Published:Updated:

``எனக்கு மனக்கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த 100 வயசு வேப்பமரம்தான் ஆறுதல்!" - சிலாகிக்கும் பட்டதாரி

``எனக்கு மனக்கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த 100 வயசு வேப்பமரம்தான் ஆறுதல்!" - சிலாகிக்கும் பட்டதாரி
``எனக்கு மனக்கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த 100 வயசு வேப்பமரம்தான் ஆறுதல்!" - சிலாகிக்கும் பட்டதாரி

``எனக்கு மனக்கஷ்டம் வரும்போதோ, ரெகுலர் வேலைகள் தர்ற அயற்சி மனதை வாட்டும்போதோ, எங்க தோட்டத்தில் இருக்கிற இந்த வேப்ப மரத்தின் மடிதான் ஆறுதல் தரும் விசயமா இருக்கு. என் தோழன் போன்ற இந்த வேப்பமரத்திற்கு 100 ஐத் தாண்டிய வயசு!" என்று பெருமிதமாகக் குறிப்பிடுகிறார் கரூர் மாவட்டம், மணல்மேட்டைச் சேர்ந்த ராஜகணபதி.

மரங்களும், மண்ணும்தான் இயற்கையைக் கட்டமைக்கின்றன. இந்த பூமியில் மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு, மரங்கள்தாம் இயற்கை சமநிலையைச் செம்மைப்படுத்துகின்றன. ஆனால், இந்த அடிப்படை பேருண்மையை மறந்துவிட்டு, நம்மில் பலரும் மரங்களையும், காடுகளையும் வகைதொகையில்லாமல் அழித்துக்கொண்டிருக்கிறோம். அதனால், இயற்கைப் பேரிடர்களுக்கு நாம்தான் ஆளாகிறோம். இப்படிப்பட்ட சூழலில், வறட்சி மிகுந்த பகுதியான கிராமத்தில் தனது தோட்டத்தில் உள்ள 100 வயதைத் தாண்டிய வேப்பமரத்தை எதற்காகவும் அழிக்க நினைக்காமல், அதை நண்பனாக பாவித்து, அதோடு அளவலாவி வருகிறார் ராஜகணபதி. அந்த வேப்பமர நிழலில் நின்று, அதன் கிளைகள் அசைத்துத் தருகிற ஏகாந்தம் தழுவும் காற்றை சுவாசித்தப்படி, இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் பேசினோம். ``எனக்கு இப்போ வயசு 35 சார். எங்க தாத்தா காலத்துக்கு முன்னால இருந்து இந்த வேப்பமரம் இங்க இருக்கு. எங்க தாத்தாவும் சரி, எங்கப்பாவும் சரி எதற்காகவும் இந்த மரத்தை வெட்ட நினைக்கலை. இந்த மரம் உள்ள கொல்லையைக் கூட, `வேப்பமரக் கொல்லை'னுதான் பேர் வச்சு அழைப்போம். எனக்கு சின்ன வயசிலிருந்தே இந்த வேப்பமரம்தான் நண்பன். நெருங்கிய நண்பன்னுகூட சொல்லலாம். என் தாய்மடிக்கு அப்புறம், எனக்கு நிம்மதி தர்ற விசயமா இந்த வேப்பமரத்தடிதான் இருக்கு. எனக்கு ஏதாவது மனக்கஷ்டம் ஏற்பட்டா, இங்க வந்துருவேன். எந்நேரமும் தனது பிரமாண்ட நிழலை தரையில் கொட்டி, அதுக்குள்ள இந்த மரம் என்னை வாரி  அணைச்சுக்கும். எவ்வளவு வெம்மையிலும் அந்த நிழல் குளுமையா இருக்கும். சிலுசிலுன்னு காத்தை வேற என் உடம்புல வீச வச்சு, கண்சொக்க வச்சுரும். அதுவரை என்னோட மனசை அழுத்தும் அப்பேர்ப்பட்ட கஷ்டமும் பஞ்சா பறந்து போயிரும். நான் எம்.சி.ஏ படிச்சுட்டு, கோயம்புத்தூர்ல வேலையில இருந்தேன். 2010லேயே இருபதாயிரம் சம்பளம் வாங்கினேன்.

அந்த வேலை எனக்கு லயிக்கவே இல்லை. காரணம், வேலை தந்த அதீத அழுத்தம்தான். அங்க இருந்த ஒவ்வொரு நாளும் மன அழுத்தம் அதிகமானுச்சு. அப்போ, எங்க வீட்டைவிட இந்த வேப்பமரம்தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வரும். `சே, இந்நேரம் வீட்டுல இருந்தா, வேப்பமரத்து மடியில் போய் அக்கடான்னு சாய்ஞ்சுருக்கலாம்ல'னு தோணும். அப்புறம், `இதுவல்ல நம்ம வாழ்க்கை. கிராமத்துலதான் இருக்கு'ன்னு 2012 ல் வேலையை விட்டுட்டு, ஊருக்கு வந்துட்டேன். பூர்வீக நிலத்துல இப்போ விவசாயம் பார்க்குறேன். என்ன கஷ்டம் வந்தாலும், இப்போதும் நான் ஆறுதல் தேடிப் பார்க்க நினைக்குற முதல் ஜீவன் இந்த வேப்ப மரமாதான் இருக்கும். இந்த மரத்தை நான் எதற்காகவும் வெட்டமாட்டேன். இந்த மரத்திற்கு100 வயதைத் தாண்டி வயசு. என் பையன், பேரப்பிள்ளைங்க, கொள்ளுப்பேரங்க, எள்ளுப்பேரங்கன்னு பல தலைமுறைகளை இந்த வேப்பமரம் இருந்து பார்க்கணும். எனக்கு தர்ற ஆறுதலை இந்த மரம் அவங்களுக்கும் தரணும்னு நினைக்கிறேன்" என்றார் முத்தாய்ப்பாக!.

நமக்கும் அந்தப் பிரமாண்ட வேப்ப மரம் மெல்லிய காற்றை அள்ளி இறைத்தது. ஆஹா....ஆனந்தம்....!.