Published:Updated:

உப்புப் படுகைகளும், எரிமலைப் படிமங்களும்... நம்புங்க, இதுவும் பாலைவனம்தான்! #Atacama

பூமியில் உள்ள பழைமையான பாலைவனமாக அட்டகாமா பாலைவனம் கருதப்படுகிறது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாலைவனம் உருவாகியிருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உப்புப் படுகைகளும், எரிமலைப் படிமங்களும்... நம்புங்க, இதுவும் பாலைவனம்தான்! #Atacama
உப்புப் படுகைகளும், எரிமலைப் படிமங்களும்... நம்புங்க, இதுவும் பாலைவனம்தான்! #Atacama

லகிலேயே மிக வறண்ட நிலப்பகுதி என்றவுடன் நினைவுக்கு வருவது பாலைவனங்கள்தாம். அதிலும் பாலைவனங்கள் என்றாலே உக்கிரமான வெயிலும் பரந்த மணல் பரப்பும் மட்டுமே கண்முன் நிழலாடும். ஆனால், அன்டார்டிகா பனிப்பிரதேசமும்கூட பாலைவனம்தான். குறைந்த அளவு மழைப்பொழிவும் பெரும்பாலான உயிரினங்கள் வாழ்வதற்குத் தகுந்த சூழலும் இல்லாத நிலப்பரப்பு எல்லாமே பாலைவனங்கள்தாம். அப்படி ஒரு பாலைவனம்தான் தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள அட்டகாமா பாலைவனம் (Atacama Desert). உலகிலேயே மிக வறண்ட நிலப்பகுதி இந்த அட்டகாமா பாலைவனம்தான், சஹாரா பாலைவனம் இல்லை.

துருவப்பகுதியாக அல்லாமல் அமைந்திருக்கும் மிக வறண்ட பகுதி அட்டகாமா பாலைவனம். இதைவிட அன்டார்டிகா மிகவும் வறண்ட  பிரதேசமாகும். மற்ற பாலைவனங்களைப் போல இல்லாமல் அட்டகாமா பாலைவனத்திற்கெனப் பல தனித்தன்மைகள் இருக்கின்றன. 

தென் அமெரிக்காவின் இரு பிரதான நாடுகளான பெரு மற்றும் சிலி ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கிடையே இந்த அட்டகாமா பாலைவனம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒருபுறம் ஆண்டிஸ் மலைத்தொடரும் மறுபுறமும் பசிபிக் கடற்கரையோரமுமாக சுமார் 1,000 கிலோமீட்டர் நீளமும் சுமார் 1,28,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது.

முன்பே சொன்னது போல அட்டகாமா பாலைவனத்தில் மணல் குவியலைப் பார்க்க முடியாது. இங்கே மணலை விடவும் உப்புப் படுகைகளும், எரிமலை குழம்புப் படிமங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. இடையிடையே உப்பு ஓடைகளும் ஆண்டிஸிலிருக்கும் எரிமலையிலிருந்து சீறிப் பாய்ந்து வழிந்தோடிக் காய்ந்து போயிருக்கும் எரிக்கற்குழம்பு படிமங்களும் நிறைந்திருக்கின்றன. பூமியில் காணப்படும் பாலைவன அமைப்புகளிலேயே சற்று வித்தியாசமான தன்மையைக் கொண்டிருப்பதால் நாசா செவ்வாய் கோளில் இருக்கும் நில அமைப்பைக்கு இதை அடிப்படையாகக் கொண்டு இங்கே பரிசோதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும் பல விஞ்ஞானிகளும் ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். 

பூமியில் உள்ள பழைமையான பாலைவனமாக அட்டகாமா பாலைவனம் கருதப்படுகிறது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாலைவனம் உருவாகியிருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பனி மூடப்பட்ட ஆண்டிஸ் மலைகளின் நிழலில் வைத்தது போன்றதோர் இடத்தில் அட்டகாமா பாலைவனம் அமைந்துள்ளது. ஆண்டிஸ் மலையானது கிழக்கிலிருந்து வரும் மழையைத் தடுக்கிறது. மேற்கில் குளிர்ந்த நீரின் உறைவிடமாக இருக்கும் பசிபிக் பெருங்கடல் நீர் ஆவியாகி மேகங்களுக்குச் செல்வதை தடுக்கிறது. அதனால் இதன் வழியாகவும் மழைப்பொழிவு கிடைக்காது. அட்டகாமாவின் மழைப்பொழிவு ஆண்டுக்கு 15 மில்லி மீட்டர் மட்டுமே. பரந்து விரிந்த பாலைவனத்தின் சில பகுதிகளில் 400 ஆண்டுகள் வரை இன்னும் மழைப்பொழிவு ஏற்படாமல் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மழைப்பொழிவு இல்லையென்றால் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என சஹாராவை மனதில் வைத்து யோசித்தால் அதுவும் இல்லை. உலகின் மற்ற பாலைவனங்களில் சராசரி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கும் மேல் இருக்கும். ஆனால் அட்டகாமா பாலைவனத்தில் சராசரி வெப்பநிலையே 18 டிகிரி செல்சியஸ்தான். எப்போதும் காய்ந்து போயிருக்கும் இந்தப் பாலைவனத்தில் 2011- ம் ஆண்டு ஒரு பெரும் பனிமழை பெய்தது. இதனால் சுமார் 31 அங்குல அளவுக்குப் பனிக்கட்டிகள் இந்தப் பாலைவனத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. 

உலகிலேயே மிகவும் உலர்ந்த வறண்ட நிலப்பகுதியிலும் சில நுண்ணுயிரிகளும் உயிரினங்களும் வாழ்கின்றன. இவற்றின் உயிரியல் அமைப்பை ஆராய்வதன் மூலம் செவ்வாய் போன்ற வறண்ட கோள்களில் உயிரினங்களை வாழ வைப்பதற்கான முயற்சிகளை எடுக்க முடியும் என ஆய்வுகள் மேற்கொள்கின்றனர். அட்டகாமா நிலவியல் அமைப்பு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல் அட்டகாமா பாலைவனத்தில் 700 கி.மீ., நீண்ட 20 கி.மீ., அகண்ட பகுதியானது நைட்ரேட் தாதுகள் நிறைந்த பகுதியாக உள்ளது. உரத்திலிருந்து வெடி மருந்துகள் வரை நைட்ரேட்டின் பயன்பாடு இருக்கிறது. 1930 களுக்கு முன்பே அட்டகாமாவில் நைட்ரேட் சுரங்கங்கள் மூலம் நைட்ரேட் தாது வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. 

அட்டகாமா பாலைவனத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உள்ளன. அவற்றை விட இங்கு வானியல் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களே அதிகம் வருகின்றனர். ஆண்டுக்கு 330 நாள்களுக்கு வானத்தில் மேகங்களே இருப்பதில்லை. எனவே சூரிய குடும்பம் உட்பட பல்வேறு வானியல் ஆராய்ச்சிகளுக்கும் இந்த இடம் மிகவும் வசதியானதாகப் பார்க்கப்படுகிறது. 5,050 மீட்டர் உயரத்தில் உள்ள அட்டகாம பாலைவன பீடபூமிதான் பூமியிலேயே வானியல் ஆராய்ச்சிக்கான சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் சிலி நாடு ஆகியவற்றிலுள்ள விஞ்ஞான அமைப்புகளின் சர்வதேச ஒத்துழைப்புடன் (International collaboration of scientific organizations from Europe, North America, East Asia and the Republic of Chile) அட்டகாமா பாலைவன பீடபூமியில் 66 டெலஸ்கோப் அடங்கிய நெட்வொர்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வானியல் தரவுகள் பெறப்பட்டுள்ளன. 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அட்டகாமா பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்டிஸ் மலைகளில் அதிகப்படியாகப் பெய்த மழைப்பொழிவால் வெள்ளம் அட்டகாமா பாலைவனம் வரை வந்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 3,700 பேர் நான்கு நாள்களாகக் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் இருந்துள்ளனர். 3 பேர் இறந்துள்ளனர். சிலியின் வடக்குப் பகுதியில் இப்படி என்றால் தெற்குப் பகுதியில் மிக அதிகமான வெப்பநிலை நிலவுகிறது. அதீத வெப்பத்தினால் 9500 ஹெக்டேர் அளவிற்கான காடுகள் தீப்பிடித்துள்ளன. சிலி அரசு இந்தப் பகுதிகளை அவசர மண்டலமாக அறிவித்துள்ளது. இதே போன்று 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி, அட்டகாமா பாலைவனத்தின் தென்பகுதியில் பெய்த கன மழையால் சேறும் சகதியும் கலந்த மழை நீரால், சிலி, கோப்பியாகோ, டியெர்ரா அமாரில்லா எனப் பல நாடுகளும் பாதிக்கப்பட்டன. இதில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.

சில ஆண்டுகளாகவே சிலியில் இது போன்ற அதீத காலநிலையானது நிகழ்ந்து வருகிறது. காலநிலை மாற்றம்தான் இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் பார்க் வில்லியம்ஸ் (Park Williams) குறிப்பிடுகையில் காலநிலை மாற்றம் குறித்தும் அதற்கேற்றவாறு எப்படி மாறுவது என்பது குறித்தும் சிலி அரசு ஆலோசனை செய்ய வேண்டும். மேலும் தனிப்பட்ட காலநிலை மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைக்கு இட்டுச் சென்றுவிடும் என்கிறார். தரவுகளின்படி கடந்த பத்து ஆண்டுகளாகவே மத்திய சிலியில் வெப்பநிலை உயர்ந்தும் மழை அளவு குறைந்துகொண்டும் வந்துள்ளன. இதை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. இவ்வாறு காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கத் தவறினால் இயற்கையாகவே அமைந்துள்ள பூமியின் உலர் நிலப்பகுதியானது அதன் தன்மையிலிருந்து மாறிவிட வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்லாமல் சிலி என்கிற நாடும் அதன் அருகில் இருக்கும் நாடுகளும் பல்வேறு இயற்கை பேரிடர்களைச் சந்திக்க நேரலாம்.