Published:Updated:

கேளுங்கள்... தாவரங்கள்கூடப் பேசும்... இதோ இதுதான் அவற்றின் மொழி!

கேளுங்கள்... தாவரங்கள்கூடப் பேசும்... இதோ இதுதான் அவற்றின் மொழி!
கேளுங்கள்... தாவரங்கள்கூடப் பேசும்... இதோ இதுதான் அவற்றின் மொழி!

அறிவும் மனமும் எப்போதும் முரண்பட்டே நிற்பதாக நாம் கற்பூரமடித்துச் சத்தியம் செய்கிறோம். ஆனால், அவற்றுக்குள் ஏற்படும் தொடர்பே பல அதி அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். அறிவு, அது நம் ஆழ்மனதோடு தொடர்புடையது.

"ஓரிங்காம் (Oryngham)". இதற்கு 'தாவரங்கள் பேசும் மொழியைக் கவனித்ததற்கு நன்றி' என்று அர்த்தம். இது மனிதர்கள் புரிந்துகொள்வது போல் ஒரு வார்த்தையல்ல. இதன் அர்த்தத்தைச் சொல்லிவிட முடியாது. அதைக் காதால் கேட்கவும் முடியாது. நம் உடலால், மனதால் உணரக்கூடியது. காதால் கேட்க முடியாத அந்த மொழியைக் கைகளால் தொட்டு உணர்வது. அவற்றின் மொழியைக் கேட்க அவசியமில்லாமல் போகும்போது, செவியுறாமலே புரிந்துகொள்ளத் தொடங்குவோம். அப்படித் தொடங்கும்போது நாம் மறந்துபோன மொழியை, வார்த்தைகளைக் கடந்த மொழியை, எது நம்மைக் குழப்பமற்ற சரியான பாதையில் வழிநடத்திச் செல்லுமோ அந்த உன்னதமான அமைதியான ஆதிமொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்குவோம்"

ஆம், அது ஆதி மொழிதான். உலகின் மூத்தகுடிகளான முதன்மைக் குடிகளான தாவரங்களின் மொழி. 'இவ்வாறு பேசிய தாவரங்கள்' (Thus Spoke the Plant) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் வெறும் கற்பனையல்ல. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. மோனிகா காக்லியானோ என்ற ஆய்வாளர் தான் ஆய்வுசெய்த தாவரங்களுடனான தன் அனுபவத்தை அவர் உணர்ந்த அவற்றின் மொழியைப் பற்றி எழுதிய புத்தகம்.

உண்மைதான். அறிவும் மனமும் எப்போதும் முரண்பட்டே நிற்பதாக நாம் கற்பூரமடித்துச் சத்தியம் செய்கிறோம். ஆனால், அவற்றுக்குள் ஏற்படும் தொடர்பே பல அதி அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். அறிவு, அது நம் ஆழ்மனதோடு தொடர்புடையது. அந்த இணைப்பைப் புரிந்துகொள்ளத் தேவையான அமைதியைத் தாவரங்களின் மொழி நமக்களிக்கிறது. என்றேனும் ஒருநாள் ஓசைகளற்ற அமைதியான சூழலில் நிற்கும் மரத்தைத் தொட்டு அதன் செயல்களை உணர முயற்சியுங்கள். அந்த மொழி உங்களுக்கும் புரியும். அந்த மொழி, வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பல்ல. அது ஆழமான அறிவுத்தேடலை நமக்குள் முடுக்கிவிடும் அர்த்தமுள்ள செழிப்பான செய்திகளை அறிவுக்குக் கடத்தி, அதன்மூலம் ஆழ்மனதில் எழும் பற்பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வல்லமை கொண்டது. அத்தகைய மொழி நம்முடையதல்ல. அது தாவரங்களுடையது. அந்தப் புத்தகமும் அவற்றுக்கானதே.

