Published:Updated:

'நிறைய தண்ணீர் மிச்சமாகும்; ஒருநாள் குளிக்காதீங்க ப்ளீஸ்!' #BathPill கோட்பாடு சரியா?

நாம் அனைவரும் ஒருநாள் குளிக்காமல் இருந்தாலே இந்த பூமியில் பல மில்லியன் லிட்டர் நீரை மிச்சப்படுத்த முடியும். அதனால் வாரம் ஒருநாள் குளிக்காமல் இருப்போம் என உங்களிடம் சொன்னால் உங்களின் ரியாக்ஷன் என்ன? மேலும் படியுங்கள்

'நிறைய தண்ணீர் மிச்சமாகும்; ஒருநாள் குளிக்காதீங்க ப்ளீஸ்!' #BathPill கோட்பாடு சரியா?
'நிறைய தண்ணீர் மிச்சமாகும்; ஒருநாள் குளிக்காதீங்க ப்ளீஸ்!' #BathPill கோட்பாடு சரியா?

ம் சமுதாயத்தில் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்றாலும் அதன் மத்தியில் இந்தப் பூமியும் அதிலுள்ள மரங்களும் அனைவருக்கும் பொதுவானது எனவும், மனிதனுடைய நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மற்ற உயிர்களும் (விலங்கினங்கள், மரங்கள், பறவைகள்) வாழ வழிவகை செய்ய வேண்டுமென்றும் காலநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் அதைச் சரிசெய்யவும் போராடும் பல சூழலியல் ஆர்வலர்களும் அதிகமாகி வருகிறார்கள். அத்தகைய சூழலியல் ஆர்வலரும் அதுகுறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்னெடுப்பவரும்தான் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூழலியலாளர் மற்றும் பொறியாளரான மாதவ் பாட்டில். தண்ணீர் பற்றாக்குறையைச் சரிசெய்ய, காலநிலை மாற்றத்தைத் தடுக்க அவர் முன்வைக்கும் அந்த இரண்டு கொள்கைகளும் என்னென்ன? அதை முன்வைக்கும் மாதவ் பாட்டில் சொல்வது என்ன? இந்தக் கொள்கைகளைச் சிலர் ஆதரிக்கிறார்கள் சிலர் எதிர்க்கிறார்கள். ஆதரவுகளையும் எதிர்வினைகளையும் சந்தித்துவரும் அத்தகைய கொள்கைகளையும் அதிலிருக்கும் முரண்பாடுகளையும் பற்றிப் பார்ப்போம்.

``தனி ஒரு மனிதனாலும் காலநிலை நடவடிக்கையில் (Climate Action) பங்கு கொள்ள முடியும்" என்று 2 கொள்கைகளை முன்னெடுக்கிறார் மாதவ். அவை,  

            1. BATH PILL - குளிக்காமல் தண்ணீரை சேமிக்கும் வழிமுறை 
            2. NAIL FREE TREES - ஆணிகளற்ற மரம் என்னும் மரத்தைக் காக்கும் வழிமுறை 

BathPill என்றால் என்ன ?

தற்போதைய 21-ம் நூற்றாண்டில் தண்ணீர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. அடுத்து ஓர் உலகப்போர் வருமென்றால் அது தண்ணீருக்காகத்தான் என அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. குடிக்க, விவசாயத்திற்கு எனப் பல்வேறு வழிகளில் அதனுடைய தேவை இன்றியமையாததுதான். இப்போதே அதைச் சேமித்து வைத்தால் மட்டுமே வரும் காலங்களில் அதனுடைய தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். அதற்காக நாம் முன்னெடுக்கும் முயற்சிதான் இந்த BathPill. நாம் அன்றாடம் குளிக்கும் நீரினைச் சேமிக்கும் திட்டமே இது. சிலர் தினமும் குளிக்கிறோம். சிலர் இரு நாள்களுக்கு ஒருமுறை குளிக்கிறோம். பொதுவாக நாம் ஒருமுறை குளிக்கும் போது தோராயமாக 20 லிட்டர் தண்ணீரைச் செலவிடுகிறோம். ஒரு மனிதன் வாரம் ஒரு நாளோ அல்லது மாதம் ஒரு நாளோ குளிப்பதை நிறுத்தினால் 20 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம். எனில் உலகிலுள்ள 20 பில்லியன் மக்களும் அந்த ஒரு நாள் குளிப்பதை நிறுத்தினால் 20 பில்லியன்*20 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படலாம். இதன் மூலமாக ஒரு மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையை நம்மால் பூர்த்தி செய்ய முடியும் என்கிறார் மாதவ். தண்ணீரின்றி தவிக்கும் விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் இது உபயோகமாக இருப்பது மட்டுமன்றி, அதனால் புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்களைத் தடுக்க முடியும் என்கிறார். எப்படி என்றால் தற்போதைய நவீன உலகில் பெருநகரங்களில் தண்ணீருக்காக நாம் செலவிடும் மின்சாரமும், எரிபொருள்களும் அதிகமாக உள்ளன. இதனால் பசுமை இல்ல வாயுக்களும் அதிகமாகவே வெளியாகின்றன. எனவே நாம் இப்படித் தண்ணீரைச் சேமித்தால் புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்த சந்ததிகளுக்கும் தண்ணீரைச் சேமிக்கலாம் என்கிறார் மாதவ். எனவே ``பிரச்னைகளுக்கான தீர்வானது அந்தப் பிரச்னையிலேயேதான் உள்ளது" எனக் கூறி இந்த 'BathPill' எனப்படும் குளிக்க மறுத்துத் தண்ணீரைச் சேமிக்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார் அவர். இதைப் பொதுமக்களிடம் கூறினால் சிரிப்பாகத்தான் முதலில் இருக்கும் என்றும் தனி மனிதனின் ஒரு நாள் குளியலை விடஇந்தப் பூமி முக்கியமானதே என்பதைப் புரிந்து தண்ணீரின் அவசியத்தை மாணவர்கள்தான் இதை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்,

