Published:Updated:

பிளாஸ்டிக் தடை சிறு வியாபாரிகளுக்கு மட்டும்தானா? - தி.நகர் ஸ்பாட் விசிட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிளாஸ்டிக் தடை சிறு வியாபாரிகளுக்கு மட்டும்தானா? - தி.நகர் ஸ்பாட் விசிட்
பிளாஸ்டிக் தடை சிறு வியாபாரிகளுக்கு மட்டும்தானா? - தி.நகர் ஸ்பாட் விசிட்

மிகப்பெரிய சுற்றுச்சூழல் முன்னகர்வை அரசு முன்னெடுத்துள்ளது. இவற்றில் சில குறைபாடுகள் இருப்பினும் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மகாராஷ்டிராவிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த கொஞ்ச நாள்கள் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாகவே இருந்தது. ஆனால், கொஞ்ச நாள்களிலேயே பிளாஸ்டிக் எளிதாக உள்ளே வந்துவிட்டது. அரசு அதிகாரிகளும் பெரு வியாபாரிகளும் அலட்சியமாக இருந்தால் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் பிளாஸ்டிக் வர அதிக நேரம் எடுக்காது. மக்களும் அதற்கு ஏற்றவாறு எளிதில் மாறிவிடுவார்கள். எனவே, சிறு வியாபாரிகளிடம் காட்டும் கடுமையை பெரு வியாபாரிகளிடமும் அரசு காட்ட வேண்டும். தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகளால்தான் பிளாஸ்டிக் அற்ற தமிழகத்தை உருவாக்க முடியும். 

காலையில் எழுந்து பல் துலக்குவதில் இருந்து இரவு உறங்கச் செல்லும் வரை நமது வாழ்க்கையில் பிளாஸ்டிக்கும் ஒரு அன்றாடப் பொருளாக, விஷயமாக மாறிவிட்டது. முதன்முதலில் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தபோது மனிதக்குலத்தின் வரம் என்றுதான் விஞ்ஞானிகள் உட்பட பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், உண்மையில் அவை வரம் அல்ல சாபம் எனத் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள நூறாண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளது. உலகில் வளர்ந்த நாடுகளில் இருந்து எல்லா நாடுகளும் பிளாஸ்டிக்கை எப்படி அழிப்பது எனத் தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஒவ்வொரு நாடுகளும் புதிதாக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் தடை விதித்து வருகின்றன. இந்தியாவிலும் மகாராஷ்டிரா உட்படப் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் தடை அமலில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் நமது தமிழ்நாடும் புத்தாண்டு அன்று சேர்ந்துகொண்டது. புத்தாண்டிலிருந்து 14 வகையான ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. பெரும்பான்மையான மக்கள் இதை வரவேற்றாலும் போதிய கால அவகாசம் கொடுத்து இதை செயல்படுத்தியிருக்கலாம் என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். எது எப்படி இருந்தாலும் ஜனவரி 1-ல் இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துவிட்டது.

கடந்த 20 நாள்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒற்றை பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்திருக்கிறது. மக்களில் பெரும்பாலானோர் கடைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் செல்லும்போது துணிப்பைகளையும், பாத்திரங்களையும் எடுத்துச் செல்லுமளவுக்கு மாறியிருக்கிறார்கள். பெரும்பாலான கடைகளும் உணவகங்களும்கூட பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த துவங்கியிருக்கின்றன. இதற்காக சில உணவகங்களில் பார்சல் கட்டித் தருவதைக் கூட நிறுத்திவிட்டார்கள். அரசாணையை மீறி பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தும் கடைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படுவதும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. அனைவரின் கூட்டு முயற்சியில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் சுயலாபத்துக்காக சட்டத்தை ஏய்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் பல பெரிய கடைகளிலும் பெரிய ஹோட்டல்களிலும் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. 

பிளாஸ்டிக் தடை சிறு வியாபாரிகளுக்கு மட்டும்தானா? - தி.நகர் ஸ்பாட் விசிட்

சென்னையின் மிக முக்கியமான வர்த்தகப் பகுதியான தி.நகரில் பிளாஸ்டிக் தடை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனக் கள ஆய்வு செய்தோம். தி.நகருக்கு வரும் மக்களின் கூட்டம் குறையாமல் வழக்கமான நெரிசலே காணப்பட்டாலும் அவர்களது கைகளில் வழக்கமாக இருக்கும் பிளாஸ்டிக் பைகளை பெருமளவில் பார்க்க முடியவில்லை. தி.நகரில் உள்ள கடைகளுக்கு வரும் மக்கள் துணிப்பைகள், பழைய பெரிய ஜவுளிப்பைகள், பேக்குகளுடன்தான் வருகின்றனர். மக்கள் மட்டும்தான் மாறியிருக்கிறார்களா? என ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிப் பார்த்தால் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் கொடுக்கப்படவில்லை. ரோட்டுக்கடையில் ஆரம்பித்து பெரிய ஜவுளிக்கடைகள் வரை பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பான விஷயம். ஆனால், தி.நகர் என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய, ஒரே பெயரில் நிறைய கடைகளை வைத்திருக்கும் மிகப் பெரிய கடையில் இன்னும் பிளாஸ்டிக் கவர்களைத்தான் கொடுக்கின்றனர். பிளாஸ்டிக் தடை பற்றி அந்தக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களிடம் கேட்டபோது, ``ஸ்டாக் இருக்கும் பிளாஸ்டிக் கவர்களை கொடுத்து வருகிறோம். அவை தீர்ந்தவுடன் துணிப்பைகளைப் பயன்படுத்துவோம்" என ஒரே போல கூறினர். தி.நகரின் முக்கியமான பாத்திரக் கடை இன்னும் சில ஜவுளிக்கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களைத்தான் கொடுக்கிறார்கள். அங்குள்ளவர்களும் மேலே கூறியதையே கூறுகிறார்கள். 

