Published:Updated:

பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதம்... இனியேனும் திருந்துமா தமிழக அரசு?

தமிழக பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்திருக்கிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். எதற்காக?

பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதம்... இனியேனும் திருந்துமா தமிழக அரசு?
பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதம்... இனியேனும் திருந்துமா தமிழக அரசு?

சென்னை கூவம் ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, ஆற்றைச் சீரமைப்பது குறித்து, 2013ல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின், தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தது. இந்த விசாரணையின் போது, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கழிவுகள் கலப்பதைத் தடுப்பது, தூர்வாருவது எனக் கோரிக்கைகளுடன் ஜவகர்லால் சண்முகம், எட்வின் வில்சன் மற்றும் முத்துமீனா ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது.

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை மறுசீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, சென்னை நதிகள் மறுசீரமைப்பு கழகம் போன்ற அமைப்புகள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருந்தன என்பதை அறிக்கைகளாகத் தாக்கல் செய்யுமாறு பல்வேறு உத்தரவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்டன. 

ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மறுசீரமைப்பு செய்தல் போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்ட காரணத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் பணிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வேண்டும் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்ய 1,646 கோடி ரூபாய்  திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும் 604 கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. அவற்றில் 60 துணைத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றின் செயல்பாடுகளும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை.  2016ம் ஆண்டு மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் யுனிவர்சிட்டி தாய் மூகாம்பிகை கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளும் 13 தொழிற்சாலைகளும் கூவம் நதியில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் விடுவது கண்டறியப்பட்டது. ஆனால் இவர்கள் மீது அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து தீர்ப்பாயம் தனது கண்டனத்தைத் தெரிவித்து இருந்தது. மேலும் ஐந்து கல்வி நிறுவனங்களுக்கும் 40 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தது பசுமை தீர்ப்பாயம்.

2017ம் ஆண்டு இந்த நீர் நிலைகளை மறுசீரமைப்பு செய்ய 150 கோடி மதிப்புள்ள திட்டங்கள் செயல்பாட்டின் கீழ் உள்ளதாகவும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும் எனவும் தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் குறித்த அறிக்கை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி பக்கிங்காம் கால்வாயில் 26,300 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் அதில் வெறும் 408 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டதாகவும் பொதுப்பணித்துறை தெரிவித்திருந்தது. மேலும்  கூவம் ஆற்றில் மொத்தம் 13,592 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதாகவும் அதில் 8,962 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் இன்னும் 4,630 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது அடையாற்றில் மொத்தம் 10,347 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதாகவும் அதில் 4161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் இன்னும் 6,186 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைகளின் மீது திருப்தி அடையாத தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால் அதற்கும் இடைக்கால தடையை பொதுப்பணித்துறை பெற்றுவிட்டது. மேலும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது.  இந்நிலையில் தென் மண்டல அமர்வில் நீதிபதிகள் இல்லாத காரணத்தால் வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் நாகின் நந்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னையின் நீர்நிலைப் பகுதிகளை சீரமைப்பது, தூர்வாருவது குறித்த செயல் திட்ட அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு வழக்கைப் பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கடந்த 13 ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விவரம்

தமிழக அரசு இந்த மூன்று நீர்நிலைகளையும் பாதுகாத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் தோல்வி அடைந்துள்ளதாகவும் அரசின் அலட்சியப் போக்கு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் பாதிப்பை உண்டாக்கி விட்டதாகவும் இந்த பாதிப்பை ஏற்படுத்தியதற்காக அபராதமாக 100 கோடியை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பொதுப்பணித்துறை ஒப்படைக்க வேண்டும் எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தலைமைச் செயலாளர் தலைமையில் கூடும் ஆலோசனைக் கூட்டம் இனி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அடுத்த மூன்று மாதங்கள் நடைபெற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூர், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், நீரி அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொண்ட குழு இந்த மறு சீரமைப்பு பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகிய பணிகளை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளது. மூன்று மாதத்திற்குள் இந்தக் குழு மறுசீரமைப்பு பணிகள் குறித்த அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை உடன் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி தலைமைச் செயலாளர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மூன்று பேர் தொடுத்திருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வாதாடி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகத்திடம் பேசிய போது, " இந்த வழக்கில் இது முக்கியமான தீர்ப்பாகும். 100 கோடி அபராதம் என்பது மிகப்பெரிய விஷயம். சென்னையின் நீர்நிலைகளை இனிமேலாவது கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ற வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அரசு மட்டுமில்லாமல் மக்களும் விழிப்புஉணர்வோடு செயல்பட வேண்டும் " என்றார்.

தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஜனகராஜ் கூறிய போது, " 100 கோடி என்பது ஒரு எச்சரிக்கைதான். இதற்கு எதிராக அவர்கள் மேல் முறையீடு செய்யலாம். ஆனால் இதற்கு பிறகும் நீர் நிலைகள் குறித்து கவனம் மேற்கொள்ளாவிடில் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீர்நிலைகள் இல்லாவிட்டாலும் 2015 சென்னை வெள்ளம் என்பது மிகப்பெரிய பேரிடராக முடிந்திருக்கும். நீர்நிலைகளை மீட்டெடுக்கிறோம் எனப் பெயரில் ஆற்றின் இருபுறமும் சுவர்களைக் கட்டுகிறார்கள். இவை ஆற்றின் சூழலியல் இயல்பையே மாற்றக்கூடியது. மேலும் சரிவர தூர்வாரும் பணிகளும் நடைபெறுவதில்லை. ஆற்றில் கலக்கும் கழிவுகளையும் கண்காணிப்பதில்லை. இதையெல்லாம் சரி செய்யாமல் அவற்றை மீட்க முடியாது. அதே போன்று பெரிய பெரிய ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்" என்றார்.

நீர் நிலைகளின் அருகில்தான் மனித நாகரிகம் வளர்ந்தது என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால் நாகரிகம் வளர வளர நீர் நிலைகளை மறந்துவிட்டோம். சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இந்தியா முழுக்கவே நீர் நிலைகளின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. அவற்றையெல்லாம் சரி செய்யத் திட்டங்களும் பணமும் மட்டும் போதாது. பொதுமக்களின் விழிப்புஉணர்வும் ஆதரவும்தான் தேவை. அவற்றை மாசுபடுத்தாமல் இருக்க முயல்வோம்.