Published:Updated:

நகரின் நடுவே 2 ஏக்கர் காடு; அரசு விருது... `பலே' கேரள விவசாயி!

அவரது நிலத்திற்கு எத்தனையோ பணக்காரர்கள் பணத்தைக் கொடுத்து நிலம் வேண்டும் என்று கேட்டு வந்தாலும், காடு அழிவதை நான் விரும்பவில்லை, அதனால் நிலத்தை உங்களுக்குத் தர முடியாது என்பதுதான் அவரது பதிலாக இருக்கிறது. 

நகரின் நடுவே 2 ஏக்கர் காடு; அரசு விருது... `பலே' கேரள விவசாயி!
நகரின் நடுவே 2 ஏக்கர் காடு; அரசு விருது... `பலே' கேரள விவசாயி!

சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்னர், போர்ச்சுகீசியர்கள் கோவாவிற்கு வந்தபோது அதிகமான மக்களை மதம் மாற்றியபோது, கோவாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காடு வழியாக தப்பிப் பிழைத்து கேரளாவின் கடற்கரையோரப் பகுதிகளில் குடியேறினர். அப்போது கொச்சி மகாராஜா தன்னிடம் தஞ்சமடைந்த கோவா மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவர்களில் புருஷோத்தமா காமத் (Purushothama Kamath) என்பவரது முன்னோர்களும் அடங்கியிருந்தனர். புருஷோத்தமா குழந்தையாக இருந்தபோது அவரது தாய் இந்த நிகழ்வுகளை அவருக்குச் சொல்லி வளர்த்திருக்கிறார். 

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அவரது தந்தை எர்ணாகுளத்தில் ஒரு தங்கும் இடத்தை அரசிடமிருந்து வாங்கினார். அதைத் தன் குடும்பம் வசிக்கும் இடமாக மாற்றியிருக்கிறார். இப்போது அங்கேதான் புருஷோத்தமா வசித்து வருகிறார். அந்த 130 வயதான வீட்டிற்குத் தனியாக ஒரு வரலாறும் இருக்கிறது. அதை அங்கு வருவோர் யாரும் கவனிப்பதில்லை. பண்டைய ஜன்னல்கள், சிக்கலான ஓடுகள் எனப் பார்ப்பதற்கு அரிய காட்சிப்பொருள்களைக் கொண்டுள்ளது. 

கொச்சி நகரத்தில் அமைந்துள்ளது அலுங்கல் பண்ணை. அப்பண்ணை முழுவதும் 2 ஏக்கர் காடு அமைத்துப் பாதுகாத்து வருகிறார், புருஷோத்தமா. இதற்குப் பின்னால் இருப்பது அவருக்கு மரங்களின் மீது இருக்கும் காதலும், அவரது உழைப்பும் மட்டுமே. 2000-க்கும் அதிகமான அரிய வகை மருத்துவத் தாவரங்கள், 400 விதமான பழ வகைகள், பல்வேறு மலர்கள், காய்கறிகள், மூலிகைகள், மரங்கள் என அனைத்தையும் ஒன்றாக வளர்த்து அசத்தி வருகிறார். அருகிலுள்ள மெட்ரோ நிலையம் மற்றும் வைட்டிலா மொபைலிட்டி ஹப் ஆகியவற்றிலிருந்து மீதமாகும் கற்களை இங்கே கொட்டுவார்கள். வழக்கம் போல இவரும் அதை அப்புறப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அதனால் எப்போதும் பசுமையான தோட்டமாக விளங்கி, அதிகமான பட்டாம்பூச்சிகள், பல அரிய பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. அவரது நிலத்திற்கு எத்தனையோ பணக்காரர்கள் பணத்தைக் கொடுத்து நிலம் வேண்டும் என்று கேட்டு வந்தாலும், காடு அழிவதை நான் விரும்பவில்லை, அதனால் நிலத்தை உங்களுக்குத் தர முடியாது என்பதுதான் அவரது பதிலாக இருக்கிறது. 

