Published:Updated:

50 மூலிகைகள்; 2,500 மரங்கள்... அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் உருவாக்கிய ஓர் அடர்வனம்!

தனியொருவனாக 2500 மரங்களைக் கொண்ட அடர்வனம் ஒன்றை உருவாக்கி அசத்தி இருக்கிறார் இந்தத் தலைமை ஆசிரியர்.

50 மூலிகைகள்; 2,500 மரங்கள்... அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் உருவாக்கிய ஓர் அடர்வனம்!
50 மூலிகைகள்; 2,500 மரங்கள்... அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் உருவாக்கிய ஓர் அடர்வனம்!

காடுகளை அழித்து, இயற்கையைச் சிதைத்த நமது சுயநலத்தால், சென்னை பெருவெள்ளம், தானே, ஒகி, கஜா என்று இயற்கையிடம் நாம் தொடர்ச்சியாக வாங்கிக் கட்டிக்கொள்கிறோம். ஆனால், அதிலிருந்து முறையான படிப்பினைகளை இன்னும் நம்மில் பலரும் பெறவில்லை என்பதே உண்மை. இந்நிலையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஏற்றி வைத்துவிட்டுப் போன, இயற்கை குறித்த விழிப்புஉணர்வு தீப ஒளியில், இளைஞர்கள் பலர் இயற்கை குறித்தான கவலையை வெளிக்காட்டத் தொடங்கியிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். அப்படி, நம்மாழ்வாரின் சீடராக இருந்து, அவரது அறிவுரைப்படி 10 ஏக்கர் நிலத்தில் அடர்வனத்தை உருவாக்கி அசர வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகர். 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மாயனூர் முடக்குச்சாலை பகுதியில் இருக்கிறது இவர் உருவாக்கி இருக்கும் அடர்வனம். இந்தப் பகுதியே வறட்சி நிறைந்த பூமியாக இருந்தாலும், இவர் 250 வகையான 2,500 மரங்களை உருவாக்கி, வறண்ட பூமியில் இயற்கை சொர்க்கத்தைக் கட்டமைத்திருக்கிறார். அந்த வனத்துக்குள் நுழைந்தால், நிஜமாக ஒரு காட்டுக்குள் போன எஃபெக்ட் கிடைக்கிறது. அந்த வனத்துக்குள் குணசேகரோடு காலாற நடைபோட்டபடி அவரிடம் பேசினோம். 

``எங்களுக்குப் பூர்வீகம் இதே ஒன்றியத்தில் உள்ள குப்பிரெட்டிப்பட்டி. அப்பா காவல்துறையில் பணியில் இருந்ததால், சின்ன வயசுல இருந்து கரூர் நகரத்தில்தான் வசித்தோம். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடிச்சேன். சின்ன வயசுல இருந்து சொந்தமா நிலம் வாங்கி, விவசாயம் பார்க்கணும்னு நினைச்சேன். 2000-ம் வருஷத்துக்கு முன்னாடி சில வருடங்கள் சிங்கப்பூர்ல வேலை பார்த்தேன். அதன் பிறகு, ஊருக்கு வந்த எனக்கு, அரசுப்பள்ளி ஆசிரியரா வேலை கிடைச்சுச்சு. இப்போ மாயனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியரா இருக்கேன். இடையில் 2002-லேயே இந்தக் காடு மற்றும் மேய்ச்சல் நிலம் அடங்கியுள்ள 14 ஏக்கர் நிலத்தையும் வாங்கினோம். எல்லோரையும்போல அதுல விவசாயம் பார்த்து, லாபம் பார்க்கணும்னு நினைச்சேன். அதனால் மாங்கன்றுகளையும் தென்னையையும் மட்டுமே நடவு செய்தேன். 2008-ம் வருஷம் போல நம்மாழ்வார் அய்யாவோட அறிமுகம் கிடைச்சுச்சு. அவரை குருவா ஏத்துக்கிட்டேன். அவரை 2009-ம் வருடம் இந்த இடத்துக்கு அழைச்சுட்டு வந்தேன். இதைப் பார்த்துட்டு, `மாந்தோப்பும் தென்னந்தோப்பும், மாட்டுக்கும் மனுஷனுக்கும் உகந்தது இல்லை'ன்னு அய்யா சொன்னார். அப்போதான், வியாபார புத்தியைக் கடந்த, சூழலுக்கு உகந்த அடர்வனத்தை உருவாக்கணும்னு முடிவு பண்ணினேன். 

