Published:Updated:

ஆதாரங்களில் மோசடி செய்ததா ஸ்டெர்லைட்... ஆர்.டி.ஐ அதிர்ச்சி!

தூத்துக்குடி தாமிர ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் காற்றில் உள்ள உண்மையான மாசுபாடு மறைக்கப்பட்டு விட்டது. காற்றுத்தர கண்காணிப்புப் புள்ளி விவரங்களில் மோசடி செய்த வேதாந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்.

ஆதாரங்களில் மோசடி செய்ததா ஸ்டெர்லைட்... ஆர்.டி.ஐ அதிர்ச்சி!
ஆதாரங்களில் மோசடி செய்ததா ஸ்டெர்லைட்... ஆர்.டி.ஐ அதிர்ச்சி!

ஸ்டெர்லைட் வேதாந்தா மீதான பசுமைத் தீர்ப்பாய வழக்கில் ஆலையைத் திறக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதில் சமர்ப்பிக்கப் பட்டிருந்த காற்றுத்தர கண்காணிப்புப் புள்ளிவிவரங்கள் உண்மையானது இல்லை. அதற்காகவும், போலியான தரவுகளைக் கொடுத்ததற்காகவும் குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ``தூத்துக்குடி தாமிர ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் காற்றில் உள்ள உண்மையான மாசுபாடு மறைக்கப்பட்டுவிட்டது. காற்றுத்தர கண்காணிப்புப் புள்ளி விவரங்களில் மோசடி செய்த வேதாந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறுகிறது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம். இதுகுறித்துத் தமிழக அரசுக்குப் புகார் ஒன்றை அது அனுப்பி வைத்திருக்கிறது. வேதாந்தாவின் காற்றுத் தர கண்காணிப்புக் கருவிகள் சட்டபூர்வமானவை இல்லை என்றும் அந்தக் கருவிகளில் கிடைத்த தரவுகள் நம்பத் தகுந்தவை இல்லையென்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அவர்கள் பெற்ற தகவல்கள் கூறுகின்றன.

வேதாந்தா அமைத்துள்ள இடத்தில் தொடர்ச்சியாகக் காற்றின் தரம் கண்காணிக்கப்பட வேண்டும். ஆனால், அந்தக் கருவிகள் தவறான தகவல்களைத் தருகின்றன. 2017-2018 காலகட்டத்தில் 35% முதல் 55% நேரத்திற்குத் தவறான தகவல்களைத் தருவதாகவும் அல்லது தகவல்களை அளிக்கத் தவறியதாகவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. உதாரணமாக, 20.05.17 முதல் 2.06.2017 வரை மீளவிட்டானில் பெறப்பட்ட புள்ளிவிவரம் ஒரே மாதிரியான வகையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் கந்தக டை ஆக்சைடின் அளவு 2.0mg/Nm3 இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

``காற்று மாசுபாடு என்பது காற்றின் வேகம் மற்றும் திசை, வெப்பநிலை, சூரிய வெளிச்சம் ஆகியவற்றால் தொடர்ந்து மாறும். ஆகவே, ஒவ்வொரு நாளும் காற்று மாசுபாட்டின் அளவு மாறிக்கொண்டேயிருக்கும். ஆனால், அனைத்து நாள்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒரே அளவிலான காற்றுத்தரம் நம்பத் தகுந்தவையாக இல்லை" என்கிறது ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு. கண்காணிப்புக் கருவிகளில் மோசடி செய்யப்பட்டிருந்தாலோ அல்லது அதன் உணர் கருவிகள் (sensors) தரமற்றவையாக இருந்தாலோ மட்டுமே இப்படியான அளவு பதிவாகும். இந்த இரண்டுமே சட்ட விரோதமானவையும் ஆபத்தானவையும் ஆகும். இதேபோல் மீளவிட்டான் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கருவி 2017-2018 ஆண்டுக்குள் சுமார் 132 நாள்களுக்குத் தொடர்ந்து தவறான தகவல் அளித்திருக்கிறது பல சமயங்களில் செயல்படாமலும் இருந்திருக்கிறது.