பயோபிளாஸ்டிக் பை

பிளாஸ்டிக் தடை சிறு வியாபாரிகளுக்கு மட்டும்தானா? - தி.நகர் ஸ்பாட் விசிட்

பிளாஸ்டிக் தடை என்பது சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு மட்டும்தானா? மேலே கூறியவர்களைப் போன்ற பெரிய மொத்த வியாபாரிகளுக்கு இல்லையா?. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டிய அதிகாரிகள் சிறு வியாபாரிகளிடம் மட்டுமே ஆய்வு செய்துள்ளனரா? ஏன் இதுபோன்ற பெரிய கடைகளில் இன்னும் ஆய்வு செய்யவில்லை என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்து 20 நாள்களுக்கு மேல் ஆன பின்னும் இதுபோன்ற பெருவியாபாரிகள் அதைக் கடைப்பிடிக்காமல் இருப்பது மற்ற வியாபாரிகள் மத்தியிலும் அலட்சியத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், மேற்கூறிய பெரிய கடைகளில் பயோபிளாஸ்டிக் (Bio Plastic) எனச் சொல்லப்படுகிற சிறிய அளவிலான கவர்கள் கொடுக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு பிளாஸ்டிக் போன்றே இருக்கிறது. ஆனால், தன்மையில் பிளாஸ்டிக்கிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் நிறைய கடைகளில் இதுபோன்ற பைகள் கொடுக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் தடை சிறு வியாபாரிகளுக்கு மட்டும்தானா? - தி.நகர் ஸ்பாட் விசிட்

இதுதொடர்பாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சாய் பிரசாத்திடம் பேசியபோது, ``தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு கடுமையாக அபராதம் விதித்து வருகிறார்கள். அந்தந்த நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் இவர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து புகார் தெரிவிக்கலாம். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கென்றே தனிக்குழுவை அமைக்கும் வேலை நடந்து வருகிறது. அந்தக் குழுவில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகிகள் உட்பட பல அரசு நிர்வாகங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இருப்பார்கள். பயோபிளாஸ்டிக் பைகளுக்கு இதுவரை முறையான தர நிர்ணயம் இல்லை. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்தான் இதற்கான தர நிர்ணயம் கொடுக்க வேண்டும்" என்றார். 

இதுபோன்ற பெரு வியாபாரிகள் மட்டுமின்றி இணையதள வர்த்தக நிறுவனங்கள், முக்கியமான உணவகங்கள் எனப் பல இடங்களிலும் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள், தமிழகத்திற்கு வெளியே இருந்து வரும் பொருட்கள் போன்றவற்றில் இன்னும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என இப்போது வரை ஆலோசனை நடத்துவதாக அரசு கூறி வருகிறது. இவற்றையும் கவனத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  பிளாஸ்டிக் மட்டுமல்லாது துணிப்பைகளைப் போன்றே இருக்கக்கூடிய நெய்யாத பாலிப்ரொப்பலீன் பைகளும்(Non woven Polypropylene Bags) பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவையும் அரசு தடை செய்த 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களில் ஒன்று. மிகப்பெரிய சுற்றுச்சூழல் முன்னகர்வை அரசு முன்னெடுத்துள்ளது. இவற்றில் சில குறைபாடுகள் இருப்பினும் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மகாராஷ்டிராவிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த கொஞ்ச நாள்கள் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாகவே இருந்தது. ஆனால், கொஞ்ச நாள்களிலேயே பிளாஸ்டிக் எளிதாக உள்ளே வந்துவிட்டது. அரசு அதிகாரிகளும் பெரு வியாபாரிகளும் அலட்சியமாக இருந்தால் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் பிளாஸ்டிக் வர அதிக நேரம் எடுக்காது. மக்களும் அதற்கு ஏற்றவாறு எளிதில் மாறிவிடுவார்கள். எனவே, சிறு வியாபாரிகளிடம் காட்டும் கடுமையை பெரு வியாபாரிகளிடமும் அரசு காட்ட வேண்டும். தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகளால்தான் பிளாஸ்டிக் அற்ற தமிழகத்தை உருவாக்க முடியும். 

இதிலாவது சட்ட நடைமுறை எளியவனுக்கும் வலியவனுக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு