Published:Updated:

800 கால்பந்து மைதான அளவுக்கான காடுகளை அழிக்கும் சட்டிஸ்கர்... எதற்காக?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
800 கால்பந்து மைதான அளவுக்கான காடுகளை அழிக்கும் சட்டிஸ்கர்... எதற்காக?
800 கால்பந்து மைதான அளவுக்கான காடுகளை அழிக்கும் சட்டிஸ்கர்... எதற்காக?

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ஒரு நிறுவனமோ திட்டமோ வரும் பொழுது சட்டத்தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் எளிதாக உள்நுழையும் தன்மை இந்தியா முழுவதுமே இருக்கிறது. தமிழ்நாட்டின் நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் எனப் பல உதாரணங்களை இதற்குக் கூறலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன்மதி (Banmati) நடுத்தர வயதுடைய பெண்மணி. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருக்கும் பிரதான பிரச்னைதான் பன்மதியின் கிராமமான பர்சாவிலும் இருக்கிறது. அது தண்ணீர் பற்றாக்குறைதான். தொடர்ச்சியாக மூன்று நாள்கள்வரை சரியான குடிநீர் கிடைக்காமல் மொத்த கிராமமும் அவதிப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை அங்கே அடிக்கடி நிகழும் என்கிறார்கள் மிகச் சாதாரணமாக. பர்சா கிராமம் (Parsa Village) முழுவதுக்கும் ஒரே ஓர் அடிகுழாய் மட்டுமே இருக்கிறது. அதுவும் அடிக்கடி பழுதடைந்துவிடும். கிராமம் மொத்தத்திற்கும் போடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் மூலம் பெறப்படும் நிலத்தடி நீரோ பழுப்பு நிறமாகவும், சேறு நிறைந்த கலங்கல் நீராகவுமே இருக்கிறது. குடிநீர் இல்லாமல் மொத்த கிராமமும் இன்னும் பல அவதிகளைச் சந்தித்து வருகிறது. ஆனால் இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களைப் போன்று வறட்சியான நிலப்பரப்பைக் கொண்டிருக்கவில்லை பர்சா கிராமம். சட்டிஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள கிராமம்தான் பர்சா. காட்டிற்கு நடுவே தண்ணீர் பஞ்சமா என எழும் கேள்வியின் பின்னேதான் ஒரு தீவிர பிரச்னை ஒளிந்திருக்கிறது.

பர்சா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள பார்சா ஈஸ்ட் & கென்டா பாசன் (Parsa East & Kenta Basen (PEKB) block) நிலக்கரிச் சுரங்கம்தான் இந்த அவலநிலைக்குக் காரணம். ஜுன் 22, 2011 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் காடுகள் ஆலோசனைக் குழு (Forest Advisory Committee (FAC)) சட்டிஸ்கரின் தெற்கு சுர்குஜா (Surguja) வனப்பகுதியான ஹஸ்டியோ அரன்ட் (Hasdeo Arand) நிலக்கரி தொகுதிகளில் பார்சா ஈஸ்ட் & கென்டா பாசன் நிலக்கரிச் சுரங்கம் அமையக்கூடாது என அறிக்கை அளித்தது. ஆனால் அடுத்த நாளே அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் (Jairam Ramesh) அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார். அதற்கு அமைச்சகம் நிலக்கரிச் சுரங்கமானது அடர்ந்த காடுகளுக்குள் அமையாமல் காடுகளின் எல்லைப் பகுதிகளில்தான் அமையவுள்ளது என நியாயம் சொன்னது. மேலும் இதனால் அந்தப் பகுதியின் பல்லுயிர்த்தன்மை பாதிக்கப்படாது எனவும் தெரிவித்தது. 

பல்வேறு சட்டப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்ட போதிலும் 2013-ம் ஆண்டு அதானி குழுமத்தின் (Adani Enterprises)  நிறுவனமான அதானி சுரங்கத்தொழில் நிறுவனம் (Adani mining company) நிலக்கரியை வெட்டியெடுக்க ஆரம்பித்தது. இந்த நிலக்கரிச் சுரங்கமானது ராஜஸ்தான் மாநில மின்சார வாரியத்திற்குச் சொந்தமானது. நிலக்கரியை வெட்டியெடுத்து சுரங்கத்தை கவனிக்கும் வேலை அதானி நிறுவனத்துடையது. இதற்காக அதானி நிறுவனம் 3000 கோடி ரூபாயில் மூலதனம் செய்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த நிலக்கரித் தொகுதியில் 450 மில்லியன் டன் நிலக்கரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடத்திற்கு 15 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. உள்ளூர் செயற்பாட்டாளர்கள் இதைவிட அதிகமான அளவு நிலக்கரி இருக்கலாம் எனக் கூறுகின்றனர். நிலக்கரிச் சுரங்கம் செயல்பட ஆரம்பித்தபோதே சுற்றுச்சூழலில் பின் விளைவுகளைச் சந்திக்க ஆரம்பித்தது.

