Published:Updated:

நடவு முதல் மானியம் வரை... அரசின் விவசாய ஆப்ஸ்!

தற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன.

நடவு முதல் மானியம் வரை... அரசின் விவசாய ஆப்ஸ்!
நடவு முதல் மானியம் வரை... அரசின் விவசாய ஆப்ஸ்!

ற்போது, உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். அதில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை குறித்துப் பார்ப்போம்.

நெல் நிபுணர் அமைப்பு (Paddy Expert System Tamil) 

தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல்லைப் பற்றி அனைத்துத் தகவல்களையும், இந்தச் செயலியின் மூலமாகப் பெற முடியும். இதைக் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் ஹைதராபாத்தில் உள்ள கணினி மேம்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. செல்போனில் இந்தச் செயலி அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றாலும், இதை இணைய இணைப்பு இல்லாமல் கூட பயன்படுத்த முடியும். இந்தச் செயலியில் ஆலோசகர், பயிர் மருத்துவர் மற்றும் தகவலகம் என்ற மூன்று பகுதிகள்  கொடுக்கப்பட்டிருக்கின்றன. பயிர் மருத்துவர் பகுதியில் நெல் பயிரைத் தாக்கும் நோய்களைப் பற்றிய தகவல்கள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும். 

கால்நடை நிபுணர் அமைப்பு (Cattle Expert System Tamil) 

பெரும்பாலான விவசாயிகளின் வருமானத்துக்குப் பக்க பலமாக இருப்பது கால்நடை வளர்ப்புதான். அந்த வகையில், மாடுகள் வளர்ப்பவர்களுக்கும், மாடு வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கும் உதவும் வகையில், ஒரு செயலியை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.  இந்தச் செயலியில் ஆலோசகர், கால்நடை நிபுணர் மற்றும் தகவலகம் என்ற பகுதிகள் கொடுக்கப்பட்டிக்கின்றன. ஆலோசனைப் பகுதியில் பசு மற்றும் எருமை ஆகியவை பற்றிய தகவல்கள் இருக்கின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் கலப்புப் பசு இனங்கள் மற்றும் இந்திய எருமை இனங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

தென்னை வல்லுநர் அமைப்பு (Coconut Expert System Tamil) 

இந்தச் செயலி தென்னை விவசாயிகளுக்கு உதவக்கூடியது. வானிலை அடிப்படையில் தென்னங்கன்றுகளை நடுவதற்கான பருவம் மற்றும் மண் வகைக்கேற்ற ரகங்கள் போன்ற விவரத்தை இச்செயலியின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். நிலத்தைத் தயார் செய்வதிலிருந்து நடவு, களை மேலாண்மை போன்ற தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம். பூச்சி மற்றும் நோய் ஆகியவற்றின் தாக்குதலை எளிதாகக் கண்டறியும் வகையில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அவற்றைக் கொண்டு நம்முடைய பண்ணையில் உள்ள பிரச்னையைத் தெரிந்துகொண்டு தீர்வுகளை அறியலாம். தென்னை விவசாயத்துக்குத் தேவையான கருவிகள் குறித்த விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அறுவடை பின்சார் தொழில்நுட்பம் என்ற பகுதியில் அறுவடை மற்றும் சேமிப்பு முறைகள் குறித்துத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், சந்தைப்படுத்துதல் தொடர்பான விவரங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள் போன்ற தகவல்களையும், இச்செயலி மூலம் அறிந்துகொள்ளலாம். தென்னை விவசாயம் தொடர்பாக அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கான பொதுவான பதில்களும் தரப்பட்டுள்ளன. 

வாழை வல்லுநர் அமைப்பு (Banana Expert System Tamil) 

தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பயிரிடப்படும் பயிர்களில் வாழையும் ஒன்று. வாழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்தச் செயலி பல தகவல்களை அளிக்கிறது. தங்களுடைய பகுதிக்கேற்ற வாழை ரகம், சீதோஷ்ண நிலைக்கேற்ற சாகுபடிக் காலங்கள் போன்றவை குறித்த தகவல்களை,  இச்செயலியின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், நிலத்தைத் தயார் செய்யும் முறை, நடவு செய்யும் முறை ஆகியவற்றைச் ‘சாகுபடி நுட்பங்கள்’ பகுதி மூலம் தெரிந்துகொள்ளலாம். வாழை இலை சாகுபடிக்குத் தேவையான தகவல்களும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. பாசன மேலாண்மைப் பகுதியில் சொட்டு நீர்ப்பாசனம் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, நோய் மேலாண்மை போன்ற தகவல்களும் உண்டு. 
மேலும், வாழை சாகுபடியில் பயன்படக்கூடிய பண்ணை இயந்திரங்களைப் பற்றிய தகவல்களும் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. வாழை அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டல், சந்தை வாய்ப்பு, ஏற்றுமதி வாய்ப்பு போன்ற தகவல்களும் உண்டு.

ராகி வல்லுநர் அமைப்பு  (Ragi Expert System Tamil) 

சிறுதானியங்களில் முக்கியப் பயிரான கேழ்வரகு மற்றும் அதைச் சாகுபடி செய்யும் விதம் குறித்த பல தகவல்களை இச்செயலி தருகிறது. பட்டத்துக்கேற்ற கேழ்வரகு ரகங்களைத் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. ‘சாகுபடி முறைகள்’ எனும் பகுதியில் விதைப்பு, பாசனம், நாற்றங்கால் மேலாண்மை, சாகுபடி நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு ஆகியவை குறித்து அறிந்துகொள்ளமுடியும். மேலும், கேழ்வரகுச் சாகுபடியில் பயன்படக்கூடிய கருவிகள், மதிப்புக்கூட்டலுக்குப் பயன்படக்கூடிய கருவிகள் போன்றவை பற்றிய முழுமையான தகவல்கள் இதில் தரப்பட்டுள்ளன. ‘அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்’ எனும் பகுதியில் மதிப்புக்கூட்டல் குறித்த தகவல்கள் வீடியோவுடன் தரப்பட்டுள்ளன. கேழ்வரகுச் சாகுபடியில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய வல்லுநர் எண்களும் இச்செயலியில் கொடுக்கப்பட்டுள்ளன.  

உழவன் செயலி (UZHAVAN)

விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மைத் துறை சார்பில் துவக்கப்பட்ட இணையதளம், 7 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் போன்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயன்படுத்தும் வகையில் ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம், வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். 

கரும்பு வல்லுநர் அமைப்பு (Sugarcane Expert System) 

கரும்பு விவசாயிகளுக்கு இச்செயலி பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆலோசகர், பயிர் மருத்துவர் மற்றும் தகவலகம் என்ற பகுதிகள் உள்ளன. தாவர அமைப்பு என்ற பகுதியில் கரும்பைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள், பயிரிடுவதற்கு ஏற்ற வானிலை, பருவத்துக்கேற்ற ரகங்கள் போன்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம். நாற்றங்கால் மேலாண்மை, பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, கருவிகள், அறுவடை பின் சார் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்தும் தகவல்கள் உள்ளன. கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்களின் தொடர்பு முகவரிகளும் தரப்பட்டுள்ளன. அவ்வப்போது எழும் பொதுவான சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் கேள்வி-பதில் பகுதியில் உள்ளன.