அதோடு மேலும் பல தகவல்களும் பெறப்பட்டுள்ளன. அதன்படி, வேதாந்தா பராமரித்து வரும் காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்கள் எவையும் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவை அல்ல. ஆட்களால் இயக்கப்படுகின்ற காற்றுத் தர கண்காணிப்புக்குப் பதிலாக 24 மணி நேரமும் தன்னிச்சையாக இயங்குகின்றதாகவும், அதற்கான காற்று மாசுபாட்டுக் கண்காணிப்புக் கருவிகளின் எண்ணிக்கையை 13 ஆக உயர்த்த வேண்டும் என்றும் 2005ல் வேதாந்தாவுக்குத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. மேலும் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜனின் பல்வேறு ஆக்சைடுகள், காற்றில் உள்ள துகள்களின் எண்ணிக்கை, புளோரின் அளவு ஆகியவற்றைப் பற்றியும் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். இன்றைய தேதியில் பார்த்தால், நிறுவப்பட்ட 13 காற்றுத் தர கண்காணிப்புக் கருவிகளில் 8 மட்டுமே தொடர்ந்து கண்காணிப்பு செய்கின்றன. அந்தச் சாதனங்களில் எதுவும் புளோரின் அளவைக் கண்காணிப்பதில்லை. வேதாந்தாவின் பாஸ்பாரிக் அமில ஆலை புளோரின் என்ற அந்த நச்சு வாயுவை வெளியிடுகிறது. புளோரின் என்ற அந்த வேதிப்பொருள் பற்களையும், எலும்புகளையும், அதன் கட்டமைப்பையும் பாதிக்கக் கூடியது, குழந்தைகளின் எலும்பு வடிவத்தையே மாற்றியமைக்கக் கூடியது.

மீளவிட்டான், சில்வர்புரம், மடத்தூர், பண்டாரம்பட்டி, குமரெட்டிபுரம், டி.வி புரம் ஆகிய இடங்களில் காற்று மாசுபாடு இல்லை என்று கருவிகளின் புள்ளிவிவரங்கள் கூறுவதாக வேதாந்தா வாதம் வைத்துள்ளது. ஆனால், இந்த இடங்களில் காற்று மாசுபாட்டைக் கண்காணிப்பதற்குக் கருவிகளே இல்லை. ``கண்காணிப்பு செய்தால்தான் காற்று மாசுபாடு தெரியும். பண்டாரம்பட்டி, குமரெட்டியாபுரம், மடத்தூர், சில்வர்புரம் ஆகிய இடங்களில் வேதாந்தாவின் காற்று மாசுபாடு கண்காணிப்புக் கருவிகள் ஏதும் இல்லை. மாசுபாட்டின் அளவு அளக்கப் படாமலேயே மாசுபாடு இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்?“ என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு கேள்வியெழுப்பினார்.

மீளவிட்டான், டி.வி புரம் ஆகிய இடங்களில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த போதும்கூட, அந்தக் கருவிகள் பல சமயங்களில் இயங்காதவையாகவே இருந்துள்ளன. ஏப்ரல்-1 2017-க்கும் மார்ச்-31 2018-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த இரண்டு இடங்களிலும் உள்ள சல்பர் டை ஆக்சைடு கண்காணிப்புக் கருவிகள் 35% அளவிலான நாள்களுக்குத் தவறாகச் செயல்பட்டன அல்லது செயல்படவேயில்லை என்று கூறுகிறது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தகவல்கள். அதே காலகட்டத்தில் மீளவிட்டான், டீ.வி புரம் பகுதிகளில் அமைந்துள்ள நைட்ரஸ் ஆக்சைடஸ் கண்காணிப்புக் கருவிகள் 56% நாள்களுக்குத் தவறாகச் செயல்பட்டன அல்லது செயல்படவேயில்லை என்றும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

மற்ற இடங்களில் உள்ள கண்காணிப்புக் கருவிகள் இதைவிடவும் மோசமான நிலையில் உள்ளன.

2017-18 ஆண்டுக்கான தகவல்கள்,

•    ஸ்டெர்லைட் நுழைவாயிலில் உள்ள கந்தக டை ஆக்சைடு கண்காணிப்புக் கருவிகள் ஒரு நாளில்  42% காலத்துக்கு மட்டும்தான் செயல்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் அது செயல்படவில்லை.

•    ஸ்டெர்லைட் காலனியில் உள்ள கண்காணிப்புக் கருவிகள் ஒரு நாளில் 40% காலத்துக்கும், ஸ்டெர்லைட் ஜிப்சம் பாண்ட் (கிழக்கு) அருகே உள்ள கந்தக டை ஆக்சைடு கண்காணிப்புக் கருவிகள் ஒரு நாளில் 44% காலத்துக்கும் மட்டுமே செயல்பட்டுள்ளன.

