Published:Updated:

ஒரு நாடு காடான கதை... வரலாற்றை மீட்டெடுத்த இரண்டு பழங்குடிகள்!

ஒரு நாடு காடான கதை... வரலாற்றை மீட்டெடுத்த இரண்டு பழங்குடிகள்!
ஒரு நாடு காடான கதை... வரலாற்றை மீட்டெடுத்த இரண்டு பழங்குடிகள்!

இன்று ஈகில்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயமாக இருக்கும் இடத்தைப் பற்றிய கதைதான் இது. இது நடந்து அறுபது வருடங்களாகி விட்டன. அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம் அப்போது ஓர் ஆக்ரோஷமான போர்க்களமாக இருந்தது.

காடு நாடாகிக் கேள்விப்பட்டிருப்போம். நாடு முழுவதும் நடந்துகொண்டிருப்பது அதுதான். இந்தப் பழங்குடிகள் மீட்டெடுத்துள்ள வரலாறு அப்படியே தலைகீழானது. மக்கள் வாழ்ந்த பகுதி எப்படிப் பாதுகாக்கப்படும் சரணாலயமாக, காடாக மாறியது என்பதைத்தான் இங்குப் பார்க்கப்போகிறோம்.

இன்று ஈகில்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயமாக இருக்கும் இடத்தைப் பற்றிய கதைதான் இது. இது நடந்து அறுபது வருடங்களாகி விட்டது. அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம் அப்போது ஓர் ஆக்ரோஷமான போர்க்களமாக இருந்தது. அது இந்திய-சீனப் போர்க்காலம். அந்தப் பகுதியில் புகுன், ஷெர்துக்பென் ஆகிய இரண்டு பழங்குடிகள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இமயமலைப் பகுதிகளில் கலவரங்களும் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருந்த சமயம். மக்களை வழிநடத்த, அவர்களின் வாழ்வியலை உயர்த்தச் சரியான நிர்வாகங்கள் அமையாத நிலையற்ற காலகட்டம். அந்தச் சமயத்தில்தான்  திபெத்திலிருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துக்கொண்டிருந்தோம். இந்திய-சீனா போர் நடந்துகொண்டிருந்த சமயம் வேறு. 1962-ம் ஆண்டு நவம்பர் இருபதாம் தேதி, சீன ராணுவம் சக்கூ (Chaku) மீது தன் தாக்குதலைத் தொடுத்தது. அது இந்திய ராணுவத்தின் முக்கியமான ராணுவச் சாவடிகளில் ஒன்று. அதாவது இன்றைய ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயத்தின் மத்தியப் பகுதி. நூற்றுக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பல நூறுபேர் காயமடைந்தார்கள். காணாமல் போனார்கள். உயிர் பிழைத்த சொற்ப எண்ணிக்கையிலான வீரர்கள் அவ்விடம் விட்டுத் தப்பித்தாக வேண்டிய ஆபத்தான சூழ்நிலை. அந்தக் கொடூரத் தாக்குதல் நடந்த அடுத்த நாளே போர்நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்தச் சிறுவனின் பெயர் டோர்ஜீ க்ரீமே. அப்போது அவனுக்குப் பன்னிரண்டு வயது. அசாமில் அமைந்திருந்த போர்க்கால நிவாரண முகாமில் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு போர் தொடங்குவதற்கு முன் தாம் தன் பெற்றோர்களோடு வாழ்ந்துகொண்டிருந்த அருணாசலப் பிரதேசத்துக்குப் பயணித்தான் டோர்ஜீ. அதுவும் சக்கூ வழியாக. வழிநெடுகப் பிணங்கள். அனைத்தும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த போர் வீரர்களுடையது. அந்த அனுபவத்தைப் பிற்காலத்தில் அவரைச் சந்தித்த ஓர் ஆய்வுக்குழுவிடம் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்,

``நான் அந்தப் பாதையில் மிகக் கவனமாக நடந்தேன். ஏதாவது பிணத்தை மிதித்து விடுவேனோ என்ற பயத்துடனும், மிதிக்கக் கூடாதென்று கவனமாகவும் நடந்தேன்"

Photos Courtesy: Anjora Noronha

அருணாசலப் பிரதேசம், அசாம் இரண்டையும் இணைப்பதற்கு அப்போதிருந்த ஒரே சாலை அதுதான். சக்கூ வழியாகச் செல்லும் அந்தச் சாலையில் அரசு அலுவலர்களுக்கான பங்களாக்கள், குதிரைத் தொழுவங்கள், துணிக்கடைகள், அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கான ரேஷன் என்று அனைத்துமே இருந்தன. போர் முடிந்தபிறகு இரண்டு மாநிலங்களையும் இணைக்கப் புதிய சாலைகள் வேறிடத்தில் அமைக்கப்பட்டன. அங்கு குவியல் குவியலாகக் கிடந்த அந்தப் பிணங்கள் அவர்களின் மனக்கண்ணை விட்டு அகலவில்லை. மக்கள் அப்பகுதிக்கு மாற்றப்பட்ட பாதையை நோக்கி இடம்பெயரத் தொடங்கினர். 

