Published:Updated:

இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

சுற்றுச்சூழல்

இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

சுற்றுச்சூழல்

Published:Updated:
இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

ரலாறு இதுவரை கண்டிராத வேகத்தில் உலகின் இயற்கை வளங்கள், பல்லுயிர்கள் அழிந்துகொண்டு வருகின்றன. நிலம், ஆகாயம், கடல் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பூமியை அழிவின் விளிம்புக்குத் தள்ளியுள்ளன. இயற்கை மீதான இந்தக் கொடூர தொடர் தாக்குதல்களுக்கு, மனிதனின் இரக்கமற்ற சுயநலமிக்கச் செயல்பாடுகள் மட்டுமே காரணம். சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அழிவுநிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது, பூமி.

கடந்த மே 6-ஆம் தேதி, பிரான்சில் யுனெஸ்கோ சார்பில் ஒரு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், பூமியில் வேகமாகப் பல்லுயிர்கள் சுருங்கிவருவதால், ஏற்படக்கூடிய பாதிப்புகள்குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட்டது. ஐ.நா வெளியிட்ட ஆய்வறிக்கையில், மனிதனின் நவீன நாகரிகத்தாலும் அதிகரிக்கும் நுகர்வாலும் இயற்கைக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவற்றால் மனிதன் எதிர்கொள்ளவிருக்கும் பேரழிவு குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. மொத்தம் 50 நாடுகளைச் சேர்ந்த 145 அறிவியலாளர்களின் கூட்டு ஆராய்ச்சி மற்றும் 15,000 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட 130 நாடுகள் அங்கீகரித்துள்ளன. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களின் சாராம்சங்கள் இங்கே… வளர்ச்சி என்ற பெயரில், இயற்கைக்கு மனிதன் ஏற்படுத்திய கொடூரக் காயங்கள் காலப்போக்கில் ஆறியிருந்தாலும், அதன் ஆழமான வடுக்கள் இன்று அவனுடைய வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளன.

இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

லாப நோக்கான வளர்ச்சி என்று பார்த்தால்… கடந்த 20 ஆண்டுகளில் உலகப்பொருளாதாரம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பன்னாட்டு வர்த்தகம் 10 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தக் குறுகியகாலப் பலனுக்காக மனிதன் கொடுத்த விலை மிகவும் அதிகம். அதன் நீண்டகாலப் பாதிப்புகள், மனிதனின் கற்பனைக்கு எட்டாதவை. ஒருபக்கம் மனிதர்கள் பல மடங்கு வேகத்தில் முன்னேற்றமடைந்து வருகிறார்கள். மறுபக்கம் பூமியில் வாழும் மற்ற உயிரினங்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன.

பூமியில் உள்ள 80 லட்சம் தாவரங்கள், பூச்சிகள் மற்றும் விலங்கினங்களில்… 10 லட்சம் உயிரினங்கள் அழியும் தறுவாயில் உள்ளன. பாதுகாக்கத் தவறினால், தற்போதுள்ள பெரும்பாலான உயிரினங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் பூமியிலிருந்து நிரந்தரமாக மறைந்துவிடும்.

உணவு, துணி, எரிசக்தி ஆகியவற்றின் தேவையை ஈடுகட்ட… வெப்பமண்டல நாடுகளில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 1980-ஆம் ஆண்டிலிருந்து 2000-ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில்… கால்நடைப்பண்ணைகள், எண்ணெய்ப் பனைத் தோப்புகளுக்காகத் தென் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியாவில் மட்டும் 100 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

“அனைத்து உயிர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும் இயற்கை, இவ்வளவு வேகமாக அழிந்துவருவது மிகவும் அபாயகரமானது” என்கிறார், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள்மீதான அரசாங்கங்களுக்கு இடையேயான அறிவியல்-கொள்கை மன்றத்தின் (Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services) தலைவர் சர் ராபர்ட் வாட்சன்.

ஆராய்ச்சியின் மூலம், அழியும் நிலையிலிருக்கும் 1.3 மில்லியன் உயிரினங்களை மட்டுமே ஆய்வாளர்களால் பட்டியலிட முடிந்தது. ஆனால், எட்டு மில்லியன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் நிலையிலிருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை பூச்சியினங்கள். ஏற்கனவே, 680 பூச்சியினங்கள் மறைந்துவிட்டன. இயற்கைச்சூழல் சேதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, ஆப்பிரிக்கா கண்டம்தான். பெரும்பாலான பெரிய பாலூட்டிகள் 2100-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக அழிந்துவிடும். அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் முதலில் இருப்பவை அமுர் சிறுத்தை, கறுப்புக் காண்டாமிருகம், ஒராங்குட்டான் குரங்குகள், கொரில்லா குரங்குகள், சுமத்ரா புலி, யானைகள் ஆகியவைதான். “அழிவின் வேகம், கடந்த 10 மில்லியன் ஆண்டுகளாக இருந்ததைவிடப் பலமடங்கு அதிகமாக இருப்பதால், அழிவில் இருக்கும் உயிரினங்களைத் துல்லியமாகக் கணக்கிடுவது மிகவும் கடினம்” என்கிறார், வாட்சன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்... - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