இவருக்கு முன்னமே அவருக்குப் புரிந்தது. அவரால் அவற்றின் மொழியை, அதன் ஆழத்தை, ஆழம் தந்த பேரறிவைப் புரிந்துகொள்ள முடிந்தது. தாவரங்களால் ஒளியை உணரமுடியும். ஈரப்பதத்தை, ஈர்ப்புவிசையை, அழுத்தத்தை என்று அனைத்தையும் அவற்றால் உணரமுடியும். உணர்வோடு உறவுகொண்ட அத்தகைய மொழியைப் புரிந்துகொண்டவர் சார்லஸ் டார்வின். அவருக்குப் பின்னர் வந்த பல விஞ்ஞானிகள் இதை மீண்டும் மீண்டும் உறுதிசெய்தனர். மோனிகா காக்லியானோ, ஒரு சூழலியலின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வாளர். இந்தப் புத்தகத்தின் மூலம் அவர் தனது ஆய்வுகளை மட்டுமே சொல்லவில்லை. இவர் எதிர்கொண்ட அனுபவப்பூர்வமாக உணர்ந்த அவற்றின் கதைகளையும் சொல்கிறார். முதல்முறையாகத் தாவரங்கள் அவற்றுக்கெனத் தனிக் குரல்களைக் கொண்டிருப்பதையும், சுற்றுச்சூழலில் ஏற்படும் ஓசைகளைக் கேட்டு அவை மறுமொழி சொல்வதையும் பரிசோதனை முடிவுகளோடு விளக்கியுள்ளார். 

உதாரணத்துக்கு அவரது ஓர் ஆராய்ச்சியில், பட்டாணிப் பயிர்களின் நாற்றுகளைத் தனியாக வளர்த்திக் கண்காணித்தார். நாற்றுகள் தமக்குத் தேவையான நீரை நோக்கியே செல்வதைக் கண்டிருக்கிறார். அது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவை வளரும் சமயத்தில், அவற்றை ஓரிடத்தில் அடைத்து வைத்துக் கண்காணித்துள்ளார். அப்போது நீர் எங்கு இருக்கிறது என்பதைத் தாவரங்கள் கண்டுபிடிக்க முடியாதவாறான இடத்தில் அவற்றை வைத்துவிட்டார். நீர் சலசலக்கும் ஓசை மட்டும் அவற்றுக்குக் கேட்டுள்ளது. அதை நோக்கியே நாற்றுகளின் வேரும் பயணித்துள்ளது. ஒருவேளை ஒரே இடத்தில் ஈரப்பதமான மண்ணும், நீரின் சலசலப்புச் சத்தமும் இருந்தால் அவை எதைத் தேர்ந்தெடுக்கும் என்று அவர் பரிசோதித்தார். எந்தத் தயக்கமும் இல்லாமல் அனைத்து நாற்றுகளுமே நீர் சலசலக்கும் ஓசையை நோக்கி நீர் இருக்கும் இடத்துக்கே வந்துள்ளன. எந்தச் சூழ்நிலையில் அவற்றால் ஆரோக்கியமாக வாழமுடியும் என்பதைத் தேர்ந்தெடுக்கின்றன. போட்ட இடத்தில் அப்படியே இருந்துவிடாமல் தேவையானவற்றைத் தேடிப் பயணிக்கின்றன. அதுவும் அவைகேட்ட ஓசையை வைத்தே. அதுவும் அவை இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தூரத்தில் கேட்ட நீரின் அந்த ஓசையை வைத்தே.