சந்தனம், மருது, வாகை, அத்தி, பூவரசு, புங்கன், வேம்பு, புளியமரம், நாட்டு மூங்கில், மலைவேம்பு, நாவல், சரக்கொன்றை, பப்பாளி, கொய்யா, புன்னை, புரசு, தடுசு, காடுகளில் மட்டுமே வளரும் என்று சொல்லப்படுகிற சந்தனவேங்கை, இந்தியன் ரப்பர், மகிழம், நாகலிங்கம், திருவோட்டு மரம்னு 250 வகையான மரவகைகளில் 2,500 மரக்கன்றுகளை நட்டேன். இதைத் தவிர1,500 பனைவிதைகளையும் விதைச்சேன். இதற்காக, கிணறு வெட்டி, அதில் இரண்டு போர்களை அமைச்சேன். இதைத் தவிர, வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், ஆடாதொடா, கற்பூரவல்லி, துளசி, சிறியாநங்கை, பெரியாநங்கை, பிரண்டை, மருதாணி, ஊமத்தைன்னு 50-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளையும் வளர்த்தேன். மெள்ள மெள்ள அனைத்தும் நல்லா வளர்ந்து, நம்மாழ்வார் எனக்கு உணர்த்திய அடர்வனம் கண்முன்னே விரிய ஆரம்பிச்சுட்டு. இப்படி, எல்லாம் மரமாகி, காடு போல ஆனதால், எண்ணற்ற அருகிப்போன பறவைகளும் இங்க வந்து தங்க ஆரம்பிச்சுருக்கு. கிளி, கருங்குயில், செம்பூத்து, தவிட்டுக் குருவி, ஆந்தை, சிட்டுக்குருவி, காகம், புறா, மயில் போன்ற பறவைகளும், முயல், அணில், வௌவால் போன்ற உயிரினங்களும் இங்கே அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. அவை சாப்பிட்டது போக மீதமுள்ள பழங்களைத்தான் நாங்க பறிக்கிறோம். இந்த வனத்தில் எல்ல வகை மரங்களும் மாறி மாறி இருப்பதுபோல், ஒரு இயற்கை காட்டைப் போலத்தான் உருவாக்கியுள்ளேன். 

அதேபோல், இந்த வனத்துக்குள் வேறு செடி, கொடிகள் முளைத்தால், அதை அப்புறப்படுத்தாமல் அப்படியே இயற்கைக் காட்டைப்போல உருவாக்கி வருகிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் இந்த அடர்வனத்துக்கு தண்ணீர் பாய்ச்சாமல், இயற்கை காட்டைப்போல, இயற்கையான தகவமைப்பை பெற வைக்கும் முயற்சியையும் செய்ய இருக்கிறேன். 2006-ம் வருடத்திலேயே கரூரில் இருந்த வீட்டை வித்துட்டு, இந்த வனத்துக்கு குடிபெயர்ந்துட்டோம். இந்த வனத்துக்குள் இங்கேயே கிடைத்த பொருள்களைக் கொண்டு, இயற்கை முறையிலான மரபு வீட்டை அமைத்து, அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகளோட குடியிருக்கிறேன். அதேபோல், மின்சாரத் தேவைக்கு சோலார் முறையில் மின்சாரம் எடுத்துக்கொள்கிறோம். அடுப்பு எரிக்க பயோகேஸை பயன்படுகிறோம். வனத்துக்கு உரம் கொடுக்கவும், பயோ கேஸ் தயாரிக்கத் தேவைப்படும் சாணத்துக்காகவும் பத்துக்கும் மேற்பட்ட காங்கேயம் வகை நாட்டுரக பசுமாடுகளை வாங்கி வளர்த்து வருகிறேன். இதைத்தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்கிறேன். கரூர் மாவட்டமே வறட்சி நிறைந்த பூமி. காடுகளின் அளவு குறைவாக உள்ள மாவட்டம். அதுவும், இந்த வனம் உள்ள மண் முழுக்க சுண்ணாம்பு மண். எல்லா வகை மரங்களையும் வளர்ப்பதற்கு ஏற்ற மண் இல்லை. 

ஆனா, இங்கே இதுபோல் ஓர் அடர்வனத்தை உருவாக்கி இருப்பது, நம்மாழ்வார் எனக்குள் கடத்திய இயற்கை குறித்த சக்தியின் வெளிப்பாடா நினைக்கிறேன். இதை மாடல் அடர்வனமாக ஆக்கி இருக்கிறேன். நிறைய பேர், இன்னும் சொல்லப்போனால், நெருங்கிய சொந்தக்காரங்களே, `பொழைக்கத் தெரியாதவன். இவ்வளவு நிலத்தை வேஸ்ட் பண்ணிட்டான். காடு வளர்க்கிறானாம் காடு'ன்னு காதுபட பேசுறாங்க. அவங்களுக்கெல்லாம் வெறும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தருகிறேன். 'போட்டிப் போட்டுக்கொண்டு மரங்களை, காடுகளை அழித்ததால்தான், இப்போது அடிக்கடி வறட்சி, புயல், பெருவெள்ளம் ஏற்படுதுன்னு அவங்களுக்கு இன்னும் புரியலையே'னு வருத்தப்படுவேன். என் மனைவி சித்ரா இயற்கை மருத்துவரா இருக்காங்க. விரும்புபவர்களுக்கு சேவை அடிப்படையில் இங்க இயற்கை முறையிலான மருத்துவத்தை தர்றாங்க. இந்த அடர்வனத்தைப் பார்க்க இயற்கை குறித்த விழிப்புஉணர்வுள்ள பலர் வர்றாங்க. இதுபோல், யாருக்கேனும் அடர்வனம் அமைக்க இலவச வழிகாட்டுதல் தேவைப்பட்டாலும், கட்டாயம் என்னை அணுகலாம். ஊர்கூடித் தேர் இழுத்தால்தான் தமிழமெங்கும் இதுபோல் பல அடர்வனங்களை உருவாக்க முடியும். சீர்கெட்டுக் கிடக்கும் இயற்கை சமநிலையை பழையபடி சரிபண்ண முடியும். நம் முன்னோர்கள் வாழ்ந்த இயற்கை வாழ்வியலை மறுபடியும் வசப்படுத்த முடியும்’’ என்று முடிக்கிறார்.

அவரிடம் விடைபெற்று, கிளம்பிய நமது கண்களிலும் மனதிலும் இப்போது வரை அந்த அழகிய அடர்வனமே நிறைந்திருக்கிறது!