Published:Updated:

குப்பைகளை உண்ணும் குரங்குகள்! - ஏற்காடு மலைப்பாதையில் அவலம்

குப்பைகளை உண்ணும் குரங்குகள்! - ஏற்காடு மலைப்பாதையில் அவலம்
குப்பைகளை உண்ணும் குரங்குகள்! - ஏற்காடு மலைப்பாதையில் அவலம்

பாவம் என்று நாம் விலங்குகளுக்குப் பிச்சையிடுவதன் விளைவு அவற்றின் அழிவுக்கு இட்டுச் செல்கிறது. இந்தக் கதி யாருக்கு அதிகம் பொருந்துகிறதோ இல்லையோ குரங்குகளுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. மலைப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா வரும் பயணிகள் குரங்களுக்கு உணவு கொடுத்து ஏங்க வைத்ததன் விளைவாக இன்றைக்குத் தன் இயல்பை மறந்துவிட்டு சாலையில் உணவு பொட்டலங்களுக்காக அலைந்து திரிகின்றன.

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 13 வது, கொண்டை ஊசி வளைவில் நின்ற வாகனத்தில் இருந்து உணவுப் பொட்டலங்கள், தின்பண்டங்களை வீசிவிட்டுச் சென்றனர். இதை நாமும் பார்த்தோம். இதுபோல் எப்போதும் நடக்குமா? குரங்கள் ஏன் காட்டுக்குள் செல்லவில்லை என்பது குறித்துத் தெரிந்துகொள்ள அருகே கடை வைத்துள்ள கடைக்காரர்களிடம் பேசினோம்.

``சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்பர். எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இதைப் பார்க்க ஏராளமான மக்கள் தினந்தோறும் வருகின்றனர். இந்த மலைப்பாதையில் சில இடங்களில் குரங்குகளின் நடமாட்டம் அதிகம். கார்களில் வருபவர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவுப் பண்டங்களை நல்லெண்ணத்தில் வீசுகின்றனர். இரு சக்கர வாகனத்தில் வரும் சில காதல் ஜோடிகள் தாங்கள் கையில் கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர்களை (பிங்கோ, லேஸ், குர்குரே போன்ற சிற்றுண்டி கவர்களை வீசுகின்றனர். இது கெடுதி என நினைக்காமல் வீசுகின்றனர். போதாக் குறைக்கு செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

நாம் எதுவும் உண்ணக் கொடுக்காவிட்டால் மட்டுமே அதன் தேடல் அதிகரிக்கும் என்பது யாருக்கும் புரிவதில்லை. அதன் இயல்பைக் கெடுக்காமல் விட்டால்தான் காடுகளில் அலைந்து திரிந்து உணவைத் தேடத் தொடங்கும். இதுபோல் பழக்கப்படுத்திவிட்டதால்தான் இன்றைக்குக் குரங்குகள் சாலைகளில் உணவுப் பண்டங்களுக்காகத் தினமும் காத்துக்கிடக்கின்றன. தற்போது இதன் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. உணவு கிடைக்காத குரங்கள் சில, முள்ளோடு இருக்கும் சப்பாத்திக் கள்ளியை உண்ணும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. மலைப்பாதையில் உள்ள குரங்குகளைக் காக்க வேண்டும் என்றால் முதலில் உணவுப் பண்டங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தாலே அந்தக் குரங்குகள் பழையபடி காட்டுக்குள் செல்லும். நெடுங்காலமாக இதுபோல் வாழத் தொங்கிவிட்டன. இதை மீண்டும் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.