பணக்காரர்கள் தோட்டத்தில் உள்ள மரங்களையும், செடிகளையும் பற்றி பேச்சை ஆரம்பிப்பார்கள். அதன் பின்னர்தான் கொஞ்சம் பேச்சு அதிகமாகி நிலத்தைக் கொடுக்க முடியுமா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதுபோக அலைபேசி கோபுரங்களை அமைக்கவும் நிலத்தைக் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதற்காகப் பல லட்சம் ரூபாய்களையும் கொடுக்க முன்வருகிறார்கள். ஆனால், கடைசி வரைக்கும் புருஷோத்தமா இறங்கி வரவே இல்லை. அவரது மகன் ஆனந்தும் தற்போது 2 ஏக்கர் காட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் தந்தைக்கு இணையாக இறங்கி இருக்கிறார்.  

புருஷோத்தமா 1970-களின் பிற்பகுதியில் வங்கி அதிகாரியாக தன் பணியைத் தொடங்குகிறார். அவரது வேலையின் காரணமாக அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணிக்க நேர்கிறது. வழியில் செல்லும்போது, அரிய மருத்துவத் தாவரங்களைச் சேகரிக்கத் தொடங்குகிறார். 1984-ம் ஆண்டு அவரது அம்மாவின் உடல்நிலை மோசமானதால் வேலையை விட்டுவிட்டு அம்மாவை கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார். அப்போது அவரது நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். முதல்முதலாக 20 சென்ட் நிலத்தில் நெல் மற்றும் தென்னை மரங்களை நடவு செய்கிறார். அதே நேரத்தில் தீவிரமாக மருத்துவத் தாவரங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்; கூடவே அவற்றை உற்பத்தியும் செய்கிறார். 1996-ம் ஆண்டு இரசாயனப் பயன்பாடுகளை கைவிட்டு, நிலத்தில் காட்டை உருவாக்கத் திட்டமிடுகிறார். அதன்படி பெரிய மர வகைகளைத் தன் நிலத்தின் எல்லைப் பகுதியில் நடுகிறார். அவற்றுக்குள்ளே சிறிய தாவரங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வளர்க்க ஆரம்பிக்கிறார். 

இவரது தோட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள அரிதான வகையைச் சேர்ந்த பலா மரங்கள், சப்போட்டா, வாழை, ஆப்பிள்கள், வெண்ணெய், எலுமிச்சை, லிச்சி, மல்பெரி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழ வகை மரங்களையும், முட்டைக்கோஸ், கேரட், எலுமிச்சை, இஞ்சி, மஞ்சள், மிளகாய், கொத்தமல்லி, புதினா, தக்காளி போன்ற காய்கறி வகைகளையும் வளர்த்து வருகிறார். இதுபோக மூலிகை தாவரங்களையும் வளர்த்து வருகிறார். பண்ணையின் ஒவ்வொரு மரத்திலும், அறிவியல் மற்றும் மலையாள மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பல மாணவர்களும், இயற்கை ஆர்வலர்களும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். 

பண்ணைக்குள் முழுவதும் சொட்டுநீர்ப் பாசனப் பயன்பாடுதான். இதனால் பெருமளவு தண்ணீரை மிச்சப்படுத்துகிறார்கள். 6 சென்ட் நிலத்தில் பண்ணைக்குட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குட்டை கோடையிலும் வறண்டுபோகாமல் நீரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பண்ணைக்குள் இரண்டு காசர்கோடு பசுக்கள், கோழிகள், காடைகள் போன்றவை வளர்க்கப்பட்டு வருகிறது. கோழி மற்றும் காடைகளின் முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பசுக்களிலிருந்து சாணம் உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காய்ந்த இலைகள், சமையலறைக் கழிவுகள், மாட்டுச் சாணம், மாட்டுச் சிறுநீர், தயிர், வெல்லம் ஆகியவை கலந்து பயிருக்குத் தேவையான கரிம உரம் தயாரிக்கப்படுகிறது. இவரது தோட்டத்தில் 84 தேங்காய் மரங்கள், வாழை மரங்கள், உற்பத்தி செய்யப்பட்ட தாவரங்கள், வாடகைக்கு விட்டிருக்கும் நிலம் மூலம் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார். புருஷோத்தமா போலவே அவரது மகன் ஆனந்தும் 16 ஆண்டுகள் வங்கி மேலாளராகப் பணியாற்றிவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வேலையைத் துறந்து தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 35 வருட உழைப்பின் மூலம் உருவான காட்டிற்காக புருஷோத்தமாவிற்கு 2013-ம் ஆண்டு கேரள வனத்துறை சார்பில் `கேரள பல்லுயிர் விருது' வழங்கப்பட்டுள்ளது.