Photo Courtesy: Frances Andrijich/andrijich.com

ஒருவேளை தற்செயலாக அவை நீர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றிருக்கலாம். அவற்றுக்கு ஓசை கேட்டதால்தான் சென்றிருக்க வேண்டுமென்று அவசியமில்லை அல்லவா! அந்தச் சந்தேகத்தையும் நிவர்த்தி செய்தாக வேண்டும். தாவரங்கள் அவற்றுக்குத் தேவையான சுற்றுச்சூழலை எவ்வளவு கூர்மையாகத் தேர்ந்தெடுத்துச் செல்கின்றன என்பதை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், அவற்றுக்குப் போலியாக நீர் சலசலக்கும் ஓசையை ஏற்படுத்திப் பார்த்துள்ளார். ஒருபக்கம் பொறுமையாகக் கேட்கும் உண்மையான நீரின் சலசலப்பு ஓசை. இன்னொரு திசையில் ஒலிபெருக்கியில் அதிக ஓசையோடு போடப்பட்ட போலியான நீர் சலசலப்பு ஓசை. அந்த ஒலிபெருக்கியில் ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக நாற்றுகளின்மேல் படுவதைப்போல் பொருத்தி வைத்தார். ஆனால், விவரமாக நடந்துகொண்டன நாற்றுகள். ஒலிபெருக்கியின் ஓசையைப் புரிந்துகொண்டன. அவை உண்மையான நீர் சலசலப்பு ஓசையை நோக்கியே சென்றன. தாவரங்களால் இயற்கையான ஈர்ப்புவிசையை உணரமுடியும். ஒலிபெருக்கியில் செயற்கைக் காந்த ஈர்ப்புவிசை இருக்கும். அதைவைத்து இவை உணர்ந்துள்ளது. அந்த அறிவை வைத்து நீர் இருக்கும் இடத்தைச் சரியாகக் கண்டுபிடித்துள்ளன.

தாவரங்களுக்கு ஐந்து அறிவுகளையும் தாண்டிய ஞானம் உள்ளதாக இந்தப் புத்தகத்தில் கூறுகிறார். அவற்றின் மொழி அனைவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால்கூட அவற்றைத் தொடுவதன் மூலம் உணர முயலவேண்டும். தாவரங்களின் உணர்வு சூழ் உலகில் பற்பல தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றுக்கு நாம் ஒன்றைக் கொடுக்கும்போது நமக்குப் புதிதாக வேறொரு தகவலைக் கொடுக்கிறது. அந்தத் தகவல்கள் மூலம் உயிர்த் தோன்றலில் புதைந்திருக்கும் எண்ணற்ற ரகசியங்களைப் புரிய வைக்கிறது. கிடைக்கும் தகவல்களுக்குள் உட்புகுந்து ஆய்வுசெய்து தனக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளும் அபரிமிதமான ஆற்றலைத் தாவரங்கள் பெற்றுள்ளன. அவை எடுக்கும் முடிவுகள், அவற்றுக்கு அமையும் சூழலைப் பொறுத்தது, கிடைக்கும் வளங்களைப் பொறுத்தது. அந்தச் சூழலையும், வளங்களையும் ஒப்பாய்வு செய்யும் திறன் கொண்டவை தாவரங்கள்.

ஒவ்வொரு முறையும் மரத்தையோ, செடியையோ தொட்டுத் தடவும்போது அவற்றைக் கொஞ்ச வேண்டும்போல் தோன்றும். அந்தக் கரடுமுரடான அசையாத் தண்டுகளுக்குள் இருப்பது ஓர் உயிர். அந்த உயிருக்கும் உணர்ச்சிகள், வலிகள், மொழிகள் இருக்கும்தானே... அவற்றுக்கும் ஆன்மா இருக்கும்தானே... என்றெல்லாம் சிந்தித்தது உண்டு. அந்தச் சிந்தனைகள் அவற்றைத் தொடும் போதெல்லாம் என்னைச் சிலிர்க்க வைக்கும். மோனிக்காவைப் போல் பலகட்ட ஆய்வுகளைச் செய்யத் தேவையில்லை. மரங்களைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவற்றைத் தொட்டுணர முயலுங்கள். அதற்குள்ளிருக்கும் உயிருள்ள ஆன்மாவை, அதன் உணர்ச்சிகளை உணரத் தொடங்குங்கள். உங்களையும் அந்தச் சிலிர்ப்பு ஆட்கொள்ளும். அந்தச் சிலிர்ப்பைத் தணிக்கத் தன் தண்டுகளோடு அரவணைத்துக் கொள்வார்கள் அந்தத் தேவதைகள். ஆம், அவை தேவதைகள்தான். ஆழ்மனதைத் தொட்டுணர்த்தும் அழகான தேவதைகள்.

அடுத்த கட்டுரைக்கு