Published:Updated:

50 ஆண்டுகளில் வங்காளப் புலிகள் அழிந்துவிடும் - அதிர்ச்சி தரும் ஆய்வு

50 ஆண்டுகளில் வங்காளப் புலிகள் அழிந்துவிடும் - அதிர்ச்சி தரும் ஆய்வு
50 ஆண்டுகளில் வங்காளப் புலிகள் அழிந்துவிடும் - அதிர்ச்சி தரும் ஆய்வு

இந்தியாவின் தேசிய விலங்கான புலியின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் எனப் புலிகளின் நலம் பராமரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனாலும் புலிகளின் இறப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது. இவற்றை எல்லாம் விட தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வுகள் முற்றிலும் அதிர்ச்சி தருவதாக உள்ளன. இன்னும் 50 ஆண்டுகளில் சுந்தரவனக் காடுகளில் காணப்படும் வங்காளப் புலியானது முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம்(James Cook University) மற்றும் வங்கதேசத்தின் இண்டிபெண்டன்ட் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 

50 ஆண்டுகளுக்குள் வங்காளப் புலிகள்  அழிவதற்கு வேட்டையாடுதல் மற்றும் பல காரணங்களைவிடக் காலநிலை மாற்றமே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கணினி உருவகப்படுத்துதல் மூலமாக எதிர்காலத்தில் தாழ்வான பகுதியான சுந்தரவனக் காடுகளின் நிலையும் அவற்றில் வசிக்கும் வங்காளப் புலிகள்  அவற்றின் இரைகள் குறத்து ஆய்வு செய்தபோது இந்த முடிவுகள் கிடைத்துள்ளன. காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்வதால் இந்த நிலை ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சுந்தரவனக் காடுகள் இந்தியா, வங்கதேசம் என இரு நாடுகளில் 10,000 சதுர கிலோமீட்டருக்கும் மேல் பரவியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சதுப்புநிலக்காடுகள் இவை. தற்போது 4000 வங்காளப் புலிகள்  மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இவை மிகவும் குறைவான எண்ணிக்கையாகும் என்கிறார் ஆய்வாளர் லாரன்ஸ். மேலும் சுந்தரவனக் காடுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட உயிரினங்களும் 50 ஆண்டுகளில் அபாயம் இருக்கிறது என்கிறார் இன்டிபெண்டன்ட் பல்கலைக்கழகத்தைச்  (Independent University) சேர்ந்த பேராசிரியர் ஷரீஃப் முகூல் (Sharif Mukul). 

காலநிலை மாற்றம் மட்டுமல்ல தொழில்துறை வளர்ச்சிகள், நகரமயமாதல், மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் என சுந்தரவனக் காடுகளுக்கும் வங்காளப் புலிகளுக்கும் இன்னும் அதிகமான அபாயங்கள் இருக்கின்றன.