ஆய்வுகளும் நம்மிடம் இல்லை. கடலின் தட்ப வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தற்போது ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றத்துக்குத் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால், இவற்றைத் தாண்டி புதிது புதிதாக இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை நாம் கண்டறிவதற்கான தேவை இருக்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான கல்வி நிறுவனங்களையும் ஆய்வு நிறுவனங்களையும் நாம் உருவாக்க வேண்டும். மேலும் மாநில, மத்திய அரசுகள் இவற்றைக் கவனத்தில் கொண்டு சுற்றுச்சூழலில் பிரத்யேக சட்டங்களை, கொள்கைகளைக் கொண்டு வர வேண்டும்" என்றார். 

தற்போதைய அதீத குளிருக்கும் காலநிலை மாற்றத்துக்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால், தொடர்ந்து இயற்கையில் நிகழ்ந்துவரும் மாற்றங்களையும் சீற்றங்களையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஆய்வுரீதியாகவும் சரி, அரசியல்ரீதியாகவும் சரி; அதற்கென கவனத்தை நாம் கொடுத்தே ஆக வேண்டும். இந்த ஆண்டோடு இந்த குளிர் கரைந்து போய்விடலாம். ஆனால், ஆண்டுதோறும் இயற்கை மாற்றங்கள் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இயற்கை மீதான கவனம் அதிகம் தேவை.