Published:Updated:

`இது பூர்வீக உயிரினங்களின் எமன்!' - அச்சுறுத்தும் சீனாவின் `One Belt One Road' திட்டம்!

2013-ம் ஆண்டு சீன அதிபர் இந்தத் திட்டம் இருபத்தோறாம் நூற்றாண்டின் பட்டுப்பாதையாகச் செயல்படும் என்று கூறினார். அந்தப் பட்டுப்பாதை பல கோடி ரூபாய் லாபம் தந்தது. இந்தப் பட்டுப்பாதை பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டங்களை நல்கப்போகிறது.

`இது பூர்வீக உயிரினங்களின் எமன்!' - அச்சுறுத்தும் சீனாவின் `One Belt One Road' திட்டம்!
`இது பூர்வீக உயிரினங்களின் எமன்!' - அச்சுறுத்தும் சீனாவின் `One Belt One Road' திட்டம்!

ல டிரில்லியன் டாலர்களைச் செலவு செய்து தனது லட்சியப் பாதையான ஒரு சூழல்-ஒரு பாதை (One belt-One Road) திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது சீனா. அந்தத் திட்டம் அரசியல்ரீதியாகப் பல எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. அது ஒருபுறமிருக்க அதனால் ஏதேனும் சூழலியல் சிக்கல்கள் ஏற்படுமா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு சூழல்-ஒரு பாதை திட்டத்தால் அம்மாதிரியான சூழலியல் சிக்கல்கள் அப்பகுதியில் ஏற்படுமா?

ஏற்படும். இதனால் அயல்நாட்டு உயிரினங்கள் அதிகமாகி அவையே ஆதிக்க உயிரினங்களாகவும் மாறிவிடும். அது அந்தப் பகுதியில் காலங்காலமாகப் பெருகிச் செழித்துள்ள பல்லுயிர்ச்சூழலைப் பாதிக்கும். 

2013-ம் ஆண்டு சீன அதிபர் இந்தத் திட்டம் இருபத்தோறாம் நூற்றாண்டின் பட்டுப்பாதையாகச் செயல்படும் என்று கூறினார். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மூன்றையும் இணைக்கும் நில, கடல்வழிப் பாதைகளை இந்தத் திட்டம் உருவாக்கும். அதன்வழியே வர்த்தகமும் எளிமையாகும். மேலும் இதுபோன்ற ஆறு வர்த்தக இணைப்புப் பாதைகளை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது சீனா. அதில் சாலைகள், ரயில்வேக்கள், விமான வழித்தடங்கள், வாயுக் குழாய்கள் அனைத்தும் அடக்கம். இவையனைத்தும் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் சீனாவோடு தொடர்பு ஏற்படுத்தும். இதேசமயம், தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவோடு சீனாவை இணைக்கவும் கடல்வழித் தடங்களை அமைக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காகவே கடல் துறைமுகங்களை நிறுவிக்கொண்டிருக்கிறது சீனா.

ஒரு சூழல் ஒரு பாதை உட்பட அவர்கள் போட்டிருக்கும் திட்டங்கள் அனைத்தும் பெரியளவிலான கட்டுமானத் திட்டங்களையும் உள்ளடக்கியது. இதனால், பெரியளவிலான சூழலியல் சீர்கேடுகளையும் இது உள்ளடக்கியுள்ளது. மிக முக்கியமாக ஆதிக்க உயிரினங்களின் படையெடுப்பு இதன்மூலம் அதிகமாகும். அது அந்தப் பகுதிகளின் உயிரினங்களின் இருப்பைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கும். இதையுணர்ந்த சூழலியல் ஆர்வலர்களும் கானுயிர் ஆய்வாளர்களும் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

