Published:Updated:

`விவசாயிகளில் யார் யாருக்கு 6,000 ரூபாய்?' - புஸ்வாணமாகிறதா பட்ஜெட் அறிவிப்பு?

இப்படிப் பெரும்பாலான விவசாயிகள் வெளியேறும்படி ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, அதை மொத்த விவசாயிகளுக்குமான திட்டமாக முன்னிறுத்துவதெல்லாம் எதற்காக? வெறுமனே, தேர்தல் நேரத்தில் நாளிதழ்களின் முதல் பக்கத்தை மட்டும் நிரப்புவதற்காகவா?

`விவசாயிகளில் யார் யாருக்கு 6,000 ரூபாய்?' - புஸ்வாணமாகிறதா பட்ஜெட் அறிவிப்பு?
`விவசாயிகளில் யார் யாருக்கு 6,000 ரூபாய்?' - புஸ்வாணமாகிறதா பட்ஜெட் அறிவிப்பு?

த்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு ஒன்றைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் அண்மையில் வாட்ஸ்அப்பில் வந்த இந்தக் கதையை படித்துவிடுங்கள். ``இன்னும் நான்கு மாதம்தான் உங்களுக்கு ஆயுள்" என டாக்டர் கூறியவுடன், இறப்பதற்கு முன்பாக, பிள்ளைகளிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக, சொத்துகளை பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம் எனக் குடும்ப வக்கீலை வரவழைத்தார், அந்தப் பெரியவர். ``மூத்தவனுக்கு 10 ஏக்கர் நெல் வயல், 10 லட்சம் ரூபாய் பணம், இரண்டாவது மகனுக்கு 5 கடைகள் கொண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், 5 ஏக்கர் அன்னாசி தோட்டம், கடைசிப் பையனுக்கு வீட்டோடு சேர்ந்துள்ள 5 ஏக்கர் தென்னந்தோப்பும் அதைச் சுற்றியுள்ள இடமும்" என உயில் எழுதச் சொன்னார்.

உயில் எழுதச் சொல்லிவிட்டுப் பெரியவர் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் மூழ்க, வக்கீல் அவரிடம் ``என்னங்க பெரியவரே என்ன யோசிக்கறிங்க, எதுவும் விட்டுப் போச்சா உயில்ல சேர்க்கணுமா" என்று கேட்டார். அதற்குப் பெரியவர் ``இல்ல வக்கீல் சார், உயில் எழுதியாச்சு. இன்னும் 4 மாசத்துல நான் சாகிறதுக்குள்ள இந்தச் சொத்தல்லாம் எப்படிச் சேர்க்கப் போறோம்'னு நெனச்சாத்தான் கவலையா இருக்குன்னார். இந்தக் கதை எதற்கு என்று உங்கள் மனதில் தோன்றலாம். 

கதையில் குறிப்பிட்ட பெரியவருக்கும் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பியூஷ் கோயலுக்கும், பிரதமர் மோடிக்கும் சம்பந்தம் இருக்கிறது. 

குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் ரொக்கப் பணம் அளிப்பதாகக் கடந்த இடைக்கால பட்ஜெட்டில் பியூஷ்கோயல் அறிவித்திருந்தார். இது ஏற்கெனவே விவசாயிகள் மத்தியில் விமர்சிக்கப்பட்டிருந்தது. `விவசாயிகளுக்கு உரிய விலை கொடுங்கள், பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்' என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை விவசாயிகள் வைத்து வருகிறார்கள்.  

இந்நிலையில் மத்திய அரசின் புதிய திட்டத்திற்குப் பயனடைய தகுதியுடையோருக்கான விதிமுறைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் `பிரதான் மந்திரி கிசான் சம்மான்' என்ற பெயரில் இந்தத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது அறிவிக்கப்பட்டது. இதற்காக 75,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பின் படி, ரூபாய் 75,000 கோடி செலவில் குறு விவசாயிகளுக்கு, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இது, 3 தவணைகளாக, 2,000 வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.

புதிய திட்டத்திற்குப் பயனடைய தகுதியுடையோருக்கான விதிமுறைப் பட்டியலில் முதல் தவணைத் தொகை 01.12.2018 முதல் 31.03.2019 வரையான காலகட்டத்திற்குள் செலுத்தப்படும். இதன்படி நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இத்தொகை வழங்கப்படும். இதைப் பெறுவதற்கு நிறைய வரையறைகள் இருக்கின்றன. கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் கொண்ட குடும்பமாகவும், 2 ஹெக்டேருக்குள்ளும் விவசாயிக்கு நிலம் இருக்க வேண்டும். மேலும், 2 ஹெக்டேருக்குள் நிலம் வைத்திருக்கும் பலருக்கும்கூட பணம் மறுக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதியம் பெறுபவர்கள், மியூச்சுவல் பண்ட், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இத்திட்டத்தில் பணம் வழங்கப்படாது. மத்திய, மாநில அமைச்சர்கள் முதல் மாநிலத்தில் இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வரை யாருக்கும் இப்பணம் கிடையாது. மத்திய, மாநில அமைச்சகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், கடந்த ஆண்டில் வருமான வரி கட்டியவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்கர்கள், கட்டடக் கலைஞர்கள் எனப் பூர்வீகமாக இயங்கி வரும் நபர்கள் உள்ளிட்ட பலருக்கும் இத்திட்டத்தில் பணம் வழங்கப்பட மாட்டாது. மேற்கண்டப் பிரிவுகளில் பிரிவு 4 மற்றும் குரூப் டி ஊழியர்கள் இதில் அடங்கமாட்டார்கள். 

இதேபோல விவசாயிகள் பலருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மட்டுமே பணம் வழங்கப்படும். 5 குடும்பங்கள் கொண்ட கூட்டுக் குடும்பங்களில் மொத்தமாக 10 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், `அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பலனாளிகளின் பட்டியலை விரைவாகத் தயாரித்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அரசின் விதிகளைப் பார்த்தால் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே வழங்கப்படும். அதன்படி இந்தியாவிலேயே குறைவான விவசாயிகளுக்கு மட்டும்தான் கிடைக்கும். இப்போதுதான் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்னும் ஒரு மாதம்தான் முழுமையாக இருக்கிறது. இனி மாநில முதல்வரிடமிருந்து அதிகாரிகளுக்கு உத்தரவு சென்று, பட்டியல் தயாரித்து அதை மத்திய அரசிடம் சமர்ப்பித்து, அதன்பின்னர் மத்திய அரசு விவசாயிகளுக்குப் பணம் செலுத்தும். இது வரும் ஒரு மாதத்தில் எப்படி சாத்தியம் என்றுதான் தெரியவில்லை. இப்போது மேலே கதையில் சொன்ன பெரியவருக்கும், இனி ஒரு மாதத்தில் பணம் செலுத்தப் போகும் மோடிக்கும், நிச்சயமாகக் கவலை இருக்கத்தானே செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

``இது கடந்த ஆண்டு தெலங்கானா மாநில முதல்வரான சந்திரசேகர ராவ் அறிவித்த திட்டத்தின் பிரதிதான். ஆனால் அவர் 2 ஏக்கருக்கு 8,000 ரூபாய் நிதி உதவியாக அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றி இருந்தார். அதுதான் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. இப்போது மத்திய அரசு அறிவித்திருப்பது 2 ஹெக்டேருக்கு (5 ஏக்கர்) 6,000 ரூபாய்தான்.

விவசாயிகளுக்கான ஐந்தாண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டத்தால் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. வழக்கம்போல இது விவசாயிகளுக்கு ஆசையைக் காட்டி ஏமாற்றும் திட்டம்தான். பட்ஜெட்டில் கவனம் ஈர்த்த இந்தத் திட்டம் புஸ்வாணம் ஆகத்தான் போகிறது" என்கிறார்கள் விவசாயிகள். 

இப்படிப் பெரும்பாலான விவசாயிகள் வெளியேறும்படி ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, அதை மொத்த விவசாயிகளுக்குமான திட்டமாக முன்னிறுத்துவதெல்லாம் எதற்காக? வெறுமனே, தேர்தல் நேரத்தில் நாளிதழ்களின் முதல் பக்கத்தை மட்டும் நிரப்புவதற்காகவா?