Published:Updated:

மின்சாரமின்றி 500 லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கலாம்... கலக்கும் மத்தியப்பிரதேச இளைஞர்!

"என் பத்தாம் வகுப்பை நான் வழக்கம் போல கடந்திருந்தால் இதைப்பற்றி சிந்தித்திருக்கவே மாட்டேன். பத்தாம் வகுப்பு தோற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்."

மின்சாரமின்றி 500 லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கலாம்... கலக்கும் மத்தியப்பிரதேச இளைஞர்!
மின்சாரமின்றி 500 லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கலாம்... கலக்கும் மத்தியப்பிரதேச இளைஞர்!

வ்வுலகத்திற்கு தண்ணீர் மிக அவசியம். அதுவும் வறட்சியான இடங்களில் தண்ணீர் மிகுந்த ஆடம்பரப் பொருளாக கருதப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வுக் காண கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மின்சாரம் இல்லாமல் தண்ணீர் சுத்திகரிக்கும் வழியைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினார் மத்தியப்பிரதேசம், ரத்லம் எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர செளத்ரி (Jitendra Choudhary) எனும் இளைஞர். 

செளத்ரியின் தந்தை ஒரு குறு விவசாயி. செளத்ரி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தார். அதனால் தனது படிப்பின் இரண்டாவது அத்தியாயத்தை ராஜஸ்தானில் இருந்து தொடங்கினார். 12-ம் வகுப்பு முடித்ததும், ஐ.ஐ.டி தேர்வில் ஆர்வம் காட்டினார். ஆனால் ஐ.ஐ.டி இவருக்கு இடந்தரவில்லை. இதனால் மீண்டும் மத்தியப்பிரதேசத்திற்கே வந்து மஹாகல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (Mahakal Institute of Technology) கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பை முடித்து 2013-ம் ஆண்டு மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர் கண்ட வறட்சியின் காட்சிகள் அவரது மனதை கசக்கிப் பிழிந்தன. அப்போதுதான் கற்ற கல்வியை வைத்து புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தார். ஐந்து வருட முயற்சியின் விளைவாக 'சுத்தம்' என்ற பெயரிட்ட கருவியை அவர் கண்டுபிடித்தார். அக்கருவியின் மூலம் மின்சாரம் இல்லாமல் ஆறு மாதங்களில் 90,000 லிட்டர் தண்ணீரை வடிகட்டிச் சுத்தப்படுத்த முடிந்தது.

இதுபற்றி ஜிதேந்திர செளத்ரி பேசும்போது, "என் பத்தாம் வகுப்பை நான் வழக்கம் போல கடந்திருந்தால் இதைப்பற்றிச் சிந்தித்திருக்கவே மாட்டேன். நான் பத்தாம் வகுப்பு தோற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாமைத்தான் முன்னோடியாக நினைத்தேன். அவரும் அரசுப் பள்ளியில் படித்து முன்னேறியவர் என்பதால்தான். நான் ராஜஸ்தான் குடிபெயரும் வரை விஞ்ஞானத்தின் மீது எனக்கு அவ்வளவாக நாட்டம் வரவில்லை. ராஜஸ்தானுக்கு நகர்ந்த பின்னர்தான் அறிவியலின்மீது பற்று வர ஆரம்பித்தது. அதனால் எளிய மக்கள் உபயோகிக்கும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் திரும்பியது. 

எனக்கு அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. கட்டிலில் அமர்ந்து பாட்டிலில் அடைத்த நீரை குடித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு வீட்டில் உள்ளோர் குளித்த நீரை சேகரித்து அதில் துணிகளை துவைக்கவும், மற்ற உபயோகத்துக்காகவும் பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டேன். தண்ணீரை உற்பத்திதானே செய்ய முடியாது, மறு சுழற்சி செய்யலாமே என அப்போது எனக்குத் தோன்றியது. அதனால் ஒரு தீர்வு காண முடிவு செய்தேன். இக்கருவியை உருவாக்கும்போது கிராமப்புறங்களுக்கு உபயோகப்படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துத்தான் உருவாக்கினேன். அதே நேரத்தில் மின்சாரம் இல்லா கிராமங்களுக்கும் இது உபயோகமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்த பின்னர்தான் வடிவமைத்தேன்.

நாட்டிற்கு ஏதாவது உபயோகமாகச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். மற்ற கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களின் அறிவை நாட்டிற்காகச் செலவிடுங்கள். வெளிநாடுகளில் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்கலாம். ஆனால் உங்களைப் பெற்ற நாட்டுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமை அதிகமாக இருக்கிறது. போராட்டத்தை நிறுத்தாதீர்கள். நீங்கள் 100 சதவிகிதம் உழைத்தால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்." என்கிறார்.

மத்தியப்பிரதேச மக்கள் 20 சதவிகிதம் தண்ணீரைக் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மீதம் இருக்கும் 80 சதவிகிதம் தண்ணீரைக் குளித்தல், துவைத்தல் எனப் பிற உபயோகங்களுக்குப் பயன்படுத்தி வந்தனர். அதனால் தனது 'சுத்தம்' இயந்திரம் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என செளத்ரி நம்பினார். இதன் மொத்த உற்பத்தி செலவு 7 ஆயிரம் ரூபாய் ஆனது. வருடம் ஒருமுறை பராமரிப்பதற்கு 500 முதல் 700 ரூபாய் வரை செலவாகும். மின்சாரம் தேவைப்படாது என்பதால், மின் இணைப்பு இல்லாத இடங்களிலும் இதனைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இக்கருவியின் ஆரம்பக் கட்டத்திலேயே அழுக்கு நீரில் உள்ள கார்பன் பிரித்தெடுக்கப்படுகிறது. இயந்திரம் சீராக செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அசுத்த நீர் தனியாகவும், தூய்மையான நீர் தனியாகவும் பிரிந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. இக்கருவிக்காக செளத்ரி காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். மத்தியப் பிரதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் இவருக்கு இளம் அறிவியல் அறிஞர் விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இருந்தும் ஜிதேந்திர செளத்ரி ஆராய்ச்சியியல் மாணவராக மஹாகல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தொடர்ந்து வருகிறார். அங்கே கல்லூரி நிர்வாகம் இவருக்கு, இயந்திரங்களைத் தயாரிப்பதற்கான நிதியை வழங்குகிறது. அவருடைய விடுதி வளாகத்திலேயே நான்கு 'சுத்தம்' யூனிட்களை நிறுவி இருக்கிறார். அது சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், வறட்சியான கிராமங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் குறைவான செலவில் தயாரித்துக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். காப்புரிமை கிடைத்தவுடன் கருவிகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார், செளத்ரி.

'200 ரூபாய்க்குப் பண்ணையில் கூலி வேலை பார்த்த ஒரு சிறுவன், இளம் விஞ்ஞானி விருது வாங்கியிருப்பதை நம்ப முடியவில்லை' என வியக்கிறார் ஜிதேந்திர செளத்ரி.