``மனிதனுக்கு அழகு என்பது அவசியமே. அதுபோல இயற்கையின் அழகும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று நினைப்பவர்களால் மட்டுமே இந்த #BathPillChallenge சாத்தியமாகும் என்கிறார் இவர்.

இரண்டாவதாக ``Nail Free Trees" எனப்படும் மரங்களைப் பாதுகாக்கும் வழிமுறை. மனிதர்களாகிய நமக்கு எப்படி உணர்வுகள் உள்ளனவோ. அதுபோல மரங்களுக்கும் உணர்வுகள் உள்ளன. மனிதர்களாகிய நமக்கு எப்படி வலிகள் உள்ளனவோ அதுபோலத்தான் மரங்களுக்கும் வலிகள் உள்ளன. மனிதர்கள் வெளிக்காட்டுகிறோம். மரங்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதே உண்மை. நம் அன்றாட வாழ்வில் மரங்களின் மீது ஆணி அடித்த நிலையில் இருக்கும் விளம்பரங்களையும், போஸ்டர்களையும் பார்த்திருப்போம். இதனால் மரங்களுக்கு விளைவு என்ன என்பது நாம் அறியாதே. இப்படி மரங்களின் மீது ஆணி அடிப்பதாலோ அல்லது போஸ்டர்களை ஒட்டுவதாலோ அதனுடைய வளர்ச்சிதை மாற்றமே பாதிப்படைகிறது. அதனுடைய ஆயுட்காலமே குறையும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது என்கிறார் மாதவ். இதனால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுமே பாதிப்படையும் என்பது நம்மால் மறுக்க முடியாததே. மேலும் அவர், வளரும் மரங்களைச் சுற்றி வேலி அமைப்பதும் மரங்களின் வளர்ச்சி விகிதத்தைக் குறைப்பதும் மட்டுமல்லாமல் வேலியில் உள்ள உலோகமானது அந்த மரத்தின் உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது என்கிறார். உற்பத்தி பாதிப்பால் காய், கனிகளின் விலை உயர்வும் அதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் பாதிக்கப்படும். இதனால் செயற்கையாகப் பழுக்க வைக்கும் முறைகள் அதிகரிப்பதும் சமுதாயத்தில் ஆரோக்கியமற்ற ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் மாதவ்.

இப்படியாக சுற்றுச்சூழலுக்காக தான் மட்டுமல்லாமல் தனது குடும்பத்துடன், இந்த இரு கோரிக்கைகளுக்காகப் பிரசாரத்தை இந்தியா முழுதும் தொடங்கியுள்ளார். இந்தப் பிரசாரங்களைத் தொடங்குவதற்கு முன்னர் மற்ற சில விஷயங்களையும் புரிந்துகொண்டு அவற்றையும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் இணைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். சூழலியலாளர்கள் குறிப்பிடும் அந்தச் சில விஷயங்களை இனி பார்ப்போம்,

``தண்ணீரைச் சேமிப்பதில் தனிமனிதர்களின் பங்கு மிக முக்கியமானதுதான். அதில் எந்தவித மாற்றுக் கருத்துமே இல்லை. தம் பயன்பாடுகளுக்குத் தேவையான நீரைக் குறைவான அளவில் பயன்படுத்துமாறு வலியுறுத்தலாம். குளிப்பது உட்பட உணவு, பாத்திரங்களைச் சுத்தம் செய்தல் போன்ற பயன்பாட்டில் ஈடுபடுத்தும் தண்ணீரை நாம் மீண்டும் நிலத்துக்கே அனுப்பலாம். அது நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும். மொத்தமாகத் தனிமனிதர்களின் பொறுப்பாகவே நீர் சேமிப்பினைக் கொண்டு வருவது பல்லாண்டு காலமாகப் பெரு நிறுவனங்கள் செய்த பாவங்களுக்கு அதில் ஏற்பட்ட விளைவுகளை அனுபவிக்கும் மக்களையே பிராயச்சித்தம் செய்ய வைப்பதற்குச் சமம். 

