Published:Updated:

சாலையோரத்தில் 2,000 மரக்கன்றுகள்... சாத்தியப்படுத்திய நாமக்கல் இளைஞர்கள்!

``மேம்பாலம் கட்டுவதற்காக நாங்கள் நட்ட 60 மரக்கன்றுகளை அதிகாரிகள் எடுத்துட்டாங்க. அது, எங்களுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு".

சாலையோரத்தில் 2,000 மரக்கன்றுகள்... சாத்தியப்படுத்திய நாமக்கல் இளைஞர்கள்!
சாலையோரத்தில் 2,000 மரக்கன்றுகள்... சாத்தியப்படுத்திய நாமக்கல் இளைஞர்கள்!

நாளுக்கு நாள் புவி வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து விடுபட வேண்டுமானால், இயற்கையை அழிக்காமல் பாதுகாத்தல் வேண்டும்; அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா-வின் ஆண்டறிக்கை கூறுகிறது. மெள்ள மெள்ள இயற்கை வளம் சிதைந்துகொண்டிருக்கும் இச்சூழலில், தங்களால் முடிந்த மரக்கன்றுகளைத் தினமும் சாலையோரம் நட்டு வருகின்றனர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த இரண்டு பேர்!

தினமும் காலையில் இரண்டு இளைஞர்கள் சாலையோரம் மரக்கன்றை நட்டு வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அவர்களைச் சந்தித்தோம். ``ஒரு நிமிசம் வெயிட் பண்ணுங்க ப்ரோ" என்று சொல்லிவிட்டுச் சாலையோரம் ஒரு மரக்கன்றை நட்டுவிட்டு வந்தார்கள். ``இதுவரைக்கும் 2,000 மரக்கன்றுகளை நட்டிருக்கோம்" என்று தம்ஸ்அப்பைக் காட்டியவர்கள் தொடர்ந்து பேசினர்.

``ஒருநாள் ஒரு புத்தகத்தைப் படிச்சுட்டு இருக்கும்போது, நாம ஏன் மரக்கன்றுகளை வளர்க்கக் கூடாதுனு ஒரு கேள்வி என் மனசுக்குள் வந்துச்சு. உடனே நாங்க ஒரு நாலு பேரு சேர்ந்து மரக்கன்றுகளை நடவேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கினோம். ஆனா, அது அந்த அளவுக்குச் சரியா வரலைனுதான் சொல்லணும். காரணம், எங்களுக்குள்ள சரியான புரிதல் இல்லை. இப்படியே ஒருத்தர் வருவதும், இன்னொருத்தர் போறதுமாக இருந்துச்சு. ஒரு கட்டத்துல இதுக்குமேல பண்ண முடியாதுனு தோணுச்சு. அதனால, அதைக் கைவிட்டுட்டேன். கொஞ்ச நாள் போன பிறகு, பக்கத்துல இங்க இருக்குற சரவணன் அண்ணன் நிறைய மரம் நட்டுட்டு வர்றார்னு கேள்விப்பட்டேன். அப்புறம் அவர சந்திச்சு பேசி, இப்போ நாங்க ரெண்டுபேரும் மட்டும் சேர்ந்து இதுவரைக்கும் 2,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம்"னு கோபாலகிருஷ்ணன் முடிக்க, சரவணன் தொடர்ந்தார்.

``முதல்ல நாங்க இரவு 10 மணியிலிருந்து 2 மணி வரைக்கும் மரக்கன்றுகள் நடுவோம். மரக்கன்றுகள் நடுவதிலிருந்து, அதுக்கு தண்ணீர் ஊத்தறது, வேலி போடுறவரைக்கும் ரெண்டு பெரும் டூ வீலர்ல போய்த்தான் செய்வோம். எங்க ரெண்டு பேருக்கும் சில நாள் டைமிங் செட்டாகாதனால காலையில 6 மணிக்குப் போயிட்டு 8 மணிவரைக்கும் தினமும் ரெண்டு மணி நேரம் மரக்கன்றுகள் நடுவோம். தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் எங்களுக்கு வேண்டியபோது தண்ணீர், ஜே.சி.பி. இயந்திரம்னு அப்பப்போ சில உதவிகள் செஞ்சுட்டு வர்றாங்க. அவங்களுக்கு இந்த நேரத்துல நன்றியைத் தெரிவிச்சுக்குறோம். இதை வெற்றிகரமா செய்யுறதுக்கு நாங்க மட்டும் காரணமில்லே. எங்க குடும்பமும்தான். அவங்க மட்டும் சப்போர்ட் பண்ணலைன்னா, நாங்க இந்த அளவுக்கு செஞ்சிருக்க முடியாது" என்று சரவணன் முடித்தார்.

சக்தி மசாலா நிறுவனத்திலிருந்து ரெண்டு முறை கோல்டு மெடலும், ரோட்டரி கிளப் மற்றும் பிற அமைப்புகளின் பாராட்டும் பெற்றிருக்கும் இவர்கள், சொந்தமாக நர்சரி கார்டனை நடத்திவருகிறார்கள். மேலும், இலவசமாகப் பல மரக்கன்றுகளையும் மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.

``மேம்பாலம் கட்டுவதற்காக நாங்கள் நட்ட 60 மரக்கன்றுகளை அதிகாரிகள் எடுத்துட்டாங்க. அது, எங்களுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. மரம் நடுவதால் என்னென்ன பலன் நமக்குக் கிடைக்கும், வருங்காலத்தில் இயற்கையின் முக்கியத்துவம் எப்படி இருக்கும்னு பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விளக்கி, அவர்களையும் இதில் ஊக்கப்படுத்த இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இருக்குற இளைஞர்களை ஒன்றிணைத்து பெரிய விஷயமா செய்யணும்கிறதுதான் எங்களோட கனவு. குளம், ஏரி, குட்டை என இயற்கை வளங்கள் இருக்குற பகுதிகளை இயற்கையாய் வச்சுக்கிட்டாலே போதும். பூமி சொர்க்கமாக மாறும்" என்றனர், இருவரும் சற்றே குரலை உயர்த்தி.

ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டு, பசுமையைப் புகுத்திவரும் இளைஞர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.