உணவு உற்பத்திக்கு இன்றியமையாத பூச்சியின மகரந்தச் சேர்க்கையாளர்கள், பவளப்பாறைகள், கடல் வாழ் உயிரினங்கள், மருத்துவத் தாவரங்கள், ஆப்பிரிக்கச் சவான்னா, தென் அமெரிக்காவின் மழைக்காடுகள்… என அழியும் பல்லுயிர்களின் பட்டியல் நீள்கிறது.

வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 1.20 கோடி ஹெக்டேர் பரப்பளவுக்குக் காடுகள் 2018-ஆம் ஆண்டில் அழிக்கப்பட்டன. உயிரின வாழ்விடங்களின் பேரழிவுக்குத் தொழில்ரீதியான விவசாயம் முதல் காரணம். நாளுக்கு நாள் பெருகிவரும் எரிபொருள் மற்றும் மரங்களின் தேவை, பல்லுயிர்களின் அழிவைத் துரிதப்படுத்தியுள்ளன.

“நகர விரிவாக்கம், சாலை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளுக்காக… காடுகள், இயற்கை வளங்கள் அழிப்பு, மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், மணல் கொள்ளை, கட்டற்ற மீன்பிடித்தல், கனிமங்களைச் சூறையாடுதல் ஆகியவற்றின் மூலம் இயற்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டோம். மனிதனின் அராஜக நடவடிக்கைகள்தான் பூமியின் அவல நிலைக்கு நேரடிக் காரணம்” எனக் குறிப்பிடுகிறார், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள்மீதான அரசாங்கங்களுக்கு இடையேயான அறிவியல்-கொள்கை மன்றத்தின் உபதலைவர் ஜொசெஃப் செட்டில்.

இந்தோனேசியாவில், எண்ணெய்ப்பனைச் சாகுபடிக்காக மழைக்காடுகள் அழிக்கப் பட்டதால் ஒராங்குட்டான் குரங்குகள், சுமத்ரா புலி, யானைகள் போன்றவை தங்கள் வாழ்விடங்களை இழந்தன. கனிமங்கள், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களின் தேவை கட்டுக்கடங்காமல் போனதால், பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு வேகமாகச் சுருங்கி வருகின்றன.

இந்த நூற்றாண்டில், இயற்கைக்கு எதிராகக் கிளம்பியுள்ள மற்றொரு அச்சுறுத்தல்… புவி வெப்பமடைதல். பல்லுயிர்ப்பெருக்கம், உயிரினங்கள் அழிவு போன்றவற்றை இது துரிதப்படுத்தியுள்ளது. பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், கடல்வாழ் உயிரினங்கள், உள்நாட்டுத் தாவரங்கள் போன்றவை… உயிர்வாழ்வதற்காக, மாறிவரும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

சிறு எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் இடம்பெயர முடியாமல் இருக்கும் பல உயிரினங்கள், தங்களை மாற்றிக்கொள்ளக் கால அவகாசம் கிடைக்காது. அதனால், அவை மீட்டெடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படும். நம் நாட்டில் வங்கப்புலி அழிவின் விளிம்பில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். புவி வெப்பமயமாதலால், தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் வாழும் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் அழிய வாய்ப்புள்ளது. புவி வெப்பமயமாதலால் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியைத் தாவரங்கள் இழந்துவருகின்றன. இக்காலகட்டத்தில், புதுப்புது எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்கள் அல்லது கால்நடைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவில்லையென்றால், பல்லுயிர் இழப்பு 2050-ஆம் ஆண்டுக்குள் பல மடங்கு அதிகரிக்கும். பல்லுயிர் பாதிக்கப்பட்டால் மனித இனம் அழிவைச் சந்திக்கும் என்பதுதான் ஆய்வாளர்களின் முதல் எச்சரிக்கை. ஆனால், ஐ.நாவின் அறிக்கை, எந்த அரசையும் குறை கூறவில்லை. மனிதனின் நம்பிக்கையைக் குலைக்கவில்லை. இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்ற நம்பிக்கையை அளிக்கிறது. விரைந்து செயல்படுங்கள் என்று ஊக்குவிக்கிறது. உள்ளூர் முதல், உலக நாடுகள்வரை உடனடியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால், அழிவைக் கட்டுப்படுத்த முடியும் என்றுதான் சொல்கிறது.

“யார் எக்கேடுகெட்டால் எனக்கென்ன, எப்போதும்போல் என் வேலை தொடரும்… என்று மனிதன் நினைத்தால், எதிர்காலச் சந்ததியினர் வாழப் பூமியில் இடம் இருக்காது. இயற்கை அழியும்போது, அதன் இலக்கு மனிதர்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்” என எச்சரிக்கிறார், அர்ஜென்டினாவைச் சேர்ந்த பேராசிரியர் சான்ட்ரா டியாஸ். இயற்கையின் அளவிடமுடியாத நன்மைகளுக்குப் பதிலாக, நம்மால் எவ்வித மாற்று ஏற்பாடும் செய்ய முடியாது, எதிர்காலத்தில் இயற்கையைச் சீர்செய்ய நமக்கு இருக்கும் ஒருசில வாய்ப்பையும் பல்லுயிர் இழப்பு பறித்துவிடும். பல்லுயிர் பெருக்கம், இயற்கை தன்னைத்தானே காத்துக்கொள்ளும் ஒரு வழியாக இருந்தாலும், உணவுப் பாதுகாப்பு, சுத்தமான குடிநீருக்கும், பல்லுயிர் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தத்தொடர்பு அறுந்தால் ஒட்டவைப்பது சிரமம்.

முன்னர், நாம் 6,190 வகையான பாலூட்டிகளை விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தோம். இவற்றில் 559 வகைப் பாலூட்டிகள் நிரந்தரமாக அழிந்துவிட்டன. இப்போது, மேலும் 1,000 இனங்கள் அழியும் தறுவாயில் இருக்கின்றன.

பவளப்பாறைகள், ஈர நிலங்கள், காட்டுத் தேனீக்கள், பூச்சிகள் இவையில்லாமல் மனிதன் மட்டும் சூழலைப் பாதுகாப்பது என்பது இயலாத காரியம். இதை நாம் உணராதிருப்பதுதான் விநோதம்.

இயற்கையைப் பாதுகாக்கும் தலையாயப் பணி விவசாயிகளின் கைகளில்தான் உள்ளது. குறைந்த நிலப்பரப்பில் அதிகச் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். பணக்கார நாடுகள் உணவை வீணடிப்பதைக் குறைக்க வேண்டும். இயற்கை வளங்களின் பயன்பாட்டில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள், இயற்கை அழிவை முற்றிலும் தடுக்காவிட்டாலும், அழிவின் வேகத்தைக் குறைக்கும்.

சூழல் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டும் இல்லை. மக்களுடையதும் தான். தனிமனிதன்கூட ஆக்கப்பூர்வமாகச் செயல்படலாம். உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம் பல்லுயிர்களைப் பாதுகாக்க முடியும். பயிரிடும் முறை, ஆற்றலை உற்பத்தி செய்யும் வழிமுறைகள், கழிவுகளைக் கையாளும் விதம் ஆகியவற்றில் கொண்டுவரப்போகும் மாற்றங்கள் மட்டுமே நிலைமையைச் சீர்செய்யும்.

நமக்காக இல்லாவிட்டாலும் எதிர்காலச் சந்ததிகள் வாழ்வதற்காவது நாம் இயற்கையைக் காக்க வேண்டும்.

- கே.ராஜு

சிந்திக்க சில தகவல்கள்!

•  ஆண்டுதோறும் 100 மில்லியன் முதல் 300 மில்லியன் வரையிலான மக்கள் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

• 5 லட்சம் உயிரினங்கள் போதிய வாழ்விடங்கள் இல்லாமல் தவிக்கின்றன.

• காட்டுத்தேனீக்கள் அழிவால், 577 பில்லியன் டாலர் மதிப்பிலான பழங்கள், காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

• சதுப்பு நிலக்காடுகள், பவளத்திட்டுகள் போன்றவற்றின் அழிவால், 300 மில்லியன் மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

• 75 சதவிகித நிலம், 40 சதவிகிதக் கடல், 50 சதவிகித ஆறுகள் முழுவதுமாக மாசுபட்டுள்ளன.

• 5 லட்சம் தாவரங்கள், மிருகங்களின் வாழ்விடங்கள் சுருங்கிவிட்டன.

• பூச்சிகள் அழிவால் 235 பில்லியன் முதல் 577 பில்லியன் டாலர் மதிப்பிலான உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

• சராசரியாக ஓர் ஆண்டில் 60 பில்லியன் டன் இயற்கை வளங்களை மனிதர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

 

• ஆண்டுக்குச் சராசரியாக 400 மில்லியன் டன் அளவு கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன.

• அதிக உரப் பயன்பாட்டால், 2.45 லட்சம் சதுர கிலோமீட்டர் விளைநிலங்கள் தரிசாகியுள்ளன.

• நிலச்சீரழிவால், உலகின் 23 சதவிகித சாகுபடிப் பரப்பில் உணவு உற்பத்தி குறைந்துள்ளது

• 2100-ஆம் ஆண்டில் வெப்பம் 4.3 டிகிரி செல்ஸியஸ் அளவு உயரும். அப்போது, ஆறில் ஒரு பங்கு உயிரினங்கள் முழுமையாக அழிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism