Published:Updated:

கிராமத்தோடு புலிகளை வேட்டையாடியவர், இப்போது புலிகளின் பாதுகாவலர்!

கிராமத்தோடு புலிகளை வேட்டையாடியவர், இப்போது புலிகளின் பாதுகாவலர்!
கிராமத்தோடு புலிகளை வேட்டையாடியவர், இப்போது புலிகளின் பாதுகாவலர்!

இதுவரை 70 புலிகளைப் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளார். அப்படி ஒரு நிகழ்வில் புலியைக்  காப்பாற்றும்போது அனில் மிஸ்ட்ரியின் கால் உடைந்துவிட்டது.

1990-ம் ஆண்டில் ஒரு நாள், அன்றும் வழக்கம்போல அனில் மிஸ்ட்ரியும் (Anil Mistry) அவரது நண்பர்களும் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குள் சென்றனர். காட்டுக்கு அருகிலேயேதான் அவர்களது வாழ்விடமும் உள்ளது. அனிலின் அப்பா, தாத்தா என இரண்டு, மூன்று தலைமுறைகளாக வேட்டையாடுவதைச் செய்து வருகின்றனர். அவர்கள் ஒரு பெண் மானைக் குறி வைத்துச் சுட்டனர். தனது மான் கன்றுடன் இரை தேடி வந்திருந்தது அந்தப் பெண் மான். பெண் மான் வலியில் துடித்தது, அருகில் அதன் கன்றின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது. அனிலின் கண் முன்னே அந்தப் பெண் மான் இறந்து கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்த்த பின்பு, பெண் மானின் வலியை உணர்ந்த பின்பு அனில் வேட்டையாடுவதையே நிறுத்தி விட்டார். அது மட்டுமில்லாமல் அந்தப் பகுதியில் வழக்கமாக நடந்து வந்த வேட்டையாடுதலையும் குறைப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார். அனில் மிஸ்ட்ரிக்குத் தற்போது 52 வயதாகிறது. சுந்தரவனக் காடுகளின் இயற்கைப் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார்.  தனது பழைய நினைவுகளைப் பற்றி பேசும்போது அவரது வாழ்க்கையை மாற்றிய இந்த வேட்டை சம்பவத்தை நினைவு கூறுகிறார். 

1950-களின் ஆரம்பத்தில் அனிலின் தாத்தா தனது ஆறு மகன்களோடு வங்காளதேசத்திலிருந்து மேற்கு வங்காளத்துக்குக் குடிபெயர்ந்தார். அங்குமிங்கும் சுற்றித்திரிந்து கடைசியாக சுந்தவனக் காடு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவில்(Bali Island) குடியேறினர். அவர்கள் அங்கு வரும்போது அது முழுக்க முழுக்க காட்டுப்பகுதியாகவே இருந்தது. மரங்களை வெட்டி நிலத்தைச் சீர் செய்து தங்கள் வாழ்விடத்தை உருவாக்கிக் கொண்டனர். இப்படியாக அங்கு ஒரு கிராமம் உருவாகியது. அங்கிருந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மான், புலி, பறவைகள், கரடிகள் என காட்டுயிர்களை வேட்டையாடத் தொடங்கினர். அனில் மிஸ்ட்ரியும் வளரும்போது வேட்டையாடுதலைக் கற்றுக் கொள்கிறார். தனது சிறுபருவ நாள்களைப் பற்றிக் கூறும்போது, ``எனது குழந்தைப் பருவத்திலிருந்தே எங்கள் பகுதியில் வேட்டையாடுவதுப் பற்றியும் சட்டத்துக்குப் புறம்பாக மரங்கள் வெட்டுவது பற்றியும் எனக்குத் தெரியும். எங்கள் கிராமத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவே இல்லை. வெள்ளம் வேறு எங்கள் கிராமத்தை நிலைகுலையச் செய்யும். இதனால் இயல்பாகவே விரைவாக பணம் ஈட்டுவதற்காக வேட்டையாடுவதையும், மரம் வெட்டுவதையும் செய்ய ஆரம்பித்தனர்" என்கிறார். 