Photo Courtesy: Lommes

சீனாவின் ஒரு சூழல் ஒரு பாதை திட்ட வரைபடம்

சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யிமிங் லீ ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதன்மூலம் எவ்வளவு ஆதிக்க உயிரினங்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வாய்ப்புள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றார். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், சுமார் 800 அயல் உயிரினங்கள் இடப்பெயர்வு மூலம் ஆதிக்க உயிரினங்களாக மாறும் வாய்ப்புண்டு. அவற்றில் 98 நீர்நில வாழ்விகள், 177 ஊர்வனங்கள், 391 பறவைகள், 150 பாலூட்டிகள் அடக்கம். சுமார் 121 நாடுகளைச் சுற்றியிருக்கும் இவற்றை இந்தத் திட்டத்தின் மூலம் சீனாவே வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து இயல்வாழ் உயிரினங்களை அழிக்கப் பார்க்கிறது. இது சீனாவை மட்டும் பாதிக்காது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இணைக்கப்படும் சாலைகள் ஊடுருவும் அனைத்திலும் இதே நிலைதான் ஏற்படும். இந்த 800 வகை உயிரினங்களும் ஆதிக்க உயிரினங்களாக மாற இந்தத் திட்டம் இரண்டு சூழல்களை உருவாக்கும். ஒன்று அறிமுகப்படுத்துதல், புதிதாகப் பார்க்கும் உயிரினத்தைக் கொண்டுவந்து நம் பகுதிகளில் வாழ வைப்போம் என்ற ஆர்வத்தில் அடிப்படை அறிவியல்கூட இல்லாமல் சாதாரண வர்த்தகர்களால் கொண்டு வரப்படுபவை. இப்படியாக அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆதிக்க உயிரினங்கள் அதிகமாகலாம். இரண்டாவது, வாழ்விடம் கிடைப்பதும் இடம்பெயர வாய்ப்புகளை நாமே ஏற்படுத்திக்கொடுப்பதும். எல்லைகளை இணைத்து இடம்பெயர ஏதுவான வகையில் நாமே தடைகளை உடைத்துக் கொடுக்கும்போது இது நிகழ்கிறது. இதனால், ஒரே வகையான வாழிடமுள்ள வேறு பகுதிகளில் வாழும் வெவ்வேறு வகை உயிரினங்கள் இடம்பெயரும். அதனால், அவை இடம்பெயரும் இடத்தில் வாழும் உயிரினங்களுக்கு அழிவையும் வாழ்விடச் சிக்கலையும் பரிசளிக்கும். இறுதியில் ஆதிக்க உயிரினங்களாக மாறும்.

லீ மற்றும் அவரது குழு ஆதிக்க உயிரினங்கள் அதிகமாகக் கூடிய 14 முக்கியப் பகுதிகளைப் பரிந்துரைத்துள்ளார். அதில் ஆறுக்கும் மேற்பட்டவை பொருளாதார ரீதியில் சீனா முக்கியமாகக் கருதும் வழித்தடங்கள். அவை வட ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளன. இந்தோனேசியாவில் மட்டுமே 300 ஆதிக்க உயிரினங்களுக்கு ஏற்ற வாழிடங்கள் அமைந்துள்ளன. அது மட்டும் நிகழ்ந்துவிட்டால் இந்தோனேசியாவின் பூர்வீக உயிரினங்களும் அவற்றின் வாழிடங்களும் ஆபத்துக்கு ஆளாகும். வட அமெரிக்காவில் வாழும் அமெரிக்க புல்ஃபிராக் (American Bullfrog) மத்திய அமெரிக்காவில் அறிமுகமானபோது அது உருவாக்கிய சிட்ரிட் என்ற பூஞ்சைத் தொற்றுநோய் மத்திய அமெரிக்காவின் தவளை இனங்களைப் பெரியளவிலான பாதிக்கு ஆளாக்கியது. இந்தோனேசியாவைப் போலவே மலேசியாவும் 200 ஆதிக்க உயிரினங்களை ஈர்க்கக்கூடிய வாழ்விடங்களைக் கொண்டுள்ளது.

``ஒரு சூழல் ஒரு பாதை திட்டம் பல நாடுகளில் அயல் உயிரினங்கள் பிளேக் நோயைப் போல் பரவ வழிவகுக்கும். இது வெறும் ஆரம்பம்தான்" என்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர் வில்லியம் லாரன்ஸ். மேலும், ``பல வகையான பூச்சி இனங்களையும், நோய்க்கிருமிகளையும்கூட அதிகமாக அயல்நாடுகளில் பரவ வைக்கும். அது பல நோய்களுக்கும் பயிர் நாசங்களுக்கும்கூட வழிவகுக்கலாம்" என்றும் லீ செய்த ஆய்வுகுறித்துக் கூறுகிறார் வில்லியம் லாரன்ஸ். படைப்புழுக்கள் இந்தியாவின்மீது படையெடுத்ததால் தற்போது பருத்தி விவசாயிகள் சந்தித்துவரும் பிரச்னைகளே இதற்கு ஆகச்சிறந்த உதாரணம். இந்த மாதிரியான சிற்றுயிர்கள் ஆதிக்க உயிரினங்களாக மாறும்போது அவை விவசாயம், கால்நடைகள், சூழலியல் சமநிலை போன்றவற்றில் பேருயிர்களைவிட ஆபத்தான பிரச்னைகளை உண்டாக்கும். ஆகவே, இந்தச் சிக்கல்கள் இத்திட்டத்தில் பங்குகொள்ளும் நாடுகளுக்குப் பல மறைமுக நஷ்டங்களையும் செலவுகளையும் வைக்கக் காத்திருக்கின்றன. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அவ்வளவு ஏன், சில சமயங்களில் அதிகமாக ஊடுறுவிவிடும் ஆதிக்க உயிரினங்கள் பில்லியன் டாலர்கள் அளவுக்குத் தேசத்தின் விவசாய உற்பத்தியில் நஷ்டத்தை ஏற்படுத்திச் சென்றுவிடுகின்றன. இது மாதிரியான நடைமுறைச் சூழலியல் சிக்கல்களையும், அதனால் விளையும் நஷ்டங்களையும்கூடக் கணக்கில் கொண்டு சீன அரசும் அதன் அதிபரும் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.

எந்த நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பதும் ஆதிக்க உயிரினங்கள் ஊடுருவாமல் கவனிப்பதும் சாத்தியமற்றது. ஊடுருவி விட்டால் அவற்றை அழிப்பதோ கட்டுப்படுத்துவதோ அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்தத் திட்டத்துக்கு உட்பட்ட பல செயற்பாடுகளும் கட்டுமானங்களும் பல ஆயிரம் கோடிகள் செலவில் ஆகப்போகின்றன. அவை அவர்களோடு பங்குபெறும் நாடுகளுக்கு லாபத்தைக் கொடுப்பதாக இருக்கவேண்டும். மேலும் பல ஆயிரம் கோடிகள் நஷ்டத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அப்படியாக இதைத் திட்டமிடுவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை நாம் ஆய்வுசெய்ய வேண்டும். சொல்லப்போனால், இந்தத் திட்டத்தில் கூறப்பட்டிருக்கும் வழிப்பாதை பல இடங்களில் ரத்துசெய்யப்பட வேண்டும். அப்போதுதான் இப்படியான ஆதிக்க உயிரினங்களும் அவற்றின் சிக்கல்களும் ஏற்படாமல் இருக்கும்.

ஆசிய-பசிபிக் பகுதியிலும், ஆப்பிரிக்கப் பகுதியில் பல பின்தங்கிய நாடுகள் உள்ளன. அவற்றுக்கு லாபத்தைத் தருவிக்கும் அவர்களின் வாழ்வியலைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் திட்டங்கள்தான் வரவேற்கப்பட வேண்டுமேயொழிய அவற்றைச் சீர்குலைக்கும் திட்டங்களை ஆதரிக்கக்கூடாது. இந்தத் திட்டம் அவர்களின் வாழ்வியலை வாழ்விடத்தைச் சீரழித்து நஷ்டத்தை ஏற்படுத்திவிடவே வாய்ப்புகள் அதிகம்.

``எந்தத் திட்டமும் மக்களுக்கானதாக அவர்களின் வாழ்விடச் சூழலியலின் மேம்பாட்டுக்கானதாக அமையவேண்டும். அப்படி அமையவில்லையா? அது எவ்வளவு உயர்ந்த திட்டமாக இருந்தாலும் அதை நிராகரிக்க வேண்டியது ஓர் அரசின் கடமை. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், மக்களின் மேம்பாட்டுக்கு அது பயன்படவே இல்லையெனில் அது ஒரு திட்டமே கிடையாது."