முறையான திட்டமிடுதல்கள் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக நீர்நிலைகளைச் சீரழித்த அரசுகள் செய்ய வேண்டிய கடமைகள் பலவும் பாக்கியுள்ளன. இந்தப் பிரச்னைகளைச் சீர்ப்படுத்தினாலே நாட்டின் நீர்வளமும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பலமும் நமக்குக் கிடைத்துவிடும். அதைத் தவிர்த்துவிட்டு மீண்டும் மீண்டும் தனிமனிதர்கள் தலையிலேயே சுமைகளைச் சுமத்திக்கொண்டு போவது தவறான மனப்போக்கு. சூழலியல் பிரச்னைகள் தனிமனிதர்களால் உருவானதைவிட அரசு அமைப்புகளின் அஜாக்கிரதையாலும் அக்கறையற்ற தொலைநோக்குச் சிந்தனையற்ற செயற்பாடுகளாலுமே அதிகம் நிகழ்ந்துள்ளன. அதிலும் நீர்வள மேம்பாட்டை முறையாகச் செய்யாத நிறுவனங்களும் அரசுகளும் இருக்கும்வரை வெறும் தனிமனித தியாகங்கள் இத்தகைய உலகளாவியப் பிரச்னைகளுக்குத் தீர்வாகாது. இதற்கான தீர்வு மக்களிடம் சூழலியல் அரசியலையும் இயற்கை வளச் சுரண்டல்களையும் நீர் அரசியலையும் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகளைச் சீரமைக்கவும் பராமரிக்கவும் அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காடுகளுக்குள் உலவும் பழங்குடிகள் தாம் சென்ற பாதையை மீண்டும் அடையாளப்படுத்தி வருவதற்காகப் பாதையிலுள்ள மரங்களின் பட்டைகளில் அரிவாள்களால் ஆழமாக வெட்டிக் கோடு போட்டு வைத்துவிட்டபடி செல்வார்கள். அதனால் அந்த மரங்கள் எந்தவித வளர்சிதை மாற்றங்களுக்கும் உள்ளானதில்லை. செழிப்பாகவே வளர்கின்றன. ஊர்ப்புறங்களில் வளர்க்கும் மரக் கன்றுகளை ஆடு, மாடுகள் மொத்தமாகத் தின்றுவிட்டால் சாலையோரங்களில் மரமாக வளராது என்பதற்காக இரும்புவேலி போட்டு வைப்பார்கள். அந்த வேலிகள் மரங்களின் வளர்ச்சியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அதேசமயம் இவையாவும் செய்யப்படுவது பெரும்பாலும் சாலையோர மரங்களுக்கே. பழ மரங்கள் மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபடும் தாவரங்களுக்கு யாரும் இப்படியான செயல்களைச் செய்வதில்லை. உணவு உற்பத்தியிலும் ஆரோக்கியமான வாழ்விலும் அக்கறை உண்டென்றால் உண்மையில் செய்ய வேண்டியது ரசாயன உரங்களை ஊக்குவிக்கும் விவசாய முறையைப் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். இயற்கைவழி விவசாயத்தின் நன்மைகளை மக்களுக்குப் பிரசாரம் செய்யவேண்டும். இந்தியா முழுவதும் ஊடுருவியுள்ள மரபணு மாற்றப்பட்ட விளைபொருள்கள் மற்றும் ரசாயன உரங்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டும்" என்கின்றனர் எதிர்க்கருத்து கொண்ட சூழலியலாளர்கள்.

தண்ணீர் பஞ்சத்தைப் போக்கவும் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தனிமனிதச் செயற்பாடுகள் மட்டுமே உதவாது. அதில் அரசுகள் மற்றும் பெருநிறுவனங்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதையுணர்ந்து அதைச் செய்ய அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதையும் அந்தப் பிரசாரத்தின் பகுதியாக திரு.மாதவ் பாட்டில் இணைத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதே அவர்களின் கருத்து. இல்லையேல் பெருநிறுவனங்களின் பாவத்திற்குப் பொதுமக்களை பலிகடாவாக்கும் ஒரு சடங்காகவே இது முடியும்.