Published:Updated:

'குடிக்க நீர் இல்லை; பிடிக்க மீனும் இல்லை!' ஒரு தீவையே உருக்குலைத்த எண்ணெய்க்கசிவு

"நாங்கள் எங்கள் கடலையும் பவளப்பாறைகளையும் மீன் பிடிப்பதற்காகவும் கிளிஞ்சில் சிப்பிகளுக்காவும் பயன்படுத்த முடியவில்லை. எங்கள் உணவை இழந்துவிட்டோம். 150 மைல்களுக்கு அப்பால் உள்ள தலைநகர் ஹொனியராவில்(Honiara) இருந்து விநியோகிக்கப்படும் உணவை நம்பியே உள்ளோம். எதிர்வரும் காலத்திற்கும் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்ட ஒன்றாக மாறிவிடலாம். இந்த எண்ணெய்க் கசிவு எங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது" என்கிறார் அந்த தீவுவாசி.

'குடிக்க நீர் இல்லை; பிடிக்க மீனும் இல்லை!' ஒரு தீவையே உருக்குலைத்த எண்ணெய்க்கசிவு
'குடிக்க நீர் இல்லை; பிடிக்க மீனும் இல்லை!' ஒரு தீவையே உருக்குலைத்த எண்ணெய்க்கசிவு

ழக்கமான வார இறுதி நாட்களில் கங்கவா விரிகுடா (Kangava Bay) கடற்கரையானது குழந்தைகளின் விளையாட்டுச் சத்தங்களாலும் கிளிஞ்சில் சிப்பிகளைச் சேகரிக்கும் உள்ளூர்க்காரர்களின் வியர்வைகளாலும் உயிர்ப்பாய் இருக்கும். பவளப்பாறைகளின் இடையே அலைந்து திரியும் மீன்களைப் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்பவர்களும் இதில் அடக்கம். ரெனெல் தீவின் (Rennell Island) கடற்கரையோர மக்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கையும் அந்த கடலைச் சார்ந்துதான் இருக்கிறது. ஆனால் கடந்த வார இறுதி நாட்கள் இவ்வளவு உயிர்ப்பு நிறைந்ததாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த கடற்கரையே இறந்துபோய் விட்டது. உலக வரைபடத்தில் பார்த்தால் தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு புள்ளி போலத் தெரியும் ரெனெல் தீவு. ஆஸ்திரேலியாவுக்குக் கொஞ்சம் மேலே பப்புவா நியூகினியா தீவுக்கூட்டங்களுக்கு அருகில் அமைந்துள்ள சாலமன் தீவுகளின் (Solomon Islands) தெற்கு முனையில் அமைந்துள்ளது ரெனெல் தீவு. கங்கவா விரிகுடாவின் கரைப்பகுதி கடலில் இயல்பாய் காணப்படும் பேரேட் மீன்களை (parrotfish) இப்போது அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்த கடற்கரை மணல்களில் ஓடி விளையாடி அங்கிருக்கும் நீருற்றுகளில் தெளிவான தண்ணீரை அள்ளிக் குடிப்பதெல்லாம் கடந்த நான்கு வாரங்களாக நினைவில் மட்டுமே இருக்கிறது. இவை நெடுங்காலத்திற்கு நினைவாகவே இருக்கலாம் எனப் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் மனிதர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்துதான்.  