1988-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பு மூலம் சக்கூவில் வெறும் நான்கு வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாகத் தெரியவந்தது. 1989-ம் ஆண்டு சக்கூ பகுதி முழுவதும் வனவிலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டது. அவ்வழியாகச் செல்லும் பாதையைப் புதுப்பிக்க நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஒருகாலத்தில் பரபரப்பாக இயங்கிய ஊர்ப்பகுதிகளைக் காடுகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. கடந்த காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அனைத்துமே இன்று சுவடின்றி மறைந்துவிட்டது. புற்களும், புதர்களும், செடிகளும், மரங்களும் சக்கூவைச் சூழ்ந்துவிட்டது. அதன் பாதைகள் விலங்குகளின் வழித்தடங்களால் மறைக்கப்பட்டு விட்டன. 1962-ம் ஆண்டு நடந்த போரில் ஒருபகுதியாக அதன் வரலாறும் இணைந்திருப்பது தெரியாமல், சக்கூ மக்களின் வரலாறு தெரியாமல் அங்கு வருபவர்களுக்கு அது அசல் காடாக மட்டுமே காட்சியளிக்கும். அதன் வரலாற்றுக்கான சுவடுகள் அனைத்துமே தொலைந்துகொண்டிருந்தன.

சக்கூவில் வாழ்ந்த மக்களின் நினைவுகளில் மட்டுமே தங்கியிருந்த அனைத்தும் நிலத்தை மறைத்த புதர்களைப் போல் அடுத்த சந்ததிகளுக்குத் தெரியாமலே மறைந்துகொண்டிருந்தது. புதர்களைக் களையத் தொடங்கியது ஓர் ஆய்வுக்குழு. கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நந்தினி டையாஸ் வெலோ என்ற நிலவியல் ஆய்வாளரும் அன்ஜோரா நொரோனா என்ற ஓவியரும் இணைந்து அதன் வரலாற்றை மீட்டெடுக்க முயன்றனர். இன்றைய ஈகிள்நெஸ்ட்டின் கடந்தகாலத்தைப் பதிவுசெய்யப் புறப்பட்டனர். அதன் மக்கள், அவர்களின் நினைவுகள், அதில் புதைந்துகிடந்த வரலாறு, அந்த இடத்தோடு அவர்களுக்கு இருந்த உணர்ச்சிபூர்வமான தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்தனர். ஆய்வில் கிடைத்த தரவுகள், உள்ளூர் மக்களின் செவிவழிச் செய்திகளை வைத்து அன்ஜோரா மீட்டெடுத்த ஓவியங்கள் என்று அனைத்தையும் தொகுத்தார்கள். அந்த மீட்டெடுப்பு முயற்சியில் பிரசவித்தது `ஈகிள்நெஸ்ட் நினைவுகள் (The Eaglenest Memory Project)' என்ற அந்த 86 பக்கப் புத்தகம். 

பழைய புகைப்படங்கள் சொற்பமாகவே கிடைத்தன. அவையும் ரூபா என்ற இடத்திலிருந்த அருங்காட்சியகத்தில் கிடைத்தன. பெரும்பாலும் மக்கள் விவரிப்பதை வைத்து ஓவியம் மூலமாகக் கொண்டு வருவதே சாத்தியமாகியிருந்த சூழல். அன்ஜோரா நொரோனா தன் கடின உழைப்பால் அதைச் சாத்தியமாக்கினார். தம் நினைவுகளை விவரிக்க முதலில் தயங்கிய மக்களை அவர்களை அவர்களின் குடியிருப்புகளை வரைந்துகொடுத்து உற்சாகப்படுத்தினார். அவர்களோடு ஒன்றிப்போனார். அந்தப் பற்றுதல், அவர்களிடம் ஒன்றிப்போகும் அந்தப் பண்பு அவரை அவர்களிடம் நெருங்க வைத்தது. தங்கள் அனுபவங்களைப் பகிரத் தொடங்கினார்கள்.

ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம் அங்கு வாழ்ந்த புகுன், ஷெர்துக்பென் பழங்குடிகளின் வாழ்வியலைத் தன்னகத்தே கொண்டிருந்தது. அந்த மக்கள் தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதில் இவர்களுக்குப் பேருதவியாக இருந்தனர். அவர்களுக்குத் தெரிந்த அனைத்தையும் சொன்னார்கள். அவர்களிடம் இருந்த அனைத்து தகவல்களையும் தந்தார்கள். தங்கள் வரலாறு பிறந்துகொண்டிருப்பதைக் கண்களால் பார்க்கும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள். 

அந்த இடத்தோடு அவர்களுக்கு இருந்த உறவு மாறிக்கொண்டிருப்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். அந்த நிலத்தோடு அவர்களுக்கிருந்த உணர்வுபூர்வமான இணைப்பு அவர்களின் இக்காலச் சந்ததிகளுக்குப் புரியத் தொடங்கியது. இந்த முயற்சியின்போது நிலம் எவ்வளவு முக்கியமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தார்கள். வெலோவும் நொரோனாவும் சுமார் 200 பழங்குடி மக்களைச் சந்தித்திருந்தனர். அனைவருமே நடுத்தர மக்களும் முதியவர்களும். தங்களுக்கு சக்கூவோடு இருந்த பிணைப்பைக் கூறுவதில் அவர்களுக்கிருந்த ஆனந்தமும், அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கையில் அவர்கள் பெற்ற புத்துணர்ச்சியும் எழுத்துகளால் விவரிக்க முடிந்தவையன்று. அது ஓர் இனத்தின் புதைந்துபோன அனைவரும் கவனிக்க மறுத்த கதை. அந்தக் கதையை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி அம்மக்களின் வாழ்வியலுக்குக் கொடுத்த மதிப்பு அவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துவிட்டது. காடுகளுக்குள் இருவரோடும் பயணித்தார்கள். மண்ணுக்குள் புதைந்தும், செடிகள் வளர்ந்தும், தூசு படிந்தும் காணப்பட்ட அவர்களின் பழைய பொருள்களைக் காட்டினார்கள். அங்கு தங்கள் வாழ்வில் நடந்த உணர்ச்சிகரமான நிகழ்வுகளைச் சொன்னார்கள். அந்த நிகழ்வுகளுக்கு அன்ஜோரா நொரோனா ஓவியங்களில் உயிர்கொடுத்தார்.

தகவல்களைச் சேகரித்த பின்னர் வரலாற்றை வடிவமைக்கத் தொடங்கினார்கள். அந்த வரலாறு ஐந்து முக்கியப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டன.

முதல் பாகம் 1962-ம் ஆண்டின் இந்திய சீனப் போர். சரணாலயத்துக்குள் ஊடுருவிய அந்தச் சாலையை இந்திய ராணுவம் எப்படி அமைத்தார்கள் என்ற நினைவுகளைப் பலரும் நினைவுகூர்ந்து கூறியதிலிருந்து தொடங்கியது. அந்தச் சாலை போடுவதில் முக்கியப் பங்கு தென்னிந்தியப் பொறியாளரின் நினைவாகத்தான் அந்தப் பகுதிக்கு சக்கூ என்றே பெயரிட்டிருப்பது தெரியவந்தது. இவையெல்லாம் போர் தொடங்குவதற்கு முன்னர் நடந்தது. அந்தச் சாலை வழியாகத்தான் அசாமிலிருந்து டோர்ஜீ அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பும்போதுதான் அவர் அந்தப் பிணங்களை மிதிக்கப் பயந்து கவனமாக நடந்துவந்தார். அங்கு சண்டையிட்ட ரெட் ஈகிள் (Red Eagle) என்ற இந்தியப் படைப்பிரிவின் நினைவாகத்தான் அதற்கு ஈகிள்நெஸ்ட் என்ற பெயரே வைக்கப்பட்டிருந்தது. சக்கூ போர் அவர்கள் மனங்களில் நீங்கா வடுவாகப் பதிந்திருந்தது. 

இரண்டாவது பாகம் தலாய் லாமா வருகை. 1959-ம் ஆண்டு 14-வது தலாய் லாமா அந்தப் பகுதி வழியாக திபெத்துக்குப் பயணித்தார். அந்தப் பாதை வழியாகத்தான் அவர் சென்றிருக்கிறார். அப்போது அவரும் அவரோடு வந்தவர்களும் சக்கூவில்தான் மதிய உணவு எடுத்துக் கொண்டனர். தலாய் லாமாவின் பரிவாரங்கள் அன்றிரவு தங்கிய இடத்தை அதன்பின்னர் லாமா கேம்ப் என்றே மக்கள் அழைக்கத் தொடங்கியிருந்தனர். 

1996-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் காட்டுக்குள் வியாபார ரீதியில் மரம் வெட்டுவதைத் தடைசெய்தது. அதற்குமுன் அங்கு நடந்து கொண்டிருந்த மர வியாபாரம் பற்றியது. 1982-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருந்த 9-வது ஆசிய விளையாட்டுப் போட்டி அவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குமுன் வரையிலும் உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமே மரம் வெட்டிக் கொண்டிருந்தார்கள் அந்தப் பழங்குடிகள். அது மாறியது. வியாபார ரீதியிலான மரத் தொழிற்சாலைகள் அங்கு தொடங்கின. சுமார் 150 பேர் அதில் பணிபுரிந்து கொண்டிருந்ததைச் சிலர் நினைவுகூர்ந்தனர்.

சக்கூவில் வாழ்ந்தபோது பழங்குடிகள் பார்த்த நிகழ்வு: பாதையில் பிரசவிக்கும் யானையும் அதைச் சுற்றி நிற்கும் யானைக் கூட்டமும்.

நான்காவது பாகமாக ஷெர்துக்பென் பழங்குடிகளின் குளிர்கால இடப்பெயர்வுகளைப் பற்றிய வரலாற்றைப் பதிவுசெய்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் குளிர்காலத்தின்போது ரூபா, தங்க்ரீ ஆகிய மலைகளிலிருந்து அசாம் சமவெளிப் பகுதிக்குச் சென்றுவிடுவார்கள். இந்தப் பாரம்பர்யத்தை பெஸ்மெஹ் (Besmeh) என்று அவர்கள் அழைத்தனர். அசாமில் அவர்களுக்கான உணவை அவர்களே விளைவித்துக் கொண்டு குளிர்காலம் முழுவதும் வாழ்வார்கள். குளிர்காலம் முடிந்து திரும்பும் பாதையில் பல இடங்களில் தங்கித் தங்கி வருவார்கள். அந்தப் பகுதிகளில் மீண்டும் பயணித்து நொரோனாவுக்கு அவர்களின் நினைவுகளைத் தெளிவாக விளக்கியுள்ளார்கள் ஷெர்துக்பென் பழங்குயின மக்கள்.

இறுதியாக இந்த வரலாறுகளிலிருந்து அவர்கள் திசைதிரும்பிச் சாதாரண மக்களின் சராசரி வாழ்வுக்குள் தள்ளப்பட்டதைப் பேசுகிறது ஐந்தாம் பாகம். வீடுகள், கிராமங்கள், அவர்கள் வளர்க்கும் மர வகைகள், விவசாய முறை, யானைகள் உலவும் பகுதியில்கூட வெகுசாதாரணமாகவும் நிம்மதியாகவும் அமைந்திருந்த அவர்களின் வாழ்வியல் மாறிய விதம் அனைத்தையும் அதில் கொண்டுவந்தனர் நந்தினி டையாஸ் வெலோ மற்றும் அன்ஜோரா நொரோனா இருவரும். இந்த வரலாற்றுப் பயணத்தில் கிடைத்த கதைகள் அனைத்தும் அந்த மக்களின் ஆச்சர்யமான வாழ்வியலை, காட்டோடு அவர்களுக்கிருந்த இசைவை, அந்தக் காட்டின் விலங்குகளோடு அவர்களுக்கு இருந்த உறவைப் பேணிப் பாதுகாக்கும் ஆவணங்கள். இத்தகைய நினைவுகளைத்தான் ஒவ்வொரு பழங்குடியினமும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார்கள். அந்தப் பொக்கிஷங்கள் தொலைந்து கொண்டிருக்கின்றன. அவை தொலையாமல் பாதுகாப்பதும், பதிவு செய்து வைப்பதும்தான் காட்டைப் பாதுகாப்பதில், இயற்கையோடு இயைந்த மனித வாழ்வியலை மீட்டெடுப்பதில் பேருதவி புரியப்போகிறது. இந்தப் பதிவுகள்தான் பிளவுண்டுபோன மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவை மீண்டும் புதுப்பிக்கப்போகும் இணைப்புப் பாலங்கள்.

உலக வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பு (World Wildlife Fund) இந்த ஆவணப் பதிவுகளைப் புத்தமாகப் பிரசுரிக்க முன்வந்துள்ளது. இப்படியாகத் தங்கள் வரலாற்றைத் தொலைத்த எண்ணற்ற பழங்குடியினர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வரலாறுகளும் மீட்டுருவாக்கப்பட வேண்டும். மனிதனுக்கும் இயற்கைக்குமான பாலம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு