Published:Updated:

அமெரிக்கா உதவியுடன் இந்தியாவுக்கு வரும் 6 அணுமின் நிலையங்கள்!

கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. அந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியா பல நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. கடந்த 2016-ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் ஆறு அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை மேலும் உறுதி செய்துள்ளது இந்தப் பேச்சுவார்த்தை.

அமெரிக்கா உதவியுடன் இந்தியாவுக்கு வரும் 6 அணுமின் நிலையங்கள்!
அமெரிக்கா உதவியுடன் இந்தியாவுக்கு வரும் 6 அணுமின் நிலையங்கள்!

இந்தியாவில் ஆறு அணுமின் நிலையங்களை அமைக்கவுள்ளது அமெரிக்கா. இதுதொடர்பாக வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விஜய் கோகலே அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான அமெரிக்க செயலாளர் ஆண்ட்ரியா தாம்சனை (Andrea Thompson) விஜய் கோகலே சந்தித்துப் பேசினார். இரண்டு நாள்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, அணுசக்தி துறை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை முடிவில் புதன்கிழமை இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது. கூட்டறிக்கையின்படி ``பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு பலப்படுத்தும். மேலும், அமெரிக்கா தரப்பில் ஆறு அணுமின் நிலையங்கள் இந்தியாவில் அமைக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் இடங்கள் குறித்த தகவல்கள் கூட்டறிக்கையில் இடம்பெறவில்லை. மேலும், அணு மூலப்பொருள்கள் விநியோகக் குழுவில் இந்தியாவை இணைக்க ஆதரவு அளிப்போம் என மீண்டும் உறுதி செய்துள்ளது அமெரிக்கா. 

கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. அந்த ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியா பல நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. கடந்த 2016-ம் ஆண்டு   அந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் ஆறு அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை மேலும் உறுதி செய்துள்ளது இந்தப் பேச்சுவார்த்தை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவும் ரஷ்யாவும் மேலும் ஆறு அணுமின் நிலையங்கள் அமைப்பதற்குக் கையெழுத்திட்டுள்ளன. 

ஏற்கெனவே இந்தியாவில் சென்னை கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட 7 இடங்களில் அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கூடங்குளம் அணுமின் நிலையம் முழுமையாக உற்பத்தியைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.