Photo: Chitrangada Choudhary

மூன்றே வருடங்களில் நிலக்கரிச் சுரங்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குறைய ஆரம்பித்தது அல்லது மாசடைய  ஆரம்பித்தது. பர்சா கிராமத்து மக்கள் குடிநீருக்கும் இன்னும் பலவற்றுக்கும் அதானி நிறுவனத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதானி நிறுவனம் மூன்று ஆழ்துளைக் கிணறுகளையும் அவற்றிலிருந்து கிராம மக்களுக்காகக் குழாய்களையும் அமைத்துக் கொடுத்தது. அதன்பின் கிராம மக்கள் முழுமையாக நிலக்கரி சுரங்க நிறுவனத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டனர். அதானி நிறுவனம் அமைத்திருந்த குழாய்கள் எல்லாம் அவசரகதியில் அமைக்கப்பட்டவை. பழுதானால் அவற்றைச் சரி செய்ய யாருமில்லை. அப்படியே வரும் நிலத்தடி நீரும் முன்னே சொன்னதுபோல குடிக்க உகந்தவையாக இல்லை. இதை எதிர்த்து அந்த கிராம மக்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. நாளையே இவர்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வேறு எங்காவது தூக்கி எறியப்படலாம். அந்த கவலையும் அவர்களிடையே இருக்கிறது. அதற்குள் குடிக்க சுத்தமான குடிநீராவது கிடைக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. 

ஒரு நிலக்கரி சுரங்கம் வந்ததற்கே இந்தப் பாதிப்பு என்றால் அதன் அருகே தரா (Tara coal blocks) எனும் இன்னொரு நிலக்கரி சுரங்கமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவை போதாதென்று தற்போது மூன்றாவதாக பர்சா ஒபன்காஸ்ட் நிலக்கரி சுரங்கத்திற்கு (Parsa opencast coal mine) ஆரம்பக்கட்டமாக அனுமதி வாங்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் காடுகள் ஆலோசனைக் குழு முதற்கட்ட அனுமதியான ஆயத்த வன அனுமதியை (Preliminary Forest Clearance) அளித்துள்ளது. ஏற்கனவே இரண்டு நிலக்கரிச் சுரங்கங்கள் காடுகளுக்கிடையில் அமைந்திருப்பதற்கே எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த அனுமதி இன்னும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. சுர்குஜா மற்றும் சுரஜ்பூர் (Surajpur) என இரு மாவட்டங்களில் அமையவிருக்கும் பர்சா நிலக்கரி சுரங்கம் ராஜஸ்தான் மாநில மின்சார நிறுவனத்திற்குச் சொந்தமானது. மேலும் அதில் நிலக்கரி வெட்டியெடுக்கும் வேலையை ராஜஸ்தான் காலியர்ஸ் லிமிடெட் (Rajasthan Collieries Limited) நிறுவனத்திற்கு அளித்துள்ளனர். இந்த நிறுவனமும் அதானி குழுமத்தின் துணை நிறுவனமாகும். 

மத்திய இந்தியாவில் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவில் தொடர்ச்சியாக அடர்ந்த காடுகளாக பரவியுள்ள ஹஸ்டியோ அரண்ட் காட்டின் 841.538 ஹெக்டேர் அளவிற்கு இந்த நிலக்கரி சுரங்கம் அமையவிருக்கிறது. இந்தப் பரப்பளவு ஏறக்குறையக் 800 கால்பந்தாட்ட மைதானங்களுக்குச் சமமானது. இவ்வளவு பெரிய பரப்பளவில் அமைந்துள்ள அடர் காடுகளை சுரங்கத்திற்காக அழிக்கப்படும். கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஹஸ்டியோ அரண்ட் மிகவும் வளமான காட்டைக் கொண்டிருப்பதால் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லாத பகுதியாக அறிவித்திருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே இந்த அறிவிப்பைத் தளர்த்திக் கொண்டு சுரங்கம் அமைக்க அனுமதி கொடுத்தது. ஹாஸ்டியோ அரண்ட் காடுகளில் 30 நிலக்கரித் தொகுதிகள் உள்ளன. 

Photo:  Lalan Singh and Kranti Kumar Rawat

ஜனவரி 15, 2019 அன்று கூடிய காடுகள் ஆலோசனைக் குழுவின் குறிப்புகளின்படி, "கொள்கையின் அடிப்படையில் வன அனுமதியை வன ஆலோசனைக் குழு அளிக்கிறது. சட்டிஸ்கர் மாநில நிர்வாகம் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் வடகிழக்குப் பகுதியில் அடர்ந்த காடுகள் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. வனத்துறை பொது இயக்குநர் (Director General of forests) சித்தாந்தா தாஸ் (Siddhanta Das) கூறுகையில், "ஆரம்பகட்ட அனுமதி வழங்கியுள்ளோம். எங்களது ஆய்வின் அடிப்படையில் அந்தப் பகுதியில் சிறிய பகுதியே அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால்தான் மாநில நிர்வாகத்தை ஆராயச் சொல்கிறோம். மேலும் சட்டிஸ்கர் அரசு இந்த திட்டத்தை நீண்டகாலமாகப் பின்தொடர்ந்து வருகிறது என்றார்.

சட்டிஸ்கர் பச்சோ அந்தோலன்(Chhattisgarh Bachao Andolan) அமைப்பைச் சார்ந்த அலோக் சுக்லா (Alok Shukla) கூறுகையில் , "காடுகள் அனைத்தும் அழிக்கப்படும் எனவே இதனைத் தடுக்க வேண்டும். மேலும் இது வெறுமனே அடர்ந்த காடுகள் மட்டுமல்ல முக்கியமான யானை வழித்தடமும் கூட. ஏற்கெனவே மனித - யானை பிரச்னைகள் நிகழ்ந்து வருகின்றன. அதில் இதுவும் சேர்ந்துகொள்ளும். மேலும் முக்கியமான நீராதாரங்களும் சுரங்கத்தால் பாதிக்கப்படும். காடுகளைச் சார்ந்திருக்கும் பழங்குடியின மக்களும் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பொதுத்தேர்தலுக்குள் சுரங்கம் அமைக்கும் வேலைகளை முடுக்கிவிட வேண்டும் என வேலை செய்கிறார்கள் என்றார்.

ராஜஸ்தான் மாநில மின்சார வாரியத்தின் இயக்குநர் எஸ் எஸ் மீனா, இரண்டாம் கட்ட வன அனுமதி பெற வேண்டியுள்ளது. அதன் பிறகே வேலைகள் ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார். CPR-ன் (Centre for Policy Research) சட்ட ஆராய்ச்சியாளரான காஞ்சி கோலி (Kanchi Kohli), பல்வேறு சட்ட அனுமதிகள் இல்லாமல் கொள்கை அடிப்படையிலான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வுகள், ஹஸ்டியோ அரண்ட்டின் பல்லுயிர்த் தன்மை மதிப்பீடு ஆகியவை வேண்டும் எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. மேலும் சுரங்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கையையும் அவர்கள் அளித்தாக வேண்டும். இவை எதுவுமில்லாமல் எளிதாக அனுமதி வாங்குவது தவறு" என்றார்.

சட்டிஸ்கரின் ஹஸ்டியோ அரண்ட் காடுகளின் தெற்குப் பகுதியில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்வதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 29 வகையான மீன்கள், 14 வகையான ஊர்வன வகைகள், 111 வகையான பறவைகள், 34 வகையான பாலூட்டிகள், 51 வகையான மூலிகைத் தாவரங்கள்  எனப் பல்வகை உரிகளை நிரம்பியுள்ளன. மேலும் நிலக்கரி சுரங்கம் ஹஸ்டியோ எனும் ஆற்றையும் அழிக்கவல்லது என்கிறார்கள். ஏற்கனவே காட்டிற்குள் 75 கிலோமீட்டருக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெளியே எடுத்துச் செல்ல இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில்பாதையும் காட்டின் சூழலை அழிக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ஒரு நிறுவனமோ திட்டமோ வரும் பொழுது சட்டத்தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் எளிதாக உள்நுழையும் தன்மை இந்தியா முழுவதுமே இருக்கிறது. தமிழ்நாட்டின் நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் எனப் பல உதாரணங்களை இதற்குக் கூறலாம். இவற்றையெல்லாம் சரிபார்த்தாலே சுற்றுச்சூழல் இன்னும் சிறப்பாக இருக்கும். அதற்கான வேலைகளை நம் நீதி அமைப்புகள் செய்ய வேண்டும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு