Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா மனு!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா மனு!
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா மனு!

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், கடந்த வருடம் மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாயினர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தது. அதன்படி மே மாதம் 28-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆய்வுசெய்தது. கடந்த டிசம்பர் மாத விசாரணை முடிவில், சில நிபந்தனைகளுடன் மூன்று வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என ஸ்டெர்லைட்டுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

இதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பிறகும், தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல்வேறு தடைகளை ஏற்படுத்திவருகின்றனர் என வேதாந்தா நிர்வாகமும் மேல்முறையீடு செய்தது. இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களும் இணைக்கப்பட்டு, நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. இதன் தீர்ப்பு பிப்ரவரி 18 -ம் தேதி வெளியானது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஆலையைத் திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்துசெய்துள்ளது. ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவுறுத்தியது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்டெர்லைட் வழக்கு தூத்துக்குடியைச் சார்ந்தது என்பதால், மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் கீழ்தான் வரும்.