Published:Updated:

கொளுத்தும் வெயில்... மாடித்தோட்டத்தைப் பாதுகாப்பது எப்படி?

இப்படி அமைக்கும் நிழல்வலைக்குடில் நிலைத்து நிற்குமா என்ற சந்தேகம் தோன்றலாம். இதை அமைத்து மூன்று வருடங்களாக மாடித்தோட்டத்தைப் பராமரித்து வருபவர்களும் உண்டு.

கொளுத்தும் வெயில்... மாடித்தோட்டத்தைப் பாதுகாப்பது எப்படி?
கொளுத்தும் வெயில்... மாடித்தோட்டத்தைப் பாதுகாப்பது எப்படி?

மாடித்தோட்டத்திற்கும் கோடைக்காலம் கொஞ்சம் சோகமான காலகட்டம்தான். என்னதான் பக்குவமாக தண்ணீரைக் கொடுத்து கவனமாகப் பாதுகாத்து வந்தாலும், செடிகள் வாடித்தான் போகும். ஆனால் சில வழிமுறைகளை கடைபிடித்தால் மாடித்தோட்டம் கோடையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்புகள் உண்டு. கோடையில் மாடித்தோட்டத்தைப் பட்டுப்போகவிட்டால் மறுபடியும், முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதாகிவிடும். கடும் வெப்பத்தைக் காக்கும் வழிமுறைகளைப் பார்ப்போம். 

தொட்டிகளில் ஒரு பங்கு வளமான செம்மண் அல்லது வண்டல் மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு தொழுஉரம், தேங்காய் நார், மாட்டு எரு ஆகியவற்றை நிரப்ப வேண்டும். அக்கலவையில் தண்ணீர் தெளித்த பின்னர் நாற்றுகளை நடவு செய்யலாம். தினமும் 6 மணி நேரம் சூரிய ஒளி படும் இடமாக இருந்தால், செடிகள் நன்றாக வளரும். அதிக வெயிலாக இருப்பின் மூன்று மணிநேரம் வைக்கலாம். தண்ணீர் ஊற்றும்போது அடிப்புறத்தில் தேங்காய் நார் இருப்பதால் தண்ணீரைத் தக்க வைத்துக்கொள்ளும். அதேபோல மேற்புறத்திலும் கொஞ்சம் தேங்காய் நாரை தூவி விடலாம். வெப்பம் உள்ளே போகாமலும் இருக்கும்.

தண்ணீர் கவனம்!

பொதுவாகச் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கொடுத்தாலே போதுமானது. ஆனால், கோடைக்காலத்தில் இரண்டு வேளையும் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதேபோல பைகளில் இருக்கும் களைகளைக் அகற்றிவிட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதே போல வழிய வழியத் தண்ணீர் ஊற்றுவதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரைத் தெளிக்க உதவும் பூவாளியைப் பயன்படுத்துவது நல்லது. 
மாடித்தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள் உயிரி உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது. மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால் மூலிகைப் பூச்சி விரட்டியைக் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யா தெளிக்கலாம். வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க வேப்ப எண்ணெய் கரைசலை நீரில் கலந்து விடலாம். வெயில் காலங்களில் நீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தற்போது பெரும்பாலான மக்கள் மாடித்தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனமும் அமைத்து வருகின்றனர்.

பைகள் நெருக்கம் வேண்டாம்!

வெயிலினால் ஏற்படும் வெப்பத்தைத் தவிர்க்க நிழல் வலை குடில் அமைக்கலாம். நிழல் வலை குடில் எனும்போது செலவு அதிகமாகும் என யோசிக்கத் தேவையில்லை. நிழல் வலைக் குடில் அமைப்பதற்குப் பல எளிய வழிமுறைகளும் இருக்கின்றன. பொதுவாகத் தொட்டிகள் அமைக்கும்போது எல்லா தொட்டிகளையும் ஒன்றாக அமைக்காமல், எளிதாகப் பராமரிக்கும் செடிகளைத் தனியாகவும், அதிக நேரம் பராமரிக்கும் செடிகளை தனியாகவும் பிரித்தும் அமைக்க வேண்டும். பைகளை அடர்த்தியாக நெருக்கி வைக்கக் கூடாது.
கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், ஏற்கெனவே உள்ள தோட்டத்தைப் பாதுகாப்பதும் அவசியம். காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியைத் தேர்வு செய்யக் கூடாது. 

நிழல் வலைக்குடில் அமைப்பது எப்படி?

மாடித்தோட்டத்தை அமைக்கும்போதே நிழல் வலை குடில் அமைக்கலாம். அல்லது வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தாலும் நிழல் வலை குடில் அமைக்கலாம். நிழல் வலை குடில் அமைக்க அதிக செலவில்லாமல் மிக எளிதான முறையில் அமைக்கலாம். 20 அடி நீளம், 10 அடி அகலம் என்ற அளவில் நிழல் வலை வாங்கிக்கொள்ள வேண்டும். இணையதளத்தில் 1,000 ரூபாயிலிருந்தே கிடைக்கிறது. அதிலும் அடர்த்தி அதிகமாகவும், அடர்த்தி குறைவு எனத் தரத்திற்குத் தகுந்தாற்போல கிடைக்கிறது. நமக்குத் தேவையான வலையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டு முழம் உயரம் கொண்ட சாக்குப் பையில் மணலை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் 20 அடி நீளத்தில் பத்து அடிக்கு ஒரு மணல் மூட்டை என்ற எண்ணிக்கையில் மொத்தம் 8 மணல் மூட்டைகள் அமைக்க வேண்டும். இப்போது அதன்மேல் மரங்களை ஊன்றி சாதாரணமாகப் பந்தல் போல அமைத்துக் கொள்ளலாம். இப்படி அமைக்கும் நிழல் வலை குடில் நிலைத்து நிற்குமா என்ற சந்தேகம் தோன்றலாம். இதை அமைத்து மூன்று வருடங்களாகப் பராமரித்து வருபவர்களும் உண்டு. (மணல் மூட்டைகளுக்குக் கீழே தார்ப்பாலின் ஷீட் இருக்க வேண்டும்) இப்படி அமைத்தால் எந்தச் சேதமும் ஏற்படாமல் மாடியைப் பாதுகாக்கலாம். இதையே இரும்பைக் கொண்டு நிழல் வலை குடில் அமைத்தால் மாடியினைச் சேதப்படுத்த வேண்டியிருக்கும். மரம் வைத்து குடில் அமைத்தால் எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் காப்பாற்றலாம். இப்போது புதிதாக மாடித்தோட்டம் அமைக்க இருப்பவர்களும் இம்முறையைப் பின்பற்றலாம். வெயில் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுபவர்களும் இம்முறையைப் பின்பற்றலாம். வெயில் காலங்களில் மாடித்தோட்டம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகளும் உண்டு. வெயில் காலத்தில் மாடித்தோட்டம் வீட்டின் வெப்பத்தை ஆறு முதல் எட்டு டிகிரி வரை குறைக்கிறது. கட்டடத்தை முழுமையாக வெயிலிலிருந்து காக்கிறது. 

கோடையில் வாரம் முழுவதும் உங்களுக்குக் காய்கறிகள் கிடைக்காவிட்டாலும், வாரம் சில நாள்கள் குறைந்த செலவில் இயற்கையான காய்கறிகளை மாடித்தோட்டம் மூலம் பெற்று வளமுடன் வாழலாம்.