Published:Updated:

பேராசிரியர் ஜெயராமன் கைதைக் கண்டிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேராசிரியர் ஜெயராமன் கைதைக் கண்டிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!
பேராசிரியர் ஜெயராமன் கைதைக் கண்டிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

பேராசிரியர் ஜெயராமன் கைதைக் கண்டிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

மீத்தேன் திட்டத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் பேராசிரியர் ஜெயராமன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒ.என்.ஜி.சி காவிரி டெல்டா பகுதியில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் இல்லை என்று கூறுவது பொய் எனவும் ஒ.என்.ஜி.சி அதிகாரி மிஸ்ரா உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறிவருவதாகவும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்திருந்தார். மேலும் மக்களிடம் கருத்து கேட்காமல் ஷேல் எரிவாயு கிணறுகளை அமைக்க ஒ.என்.ஜி.சி முயல்வதாக ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் ஒ.என்.ஜி.சி இன்று காலை எண்ணெய் கிணற்றை சுத்தம் செய்ய வந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனால்  பேராசிரியர் ஜெயராமனுடன் உள்ளூரைச் சேர்ந்த ராஜா என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 2017-ம் ஆண்டு பிணையில் வெளியே வராதபடி பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பேராசிரியர் ஜெயராமனின் கைதுக்குச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடனடியாக விடுதலை செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.

பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ``பொதுமக்களுக்கு முன் அறிவிப்பின்றி கதிராமங்கலத்தில் ONGC நிறுவனத்தினர் பெட்ரோல் கிணறு பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர். இதுகுறித்து கேட்க வந்த மீத்தேன் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. ஒரு பக்கம் விவசாயிகள் விரும்பவில்லையென்றால் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் எனக் கூறிவரும் தமிழக அரசு மறுபுறம் தொடர்ச்சியாக ஒ.என்.ஜி.சி-க்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஏலம் விட்டு வருகின்ற நேரத்தில் அதை எதிர்க்காமல் தமிழக அரசு மௌனம் காத்து வருகிறது. அதுமட்டுமன்றி எதிர்த்துப் போராடுபவர்கள் மீது சட்டத்துக்கு புறம்பான கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. உடனடியாகப் பேராசிரியர் ஜெயராமனையும் அவரோடு கைது செய்யப்பட்டவர்களையும் தமிழக அரசு விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் மக்கள் செயற்பாட்டாளர்களும் திடீரென கைது செய்யப்படுவதும் பின் அவர்களைப் பிணையில்கூட வெளியே வராத அளவுக்கான வழக்குகளைப் பதிந்து நீண்டகாலம் சிறையில் வைத்திருப்பதும் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் முகிலனிடம் பேசுகையில்,``சூழலியல் செயற்பாட்டாளர்கள், மக்கள் செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் வெளியில் இருப்பதே அரசுக்கு அச்சுறுத்தல் என அவர்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் மக்கள் விரோத திட்டங்களான கதிராமங்கலம், நெடுவாசல், இணையம் துறைமுகம், கெயில் பிரச்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எனத் தொடர்ந்து மக்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு இவர்கள் செய்திருக்கும் கள செயல்பாடுகள்தான் காரணம். சிறைக்குத் தள்ளுவது மட்டுமல்லாமல் உயிருக்கு அச்சுறுத்தும் செயல்பாடுகளையும் அதிகார வர்க்கம் செய்யத் தங்குவதில்லை. சிறையில் இருந்து வெளியே வந்தபின் இருமுறை எனக்கு அச்சுறுத்தல்கள் நிகழ்ந்தன. இவையெல்லாம் தெரிந்தேதான் செயற்பாட்டாளர்கள் இன்னும் அதிகமாய் போராடிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு