Published:Updated:

பிளாஸ்டிக்கில் இருந்து ஆயில்! - பள்ளபட்டி விஞ்ஞானியோடு பேரூராட்சி ஒப்பந்தம்

பிளாஸ்டிக்கில் இருந்து ஆயில்! - பள்ளபட்டி விஞ்ஞானியோடு பேரூராட்சி ஒப்பந்தம்
பிளாஸ்டிக்கில் இருந்து ஆயில்! - பள்ளபட்டி விஞ்ஞானியோடு பேரூராட்சி ஒப்பந்தம்

 பள்ளப்பட்டி பேரூராட்சியில், டன் கணக்கில் மலைபோல குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து பைரோ ஆயில் எடுக்க, உள்ளூர் விஞ்ஞானி ஒருவரோடு பள்ளபட்டி பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக ஒரு பேரூராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. பிளாஸ்டிக்கால் அவதிப்படும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இன்று உலகை அச்சுறுத்தும்விதமாக நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது பிளாஸ்டிக். இந்த வஸ்தால் மனித குலத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உயிர்களுக்கும் பேராபத்து ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அதன் தீமைகளைக் கணக்கில் கொண்டுதான் தமிழக அரசு இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்குத் தடைபோட்டது. ஆனால், அது சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவது ஒருபக்கம் என்றால், 'தடை ஓகே. ஏற்கெனவே மலை மலையாகக் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற இந்த அரசு என்ன திட்டம் வச்சிருக்கு' என்று சூழலியலாளர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

இந்நிலையில்தான், தமிழகத்திலேயே முதன்முறையாக, கரூர் மாவட்டம் பள்ளபட்டி பேரூராட்சியில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக்கை வாங்கி, அதில் இருந்து டீசலைவிட தரமான பைரோ ஆயிலைத் தயாரிக்க பள்ளபட்டியைச் சேர்ந்த காஜா மொய்லுதீன், பேரூராட்சி நிர்வாகத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை, பள்ளபட்டி 'பைரோ ஆயில்' காஜா மொய்தீன் அவர்களின் குழுவினர், கிலோ 1.50 பைசாவிற்குக் கொள்முதல் செய்துகொள்ள ஒப்பந்தமிட்டனர்.

இதுபற்றி, 'பைரோ ஆயில்' குழுவின் நிபுணர் காஜா மொய்தீனிடம் பேசியபோது,  

"பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அழிக்கமுடியாத நிலையுள்ளது. இவற்றை அழிக்க சிறந்த வழிமுறை மற்றும் இதிலிருந்து வெளிப்படும் கழிவுகளை எரிபொருளாக மாற்றுவதுபோன்ற ஆய்வில் கடந்த 7 ஆண்டுகளாய் ஈடுபட்டு, அதற்கான செயல்வடிவத்தையும் கொடுத்தாகிவிட்டது. பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த பொருள்களை எரித்து (புகையில்லாமல்), அதிலிருந்து வெளியே எடுக்கப்படும் மூலக்கூறு மற்றும் கரி பொருளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளோம். இதற்குத் தேவை, கழிவாகிப்போய் மக்கமுடியாத நிலையிலுள்ள பிளாஸ்டிக்தான். இவற்றை எங்களது பேரூராட்சியிலேயே விலைகொடுத்து வாங்கி, அதை எரிபொருளாக மாற்றுவதன்மூலம் பிளாஸ்டிக்கின் மூலக்கூறு உருக்கப்பட்டு, திரவநிலையில் வடியும் பொருளைத்தான் நாம் வாகனப்பயன்பாட்டு எரிபொருளாகக் கொண்டுவந்துள்ளோம்.

இதனால், டீசலுக்கு நிகரான, டீசலைவிட சிறந்த பைரோ ஆயிலை அனைத்து கனரக வாகனங்களுக்கும், குறிப்பாக பேரூராட்சியில் இயங்கும் வாகனங்களுக்கே இவற்றை குறைந்த விலைக்குப் பெற்று பயன்படுத்த முடியும். இந்த பிளாஸ்டிக் கழிவு ஒப்பந்தக் கையெழுத்தின்போது, பேரூராட்சியின் நிர்வாக அதிகாரி கிருஷ்ணசாமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சையது இப்ராஹிம், கரூர் மாவட்ட தேசிய காங்கிரஸ் சிறுபான்மைத் தலைவர் ஜக்காரியா, சமூக ஆர்வலர்கள் மற்றும் பைரோ குழுவினர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் ஒரு பேரூராட்சியுடன் ஒப்பந்தமிட்டு, அழிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகளைப் பெறுவது இதுவே முதன்முறையாகும். பள்ளபட்டி பேரூராட்சிக்கு, திறந்தவெளி கழிப்பிடமில்லா பேரூராட்சி என்ற பெருமையுமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எங்க ஒப்பந்தத்தால் பள்ளபட்டி, ஒரு சிறு பிளாஸ்டிக்குகூட இல்லாத பேரூராட்சியாகும்" என்றார் பெருமையாக.