•    ஸ்டெர்லைட் ஜிப்சம் பாண்ட் (மேற்கு) அருகே உள்ள அதே வேதிமத்துக்கான கண்காணிப்புக் கருவிகள் ஒரு நாளில் 55% காலத்துக்கும், சிப்காட்டில் 47% காலத்துக்கும் மட்டுமே செயல்பட்டன. மற்ற நேரங்களில் தரவுகள் சேகரிக்கப்படவில்லை. இந்தச் சமயங்களில் கிடைத்தவையே அவர்கள் சமர்ப்பித்த புள்ளிவிவரங்கள். மேற்குறிப்பிட்ட கூற்றின்படி ஒரே மாதிரியான காற்றுத்தரம் இருக்காது. காலநிலைகள் மாறுவதற்கு ஏற்ப காற்றின் தரமும் சேர்ந்தே மாறுபடும். ஆகவே கண்காணிப்புக் கருவிகள் ஒன்று தவறாகச் செயல்பட்டன அல்லது செயல்படவே இல்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மார்ச் 2013-ல் நிகழ்ந்த நச்சு வாயுக் கசிவுக்குப் பின்பு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு ஆய்வு செய்தது. ஆண்டு முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் காற்று வீசும் திசைக்கு ஏற்றார் போலக் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படவில்லை என்றும், கீழ்த்திசை நோக்கி காற்று வீசும் பகுதியில் ஒரு நிலையம் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டுபிடித்தது. காற்று மாசுபாட்டைக் கண்டுணரவும் கட்டமைப்பின் வலைப்பின்னல் அமைப்பை மாற்றியமைக்கவும் வேண்டுமென்று பசுமைத் தீர்ப்பாயம் பரிந்துரைத்தது. ஆனால், மிகப் பிரதானமாக காற்று வீசுகின்ற மீளவிட்டானில் ஒரே ஒரு யூனிட்டை மட்டுமே வேதாந்தா இயக்கி வந்தது. அந்த ஒரு யூனிட்டும் கூட மக்கள் வாழும் பகுதியில் அமைக்கப்படவில்லை.

கந்தக டை ஆக்சைடு மிகவும் அரிக்கும் தன்மை வாய்ந்த நச்சு வாயுவாகும். அந்த வாயுவை மிகவும் குறைந்த நேரம், அதிக அளவு சுவாசித்தால் பல உடல் நலப் பிரச்னைகள், சமயங்களில் மரணமும் ஏற்படக் கூடும்.

பல இடங்களில் காற்றுத் தர கண்காணிப்புக் கருவியே இல்லாத நிலையிலும் இருக்கும் இடங்களிலும் முறையாகச் செயல்படாத கண்காணிப்புக் கருவிகளை வைத்துக்கொண்டும் தான் ஸ்டெர்லைட் தன்னால் பாதிப்பு இல்லையென்று வாதிட்டுள்ளது. ``பற்பல நாள்கள் கருவிகள் தொடர்ந்து தவறாகச் செயல்பட்ட போதும் அதைச் சரிசெய்யாதது கிரிமினல் குற்றத்தை விடக் குறைந்த குற்றம் ஆகாது“ என்று குறிப்பிடுகிறார் பாத்திமா. ``புள்ளிவிவரம் இல்லை என்பதால் பிரச்னை இல்லை என்று ஆகாது. யார் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கிறார்களோ அவர்களே சாதனங்களில் மோசடி செய்வார்கள் என்றால், அல்லது தவறாகச் செயல்படும் கருவிகளைச் சரிசெய்யத் தவறுவார்கள் என்றால், அது குற்றத்தன்மையுள்ள நடவடிக்கையாகும்“, என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதுகுறித்து ஸ்டெர்லைட் தரப்பிலிருந்து தரப்பட்ட விளக்கத்தில், “தூத்துகுடியில் நிலவுகிற காற்று வீசும் போக்கின் அடிப்படையில் காற்றுத் தர கண்காணிப்பு அமைவிடங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் இறுதி செய்யப்பட்டன. 360 டிகிரியை உள்ளடக்குகிறவாறு அனைத்து 8 திசைகளையும் உள்ளடக்குகிறவாறு இந்த 8 அமைவிடங்களிலுள்ள கண்காணிப்பு அமைப்புகளின் செயற்பரப்பு இருக்கிறது. மேற்கூறப்பட்ட கிராமங்கள் அனைத்தும் இந்த 8 அமைவிடங்களில் ஏதாவதொன்றின்கீழ் இடம்பெறுகின்றன என்பதால் அதே திசையில் கூடுதலாக காற்று கண்காணிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான தேவை எதுவும் எழவில்லை. கந்தக டை ஆக்சைடு உமிழ்வுகள் இருந்திருக்குமானால், மேற்கூறப்பட்ட 8 கண்காணிப்பு அமைவிடங்களில் முதன்மையாக இவை பதிவாகியிருக்கும். அவ்வாறு பதிவுகள் ஏதும் இல்லை என்ற காரணத்தால், இவ்விடங்களில் காற்று மாசு இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாங்கள் 14 கண்காணிப்பு (AAQM & CAAQM) நிலையங்களை கொண்டிருக்கிறோம். இந்த 14 கண்காணிப்பு நிலையங்களில் 8 இணைய பகுப்பாய்வு நிலையங்களாகவும், எஞ்சியுள்ள 6 மனிதர்களால் இயக்கப்படும் கண்காணிப்பு நிலையங்களாகவும் இருக்கின்றன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சர்வரில் பெறப்படும் இணைய தரவுகள் ஒவ்வொரு நிமிடமும் பதிவுசெய்யப்படுகிறது. தகவல் அறியும் சட்டம் மூலமாக வழங்கப்பட்ட தகவலானது, பெரிய மாற்றங்களைக் காட்டுகிற அல்லது காட்டாத நாளின் சராசரி மதிப்பீடுகளாக இருக்கலாம் மற்றும் அவைகள் பொதுவாகக் காணப்படும் காற்று வீசும் போக்கைச் சார்ந்திருக்கும். இந்த இயற்கை நிகழ்வை, காற்று கண்காணிப்புப்பகுப்பாய்வு சாதனங்களின் செயல்பிழைகளாக காரணம் காட்ட இயலாது” என்றது.

காற்று வீசும் போக்கை வைத்துக் கண்காணிப்பதாகச் சொல்லுகிறார்கள். கண்காணிப்பு நிலையங்கள் அமைந்திருக்கும் இடத்துக்கும் அதில்லாத கிராமங்களுக்கும் இடையே குறைந்தபட்சம் ஐந்து முதல் எட்டு கிலோமீட்டர் வரை தூரமுள்ளது. இவ்வளவு தூரத்துக்கும் காற்றின் போக்கை அதுவும் கடலோர மாவட்டத்தில் அதன் போக்கை வைத்துக் கண்காணிப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகமான உற்பத்திக்குத் தகுந்தவாறு ஏன் புகைப்போக்கியின் உயரத்தை அதிகப்படுத்தவில்லை என்று கேட்டபோது நாங்கள் ஒன்றுக்கு இரண்டாக அமைத்துவிட்டோம் என்றார்கள். அதிக உற்பத்தி அதிக நச்சுப்புகையை வெளியேற்றும், அது மக்களை பாதித்துவிடக் கூடாதென்றே உயரப்படுத்துமாறு கூறப்படுகிறது. அதைப் பொருட்படுத்தாமல் வெறுமையாகக் காரணங்களை அடுக்கிய ஸ்டெர்லைட், இதிலும் அதையே செய்கிறார்கள். அதேசமயம், மொத்தமாகப் பதினான்கு இணைய கண்காணிப்பு நிலையங்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதில் எட்டு மட்டுமே இணைய கண்காணிப்பு நிலையங்கள் என்பதை அவர்களே சொல்கிறார்கள். ஆர்.டி.ஐ தகவலில் அந்த எட்டு நிலையங்களிலும்கூட சராசரி அளவையே கொடுத்திருக்கலாம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வாங்கிய தகவல்கள் தினசரி முறையில் இருக்கிறது. தினசரியாகவே இருந்தாலும் எல்லா நாளும் ஒரே அளவாகத்தான் காற்றுத்தரம் இருக்குமென்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

முறையாகக் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கவில்லை, அமைத்துள்ள நிலையங்களில் கிடைத்த தரவுகள் நடைமுறைச் சாத்தியமற்ற வகையில் உள்ளது. இன்னும் ஸ்டெர்லைட் தரப்பில் கொடுக்கப்பட்ட அனைத்து தரவுகளையும் மறுபரிசீலனை செய்து உண்மைகளைக் கண்டறிய தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நீதித்துறையும் முன்வரவேண்டும். மீண்டுமொரு முறை இந்த ஜனநாயக அரசில் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டுவிடக் கூடாது.