அனில் மிஸ்ட்ரியின் மனதை மாற்றிய மான் வேட்டைச் சம்பவத்துக்குப் பிறகு அவர் வனத்துறை அதிகாரிகளைச் சந்தித்து நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். அங்கிருந்த மூத்த வனத்துறை அதிகாரியின் ஆலோசனையின்படி வேட்டையாடுதலுக்கு எதிராக ஒரு சமூகத்தை அல்லது நிறுவனத்தை வளர்த்தெடுப்பதற்காகப் பாலி இயற்கை மற்றும் பாதுகாப்புச் சங்கம் (Bali Nature and Conservation Society (BNCS) என்ற அமைப்பை ஆரம்பிக்கிறார். வனத்துறையும் இந்த அமைப்புக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறது. அனில் கூறியதுபடி, " வன உயிரினங்களையும் இயற்கையையும் மக்களையும் பாதுகாப்பதுதான் எங்களது குறிக்கோள். வேட்டையாடுவதற்குப் பதிலாக மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்குவது. அதன் மூலம் விலங்குகள் வேட்டையைக் குறைப்பது என முயற்சிகள் மேற்கொண்டோம். இதற்காக வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்தும் செயல்பட்டோம்" என்றார். இந்த செயல்பாடுகளின் பலனாகக் கடந்த 15 - 20 ஆண்டுகளாக பாலித்தீவுப் பகுதியில் வேட்டையாடுதல் நிகழவில்லை. இவற்றை எல்லாம்விட  இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சங்கத்தை (Wildlife Protection Society of India) நிறுவியவரும், இயற்கை பாதுகாவலருமான பெலிண்டா ரைட்டைச் (Belinda Wright) சந்தித்த பின் அனிலின் செயல்பாடுகளுக்கு இன்னும் சீரிய வடிவம் கிடைத்தது. வன வளங்கள் மீதான மனிதர்கள் அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் வேட்டையாடுதலை முற்றிலுமாக ஒழிப்பதற்காகவும் தொடர்ந்து இயங்குபவர் பெலிண்டா ரைட். இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சங்கத்தின் சார்பாக சுந்தரவனக் காடுகளின் கள அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வேட்டையாடுதலைத் தடுப்பது உள்ளூர் மக்களுக்கு மாற்று வாழ்வாதார வழிகளைக் கண்டறிந்து வழங்குவது என செயல்பட ஆரம்பித்தார். 

உள்ளூர் மக்களில் இருந்து வந்ததால் அனில் மிஸ்ட்ரி அவர்களைக் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக அவர்களது வாழ்வாதாரத் தேவைகளைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார். மேலும், உள்ளூர் மக்கள் காடுகளுக்குள் செல்வது குறித்து அனில் மிஸ்ட்ரி கூறும்போது, ``உள்ளூர்க்காரர்கள் அவர்களின் அன்றாடத் தேவைக்காக காடுகளுக்குள் செல்கிறார்கள். மீன் பிடித்தல், வேட்டையாடுதல், தேன் எடுத்தல் போன்ற வேலைகளில்தான் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். தனது இயல்பான வாழ்விடத்தில் உணவைத் தேடி வரும் புலிகளைச்  சில வேளைகளில் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் மனித - விலங்கு மோதல் என்பது தவிர்க்க முடியாதது. காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க வேண்டுமென்றால் இதுபோன்ற மனித - விலங்கு மோதல்களை முடிந்தவரைக் குறைக்க வேண்டும்.  அதனால்தான், உள்ளூர் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை வழங்குவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறோம். அவர்கள் தொடர்ந்து காட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவாறு அந்த வாழ்வாதாரங்களை அமைக்க வேண்டும் " என்கிறார். நிலையான விவசாய நடைமுறைகள், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என மாற்று வாழ்வாதாரத் தேவைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான கோழி, வாத்து, மீன் வளர்ப்பு போன்றவையும் அம்மக்களுக்கு அளிக்கப்பட்டன. இதன் மூலம் காடுகளுக்குள் சென்று ஈட்டிய வருமானத்தைவிட அதிக வருமானத்தைப் பெற்றனர். அதிக ஆபத்தும் இல்லை. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் மட்டுமில்லாமல் வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலும் (Indian Council for Agricultural Research) இதனுடன் இணைந்து செயல்பட்டது. 

இந்த முயற்சிகளின் முக்கிய நோக்கமே மனித - விலங்கு மோதலைத் தவிர்ப்பதும் வேட்டையாடுதலைக் குறைப்பதும்தான். முன்பெல்லாம் ஒவ்வொரு மாதமும் நான்கு அல்லது ஐந்து புலிகள் மக்கள் குடியேற்றப் பகுதிக்குள் வந்துவிடுவது வாடிக்கையாக நிகழ்வது. அனில் மிஸ்ட்ரி புலிகளைப் பிடித்து காட்டுக்குள் விடும் குழுவோடு இணைந்து செயல்பட்டுள்ளார். இதுவரை 70 புலிகளைப் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளார். அப்படி ஒரு நிகழ்வில் புலியைக் காப்பாற்றும்போது அனில் மிஸ்ட்ரியின் கால் உடைந்துவிட்டது. மேலும், புலியைக் குற்றவாளியாக சித்திரிப்பதற்கு எதிராகக் குரலெழுப்பி வருகிறார். மனித - புலி மோதல் குறித்து கூறும்போது, ``காடுகளில் பலர் புலிகளால் தாக்கப்படுகின்றனர். ஆனால், புலிகள் கிராமங்களுக்குள் நுழைந்து மனிதர்களைக் கொல்வதில்லை. நாங்கள்தான் அவற்றின் இடத்தை ஆக்கிரமித்துள்ளோம். எங்களுடைய முன்னோர்கள் இங்கு வந்து, காடுகளை வெட்டி, விலங்குகளைக் கொன்று குடியேற்றங்களைத் தோற்றுவித்தனர். நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம். இப்போது புலிகள் தீவுத் தீவாக நீந்தி தனது வாழிடத்தை தேடுகிறது. இது அவற்றின் தவறு அல்ல, நம்முடைய தவறு" என்கிறார். அதேபோன்று மனித - புலி மோதலில் அவர்களாகவே காடுகளுக்குள் சென்று புலியால் தாக்கப்படுவதை இந்த வகைக்குள் எடுத்துக்கொள்ள முடியாது எனவும் கூறுகிறார். சுமார் 86 வங்காளப் புலிகள் அங்கிருப்பதாகத் தெரிகிறது. நீந்தக்கூடிய இந்தப் புலிகள் மற்றவற்றிலிருந்து தனித்துவமானவை. ஏனென்றால் நீந்தி நீந்தி ஒவ்வொரு தீவாக மாறி வேட்டையாடுவதற்கு ஏற்ப ஒல்லியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கக்கூடியவை. தனித்துவமான நிறமுடையவை. பெரும்பாலும் நீரில் இருப்பதால் சுத்தமாகவே காணப்படும் எனப் புலிகள் குறித்த பல்வேறுத் தகவல்களைக் கூறுகிறார் அனில் மிஸ்ட்ரி.

வாழ்நாளின் பெரும்பகுதியை காட்டுயிர் பாதுகாப்புக்குச் செலவிடும் அதே வேளையில் இயற்கை சமநிலை குறித்தும் நிறைய பேசுகிறார் அனில் மிஸ்ட்ரி. அதன் மூலமே உலகை இன்னும் உயிர்ப்பாய் வைத்துக்கொள்ள முடியும் என ஆணித்தரமாக நம்புகிறார். 

அடுத்த கட்டுரைக்கு