Published:Updated:

முதல்முறையாகக் கோவையில் தென்பட்ட ஜெர்மனி பறவைகள்!

கௌசல்யா ரா
முதல்முறையாகக் கோவையில் தென்பட்ட ஜெர்மனி பறவைகள்!
முதல்முறையாகக் கோவையில் தென்பட்ட ஜெர்மனி பறவைகள்!

ஆனைகட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில், பறவைகள் கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. 23 குழுக்களாகப் பிரிந்து, கோவையில் உள்ள நீர்நிலைகள், புல்வெளி மற்றும் வறண்ட நீர்நிலைகள் போன்ற இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த கணக்கெடுப்பில் பறவை ஆய்வாளர்கள், ஒளிப்படக்காரர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த கணக்கெடுப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள கோயம்புத்தூர் நேச்சுரல் சொசைட்டியின் தலைவர்  செல்வராஜிடம் பேசினோம்.``ஒரு குழுவில் 4 பேர் முதல் 5 பேர் வரை அனுமதி கொடுத்துள்ளோம். அதிகாலை முதல் கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள் போன்ற பகுதிகளுக்குச் சென்று பறவைகளைக் கணக்கெடுத்தனர். முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது" என்று குறிப்பிட்டார். 

சலீம் அலி மையத்தின் மூத்த விஞ்ஞானி பிரமோத் குமார் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது .கோவை விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மொத்தம் 200 வகையான பறவைகளை இனம் கண்டுள்ளனர் என்பது தெரியவந்தது. அவற்றில், அரிய வகைப் பறவையான செங்கால் நாரைகளும் (White Stork) மற்றும் கறுப்பு நாரைகளும் (Black Stork) அடக்கம். ஜெர்மனியைச் சேர்ந்த இந்தப் பறவைகள் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கேரளா போன்ற பகுதிகளில் மட்டுமே இதுவரை பார்க்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பைப் பற்றிய தன் அனுபவங்களை பி.எஸ்.ஜி கல்லுரி  மாணவி அனிதா கூறுகையில், ``ஒரு நாள் முழுவதும் பறவைகள் பற்றிக் கணக்கெடுத்துப் பதிவுசெய்தோம். நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு இதுதான் முதல்முறை. பறவை வகைகள் பற்றி நிறையக் கற்றுக்கொண்டேன்’’என்றார். கோவை மாவட்டத்தில் குளங்களும், ஏரிகளும் உள்ளன. கிருஷ்ணாம்பதி, வல்லாங்குளம் போன்ற குளங்களில் கழிவுநீர் கலப்பதால், சில பறவைகள் வருவதில்லை. அதைக் கட்டுப்படுத்தி சுத்தம்செய்தால், இன்னும் பல வெளிநாட்டுப் பறவைகள் வருகைதரும் என சூழலியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.