Published:Updated:

ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா மக்கா?

ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா மக்கா?
ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா மக்கா?

"என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும் அம்புட்டையும் வாழை இலைகள் `அட்ச்சுத் தூக்கிருதுல'?"

யற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க. ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம். அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது. அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம். அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம தாத்தன் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம். எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத் தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை. 

இப்போ அந்த மாதிரியான வாழ்வு இல்ல. நம்ம சிந்தனை எல்லாமே மாறிடுச்சி. எதை எதுக்குச் செய்றோம்ன்னு தெரியாமலேயே எல்லாத்தையும் செய்யிறோம். பண்பாடு பழக்கிவிட்ட நாம, பண்பாட்டைப் பழகிக்க வேண்டிய நிலைமை வந்திருக்கு. இந்த நிலை வரக்காரணம் இயற்கைய மறந்ததுதான். அதுகிட்ட நமக்கிருந்த நன்றிக்கடன மறந்ததுதான்.

வாழை இலை... நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்தானேங்க இது! என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும் அம்புட்டையும் வாழை இலைகள் `அட்ச்சுத் தூக்கிருதுல'? 

பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் `இலைகள்'மயம்! சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்பிடி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துகள் பண்றோம்?

சைவமோ அசைவமோ, எதுவா இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டா அது எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரிபண்ணிடும். மதுரப்பக்கம் கொடலு கொழம்பா, காரைக்குடி வத்தக்கொழம்பா, கிராமத்து நாட்டுக்கோழிக் கொழம்பா... பொறுக்காத சூட்டோடகூட சோத்துல ஊத்தலாம். குழம்பு வாசமும், சூட்டுல பொசுங்கின இலை வாசமும் சேர்ந்து... அம்மாடி, மயக்கும்! 

வீட்டுக்குன்னு சொல்லி `கரக் மொருக்' பிளாஸ்டிக் கேரி பேக்கில போட்டுக் கொண்டு போயிச் சாப்பிட்டு, வயித்துக்குச் சேரலைன்னு சொல்லிப் புலம்புறது இருக்கே... கஷ்ட காலம், என்னத்தச் சொல்ல?

தோப்புல இருந்து வர்ற இலைகள்ல பூச்சி, மண் அழுக்குலாம் இருக்கும். அதைச் சுத்தம் பண்றதுக்குத்தான் தண்ணி தெளிச்சுத் தொடைக்கிறது. பல இடங்கள்ல வாட்டர் பாட்டில் மூடியில ஓட்டையப் போட்டு, `சர்ர்ர்ர்'ன்னு பீய்ச்சியடிச்சுக்கிட்டே ஓடுவாரு, யாருவீட்டுப் பிள்ளையோ... அந்தத் தண்ணி, இலையைத் தவிர எல்லாப் பக்கமும் பட்டுத் தெறிச்சிருக்கும். போதாததுக்கு நாமளும், கிளாசுக்குள்ள ஒத்தை விரல விட்டு எடுத்து இலையில தெளிப்போம், '...சாத்திரம் எதுக்கடி, கண்ணம்மா!'

அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்கதான் வைக்கணும். இலையோட மேல் பக்கம், `தொடு கறி'ங்க. இடப்பக்கம், அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுறது? குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சோத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க இந்த அமைப்பு!

சாப்பிடும்போது இலையோட பக்கத்தையும், சாமி கும்பிடும்போது தெசையையும் கேட்டா நம்ம பயலுக முழிப்பானுங்களே ஒரு முழி... ஜென் நிலைக்கும் மேல!

இலையை உள்பக்கமா மடிச்சா உறவு நீடிக்கும்... வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை. பந்திகள்ல எதிரெதிர்ப்பக்கமா உக்காந்திருப்போம். வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற `பொதுவெளி நாகரிகம்' தான்ங்க அது! அந்த நாகரிகம் ஒருபுறம் இருக்க, இன்னொரு நாகரிகம் வாண்டடா இப்போ வலம்வந்துட்டு இருக்கு! 

அது என்ன? இலைக்கு கிட்ட வர்ற சட்னி, ஜாங்கிரின்னு எல்லாத்தையும் வாரிச் சுருட்டி வாழை இலையில போட்டுக்கிட்டு, `உங்க மனசு நோகக்கூடாதுன்னுதான் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டேன்'ன்னு, அழைச்சவங்களுக்கு ஆறுதல் சொல்லி, மாஸ்டர்கள் பார்த்தது போதாதுன்னு இவரும் டேஸ்ட் பார்த்துட்டு அவ்வளவையும் அப்பிடியே வீணாப் போட்டு மூடிவிட்டுட்டுப் போறதுலாம் மன்னிக்க முடியாத மொரட்டு நாகரிகம்ங்க. உண்மையில இது, நாகரிக லிஸ்ட்லகூட வராது! 

உலக மக்கள் தொகையில மூணுல ஒருபங்குப் பேருக்கு உணவில்லைங்கிறதை மறந்திடாதீங்க, டீசன்ட் கய்ஸ்!

ஆச்சா, மக்கா! நெருக்கு வட்டத்திலதான் வாழ்றீங்க, புரியுது! காத்தைக் கிழிச்சிட்டுப் போற தூரத்தில ஒரு எட்டு... வாழைத்தோப்புப் பக்கம் வந்து பாருங்களேன். அது, வாழ வைக்கிற தோப்புன்னு புரியும். நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சிக் கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்!

அடுத்த கட்டுரைக்கு