மிகச்சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு பிப்ரவரி மாதம் 4-ம் தேதி இரவு எம்வி சாலமன் டிரேடர் (MV Solomon Trader) எனும் கப்பல் ரெனெல் தீவுக்கு அருகில் உள்ள சுரங்கத்தில் அலுமினியத்தின் முக்கியத் தாதுப்பொருளான பாக்ஸைட்டை கப்பலில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதே ஒரு மாதத்திற்கு முன்பாக ஆஸ்திரேலியாவையும் நியூசிலாந்தையும் தாக்கிய ஒமா புயல் (cyclone Oma)  பற்றிய எச்சரிக்கைகளை கப்பலின் ஆட்கள் சரியாக கவனிக்கவில்லை. பிப்ரவரி 5-ம் தேதி முன் இரவில் எம்வி சாலமன் டிரேடர் கப்பல் கரை தட்டி நின்றது. இத்தனைக்கும் கப்பலானது நங்கூரமிட்டு நிற்கப்பட்டிருந்தது. கப்பலில் இருந்து எண்ணெய் கடலில் கொட்ட ஆரம்பித்தது. பவளப்பாறைகளுக்கு அருகில்தான் கப்பலானது கரை தட்டி நின்றுள்ளது. ரெனெல் தீவின் கிழக்குப் பகுதியானது பவளப்பாறைகள் நிறைந்த பகுதியாகும். உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டு அமைந்துள்ள பகுதி இதுதான். பவளப்பாறைகளின் காரணமாக இந்த கடற்பகுதியின் உயிர்வளத் தன்மையானது அதிகம். இதனால் யுனெஸ்கோ அமைப்பானது கிழக்கு ரெனெல் தீவுப் பகுதியை உலக பாரம்பாரிய இடமாக அங்கீகரித்துள்ளது. அதிலும் சட்டத்திற்கு புறம்பான மரம் வெட்டுவது மற்றும் அதிகப்படியான மீன் பிடித்தல் காரணமாக,  கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இதனை ஆபத்து பட்டியலில் வைத்துள்ளது யுனெஸ்கோ. 30 மில்லியன் டாலர்கள் அளவிற்கான சரக்கு எம்வி சாலமன் டிரேடர் கப்பலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை 80 டன் அளவிற்கான எண்ணெய், கப்பலிலிருந்து கடலுக்குள் கசிந்துள்ளது. மேலும்  225 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பலில் 700 டன்களுக்கும் அதிகமான எண்ணெய் இன்னும் மீதமிருப்பதாகவும் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிகமான அளவு பாக்ஸைட்டும் ஏற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இயற்கைச் சீற்றத்தின் காரணமாக மட்டும் இந்த விபத்து நிகழவில்லை என சாலமன் தீவின் அதிகாரிகள் கூறுகின்றனர். 

சாலமன் தீவுகளின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் (Solomon Islands Maritime Safety administration acting director) ஜோனா மிட்டோ (Jonah Mitau) விபத்து பற்றி கூறுகையில், "அவர்கள் சர்வதேச பாதுகாப்பு மேலாண்மைக் குறியீடுகளை மீறியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனெனில் கப்பலில் வேலை பார்த்த ஆட்களின் எண்ணிக்கை போதுமான அளவைவிடக் குறைவாகவே இருந்தது. அதனால் அவர்கள் இரவு நேரத்தில் புயலின் அறிகுறிகளை கவனிக்கத் தவறிவிட்டனர். அவர்களின் அலட்சியத்தால்தான் இது நிகழ்ந்துள்ளது" என்றார். மேலும் முதற்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது எனவும் மேலும் கப்பலின் தலைமை அதிகாரி, தலைமை பொறியாளர் மற்றும் இரண்டாவது பொறியியலாளர் ஆகியோரை அடுத்தகட்ட விசாரணைக்காக நாட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் பிப்ரவரி 13-ம் தேதி விசாரணைக்காகக் கப்பலை விட்டு வெளியேறிய கப்பல் குழுவின் பெரும்பாலானோர் தற்போது நாட்டிலேயே இல்லையெனக் கூறுகின்றனர். மேலும் பிப்ரவரி 19-ம் தேதி வரை புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணிகளை முழுவீச்சில் செய்யமுடியவில்லை. அதன் பிறகும் கப்பல் நிர்வாகம் மெதுவாகச் செயல்பட்டதால் பொறுமையிழந்த சாலமன் தீவுகள் அரசு ஆஸ்திரேலியாவின் உதவியை நாடியுள்ளது. எம்வி சாலமன் டிரேடர் கப்பலின் உரிமையாளர் ஹாங்காங்கைச் சேர்ந்த சவுத் எக்ஸ்பிரஸ் லிமிடெட் (South Express Ltd) நிறுவனம். இந்த பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்கும் காப்பீடு பணத்தைப் பெறுவதற்குமே செயல்படுகிறது என குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.

எண்ணெய்க்கசிவு இன்னும் கிழக்கு ரெனெல் தீவுப்பகுதியை எட்டவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே கங்கவா விரிகுடாவில் மீன்கள் செத்து மிதக்கின்றன. அலைகள் கறுப்பு நிறத்தில் கரையை மோதுகின்றன. கடல் முழுக்க கச்சா எண்ணெய்ப் போர்வை போற்றியது போலக் கரிய நிறத்தில் காணப்படுகிறது. கடலோர கிராமங்களான மாத்தங்கா (Matanga), வங்கு (Vangu), லாவாங்கு (Lavangu). மற்றும் கங்கவா (Kangava) போன்றவை கச்சா எண்ணெய்க் கசிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. லாவாங்கு கிராமத்தில் வசிக்கும் பவுல் நெய்ல் (Paul Neil) கூறும்போது, "குழந்தைகளைக் கடலில் நீந்தக்கூடாது என சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்கள் கடலையும் பவளப்பாறைகளையும் மீன் பிடிப்பதற்காகவும் கிளிஞ்சில் சிப்பிகளுக்காவும் பயன்படுத்த முடியவில்லை. எங்கள் உணவை இழந்துவிட்டோம். 150 மைல்களுக்கு அப்பால் உள்ள தலைநகர் ஹொனியராவில் (Honiara) இருந்து விநியோகிக்கப்படும் உணவை நம்பியே உள்ளோம். எதிர்வரும் காலத்திற்கும் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்ட ஒன்றாக மாறிவிடலாம். இந்த எண்ணெய்க் கசிவு எங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது" என்கிறார்.  கங்கவா விரிகுடாவிற்கு அருகில் உள்ளவர்கள் குடிப்பதற்கும் மற்றவற்றிற்கும் மழைநீரைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். எண்ணெய்க் கசிவிற்குப் பின் கடற்கரையோரங்களில் இருந்த நீருற்றுகள் எல்லாம் அசுத்தமடைந்து விட்டன. எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் நாற்றத்தினால் பலர் தூங்க முடியாமல் உள்ளனர். 

ரெனெல் தீவின் மக்களுக்கு இயற்கைப் பேரழிவும் சீற்றங்களும் பழக்கமான ஒன்றுதான். புயல்களும் வெள்ளத்தாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் கடந்த மாதம் நிகழ்ந்தது மனிதர்களின் அலட்சியத்தின் பேரழிவு. தற்போது வரை எண்ணெய்ப் படலமானது ஆறு கிலோமீட்டர் வரை பரந்துவிரிந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு மையம் மேற்கொண்ட வான்வழி கண்காணிப்பின் மூலம் எண்ணெய்க் கசிவு நிறுத்துவதில் ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது என கூறியுள்ளது. கடல்சார் நிபுணர்களின் கருத்துப்படி, கப்பலின் சரக்கு பெட்டகங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஏனென்றால் அலைகள் வரும் காலங்கள் அவற்றை உடைத்துவிட வாய்ப்புகள் உள்ளன என்கிறார். அவ்வாறு உடைந்தால் அது இதைவிட மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவாக இருக்கும் என்கின்றனர். மேலும்  பின்ட்டன் சுரங்க சாலமன் தீவுகள் லிமிடெட் ((Bintan Mining Solomon Islands Limited)) நிறுவனம் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுப்பதை நிறுத்தவில்லை. அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் கருத்துப்படி, தாதுவை வெட்டியெடுப்பதும் ஏற்றுவதும் தொடர்ந்து நிகழ்கிறது. இவையும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவைதான். ஆனால் சாலமன் தீவுகள் அரசு நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தச் சொல்லியுள்ளது. இந்நிலையில் கப்பலின் உரிமையாளர் கடந்த புதன்கிழமை மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் 5 மில்லியன் டாலர்களை எண்ணெய்க் கசவைச் சுத்தப்படுத்த அளிப்பதாகக் கூறியுள்ளார்.

சாலமன் தீவுகள் வரலாற்றில் இதுதான் மிகப்பெரிய பேரழிவு. எண்ணெய்க் கசிவைச் சுத்தப்படுத்த பல மாதங்கள் ஆகும். ஆனால் அந்த எண்ணெய்க் கசிவு கிழக்கு ரெனெல் தீவின் பவளப்பாறையை அடைய வெகுநாட்கள் இல்லை. எனவே அதனைத் தடுத்து நிறுத்தவும் கடற்கரையோர மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் விரைந்து செயல்பட வேண்டும். எண்ணெய்க் கசிவு என்பது உலகம் முழுக்கவே தீர்க்க முடியாத பிரச்னையாகவே உள்ளது. எண்ணெய்க் கசிவை அகற்றுவது என்பது எண்ணெய் எடுப்பதற்காக நிகழும் சண்டைகளைவிட பெரியது. ஆனால் அதனைப் பல அரசுகளும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் அமைதியாக உருவெடுத்து வரும் மாபெரும் சுற்றுச்சுழல் பேரழிவு.