Published:Updated:

"யானைகளை விரட்டாதீங்க; வந்தா எங்களுக்குச் சொல்லுங்க" - வனத்துறையினர் அறிவுறுத்தல்

"யானைகளை விரட்டாதீங்க; வந்தா எங்களுக்குச் சொல்லுங்க" - வனத்துறையினர் அறிவுறுத்தல்
"யானைகளை விரட்டாதீங்க; வந்தா எங்களுக்குச் சொல்லுங்க" - வனத்துறையினர் அறிவுறுத்தல்

'விவசாய நிலங்களில்  காட்டுயானைகள் புகுந்தால், என்ன செய்ய வேண்டும்' என்ற விவசாயிகளின் கேள்விக்கு, 'எதுவும் செய்யாதீர்கள்' என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

தமிழகத்தில், கடந்த வருடமும் போதிய அளவு மழை பெய்யவில்லை. எனவே, வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வன விலங்குகளுக்கு உணவு, நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, வன விலங்குகள் விவசாய நிலங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றன. இவற்றிற்கு முதன்மையான இடம் யானைகளுக்குத்தான். அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு ஒட்டன்சத்திரம் பரப்பலாறு மலை கிராமத்தில், விவசாய நிலத்தில் புகுந்து நான்கு யானைகள் தென்னை மரங்களையும், சோளப் பயிர்களையும் பெருமளவு சேதப்படுத்தின.  அதைப் பார்வையிட வந்த வனத்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் பயிர்கள் சேதம்குறித்து விசாரித்தனர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகள், 'யானைகளை விரட்ட என்னதான் செய்வது' என்று கேள்வி எழுப்பினர். "எதுவும் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. முக்கியமாக 'வெடி வெடிக்க வேண்டாம்'. யானையை விரட்டுகிறேன் என்று அருகில் செல்ல வேண்டாம். முடிந்தால் ஆங்காங்கு தீயைப் பற்றவையுங்கள். யானை வந்தவுடன் எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள். உதவிக்கு நாங்கள் வருகிறோம். நீங்களாக அவற்றை விரட்ட எண்ணித் துன்புறுத்த வேண்டாம். அவை சாதுவான விலங்குதான். ஏற்படும் சேதத்திற்கான  இழப்பீட்டுத் தொகையை அரசிடமிருந்து பெற்றுத்தருகிறோம்" என்று  விவசாயிகளிடம் வனத்துறையினர் பதிலளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், "கடந்த ஆறு ஆண்டுகளாக எங்கள் பகுதியில் காட்டு யானைகளின் வரவு அதிகரித்துள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் காளிஃபிளவர், பீன்ஸ், தக்காளி ஆகிய காய்கறிகளும், சோளம், தென்னை, இலவம்பஞ்சு முதலிய பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. இங்கு மான், பன்றி, மயில் போன்ற  விலங்குகளின் தாக்குதல் எப்பொழுதும் உண்டு. மின் வேலிகள் அமைப்பதன்மூலம் அவற்றின் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால், யானைகளைத் தடுக்க இயலவில்லை. ஒருமுறை நிலத்தினுள் புகுந்தாலே பெருமளவு சேதம் ஏற்பட்டுவிடுகிறது. மின் வேலிகளை அவை பொருட்படுத்துவதே இல்லை. சில சமயம், வீட்டில் உள்ள அரிசி முதலிய பொருள்களையும் சூறையாடுகின்றன. ஒரு சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. 

நோய்களிடமிருந்து காப்பாற்றிய பயிர்களை வனவிலங்குகளிடம் பறி கொடுக்கும்போது ஏற்படும் துன்பத்திற்கு அளவே இல்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் கதைதான் எங்களுடையது. அரசு இழப்பீடு வழங்கும் என்பது கண்துடைப்பு பேச்சுகளாகவே உள்ளன. இதனால், விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிடலாம் என்ற எண்ணமே தலைப்படுகிறது"  என்கிறார்கள் வருத்தத்துடன்.

விவசாயிகளின்மீது  பரிதாபமும் யானைகளின் மீது கோபமும் ஏற்படுவது இயல்புதான். எனினும் மலைப் பகுதியானது விலங்குகள் வாழ்வதற்கான இடம், என்பதை மறுக்க முடியாது. அவற்றின் உணவுத் தேவையை அவைதானே பூர்த்திசெய்துகொள்ள வேண்டும்.